மதி கொண்டான்
வரவேற்க மனிதர்கள் அவசியமில்லை என்பதை உணர்த்த, சென்னை அன்புடன் வரவேற்றது என்னை. கடவுச் சீட்டு அதிகாரிகள் பலரை கடந்த பின்னே விமான நிலையம் என்னை வழியனுப்பியது.
எதிர்ப்பார்ப்புகள் இன்றி வரவேற்ற இச்சென்னைக்கு, என் மதியையும், மதியின் அன்பையும் பரிசாகக் கொடுத்துள்ளேன். இப்பரிசின் மதிப்பினை என் க்ளோனிங்கால் கூட உணர முடியாது, காரணம் இம்மதிப்பின் அளவை என்றும் நிர்ணயம் செய்ததில்லை. அவன் மதி கொண்டான், பெயரில் மட்டும்.!.!. ஊமைக்கும் உவமைச் சொல்லத் தூண்டும், அவன் இதழ் கண்டு. காலை வேலை உணவாய், ஊட்டச்சத்தையூட்ட அச்செவ்விதழை உண்டு பசியாறியுள்ளேன், வெகு நாட்களுக்கு பின் அறிந்தேன், முத்தம் கலோரிகளை குறைக்கத்தான் செய்யுமென்று.
அதிகாரப் பூர்வமாக கடந்த 27 ஆண்டுகளையும் புறம் தள்ளி, அறிவுப்பூர்வமாக அவனுடன் கடந்த அவ்விரண்டு ஆண்டுகளை மட்டும இச்சிறுமூளை புகட்டி வைத்துள்ளதை நித்தம் உணர்கிறேன். என் நினைவுகளை மதில் கொண்டு முடக்க வேண்டும்!!!, ஆணையும் பெண்ணையும் இன்றி வானையும் மண்ணையும் அவன் பெயரை உரைக்க செய்த பின்னும், சென்னையை கண்ட மயக்கத்தில் தனக்கேச் சொல்ல முற்பட்டது.
என்னை பின் தொடர்வோரைத் தவிர்த்து இவனை பின் தொடர்ந்ததன் காரணம்…! பிறர் குறை கூறும் பெண்ணின் ஆடைகளை, அவன் ஒரு போதும் குறை கூறியதில்லை. பெண்ணின் கருவிழி அவன் மேல் பட்டால், நான் பதறிப்போவேன், அவனின் பார்வை ஒரு போதும் சிதறியதில்லை.
அவன் மனம் விரும்பும் உடை மாற்றினேன், பிற ஆண்களின் முறை மாற்றினேன், வரும் வழிப் பார்த்து என் திசை மாற்றினேன், என் முகம் காண கண் இமை தீட்டினேன், பயனில்லை… வங்கியிலும் செல்லாத 50 நயா பைசாவை, கைப் பேசியின் வைப்பு தொகையாக கொண்ட அவனிடம் அழைப்பு மணியை எதிர்ப்பார்ப்பது தவறெனக் கருதி, அழையா மணியை நான் எழுப்புவேன். என் காதலை குறுந்தகவலில்ச் சொல்ல, அவன் ஒருத்தகவலும் சொல்லவில்லை. பதில் கேட்டு வரிசையில் நிற்க, என் கால் சுகம் காண அவன் அருகில் அமரச் செய்தான். வாரம் 5 நாள் போதுமென்று விடுமுறைகளை புறக்கணித்து படையெடுத்த நாட்கள் அவை.
எறும்பு ஊற கல்லும் கரையும் என்பதை உணர்த்தும் வகையில், மின் தூக்கியில் அழைத்துச் சென்று, வான் பிளந்து வண்ணம் தெளிக்கும் வேளையில் நெற்றி முத்தம் இட்டான், அவனையும் வரவேற்றத்துக் காதல்.
ஒரு ஜோடி வருடத்தின் பின் இவ்விஜயத்தின் அவசரம், முதல் மகன் மதியைக் காணவே. நேற்று முக நூலின் முதல் பக்கத்தில் மார்க்கின் பணியாளர்கள், இவரை நீங்கள் அறிந்திருக்க கூடும் என நிழல் படம் பொருத்தி நீட்ட, நொடியில் விரல்கள் பத்தும் என் அனுமதி இன்றி உரையாடலை மேற்கொள்ள பரிதவித்தது. காண வேண்டி கண் வாட, விரல்கள் பத்தும் விசைப்பலகையின் மேல் ஓட, நொடி முள்ளும் நகரும் முன் விழி நீர் வழிய விடை கண்டேன், கடல்நீர் காணலாம் வாவென.
செவ்வானமும் நடுக்கடல் இணைந்து இயக்கும் திரை காண வந்த மக்களின் நடுவே நின்று நுகர்ந்து உணர்தேன், கடல்வாழ் இனங்களும் பூச ஆசை கொள்ளும் எம் சென்னை வாசியின் வாசனைத் தெளிப்புக்களை. பட்டாணிச் சுண்டல் ஈக்களை மட்டும் கவர, மக்களோ வட இந்தியனை மொய்க்கும் காட்சி இடையே, அவன் பிழையற்ற முகம் கண்டு என் நிலை பிளவுற்றது.
730 நாட்கள் கடுங்காவல் தண்டனைக்கு பின் விடுதலையுற்றது மௌனம். சந்தித்த கண் நான்கும், அந்நான்கு வருட காட்சிகளை மிக வேகமா திரையிட்டு, சிறந்த நினைவலைகளை மீட்க… விழி நீர் பெருக்கில் கடல் மட்டம் கூடக் கண்டான். ஆழிப் பேரலையை தடுக்க எண்ணி, தன் கரம் நீட்டி நுனி விறல் கொண்டு துடைக்க, பலர் பதற கதறியழுதேன். வேடிக்கைப் பார்ப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தோர் என் முன் ஏதோ பிதற்ற, மூதாட்டி ஒருத்தி “ஏம்மா தனியா அழுதுட்டு இருக்க என்ன ஆச்சு உனக்கு” என பரிவு கலந்த குழப்பத்தில் வினாவிட, விடையறியாது நிமிர்ந்து மதி முகம் கண்டேன், சொல்வதறியாது புன்னகைத்தான்.