திகிலும் ருசிக்கும் 5

அவளிடம் சரி என்று சொல்லும் கன நிமிடத்தில் மூலையில் சின்ன குறுகுறுப்பு ஏற்பட்டது, இவள் கேட்டதும் எதற்கு சம்மதம் சொல்லவேண்டும், ஒருவேளை மறுத்தால் என்ன செய்வாள், அதை எப்படி தெரிந்து கொள்வது, சரி முதலில் மறுத்து பார்க்கலாம், பின் மெதுவாக சம்மதம் தெரிவிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன்...

"இங்க பாரம்மா, இப்படி எங்கிருந்தோ வரும் ஆவி, பூதத்தெல்லாம் விருந்தாளியா நினைச்சி உபகாரம் பண்ற நிலையில நான் இல்லை, முதல்ல நீ இங்க இருந்து கிளம்பு" என்று உறுதிப்படிந்த குரலில் பொறுமையாக அழுத்தம் திருத்தமாக கூறி முடித்தேன்...

கூறியது தான் தாமதம், அதுவரை காரிகையாய் நின்றிருந்தவள் கோபத்தில் கொந்தளிக்கும் மோகினியாய் மாறிவிட்டாள்...அவளின் கோபக்கனல் வீடு முழுவதும் பரவ ஆரம்பித்தது, அவளின் மேனி செந்நிறத்தில் ஜ்வாலையாக மாறிக்கொண்டிருந்தது, பார்க்கவே பயம் பற்றிக்கொண்டது...

என்ன இவள், கன நேரத்தில் இப்படி மாறிவிட்டால், இன்னும் சில வினாடி விட்டால் வீட்டில் இருக்கும் அத்தனையும் அவளின் கோபக்கனலின் வீரியம் தாங்காமல் பற்றிக்கொள்ளுமே, எனக்கோ கைகால் எல்லாம் படபடப்பில் நடுங்க ஆரம்பித்துவிட்டது...

இவளை எப்படி சமாதானம் செய்வது, பழைய நிலைக்கு கொண்டுவரவேண்டுமே...

"மோகினி, கோபப்படாத, நான் சும்மா தான் சொன்னேன், தாராளமா நீ இங்க தங்கலாம், என் விருந்தாளியா என்ன, இந்த வீட்டு சொந்தக்காரியாவே தங்கலாம், வேணும்னா நாங்க இந்த வீட்டை காலி பண்ணிட்டு போயிடறோம், நீ காலம் முழுக்க இங்கயே இருக்கலாம்" என்று பயத்தில் கத்த தொடங்கியிருந்தேன்...

என் உளறல் மோகினிக்கு கிச்சுகிச்சு மூட்டியிருக்க வேண்டும்...உரக்க சிரித்தாள், அவள் சிரித்ததில் வீடு கொஞ்சம் அதிர்ந்தது, பொருள்கள் குலுங்கி தாறுமாறாய் இடம்பெயர்ந்து...

அவள் செந்நிறமேனி மெல்ல மெல்ல பழைய காரிகையாக மாற துவங்கியது, ஆனால் அவள் சிரிப்பு மட்டும் நிற்கவேயில்லை, மேலிருந்த ஓடுகளில் சில கீழே விழுந்து உடைந்தது, சமையல் அறையில் பாத்திரங்கள் உருண்ட சத்தம் கேட்க மனம் இன்னும் திகில் அடைய ஆரம்பித்தது...

இவள் அழுதாலும் பிரச்சனை, கோபப்பட்டாலும் பிரச்சனை, சிரித்தாலும் பிரச்சனை...இப்பொழுது என்ன தான் செய்வது...... சில வினாடிகளில் யோசித்து எதாவது செய்தே ஆக வேண்டும், இல்லையெனில் இவளின் சிரிப்பின் ஓசையில் வீடே தரைமட்டம் ஆகிவிடும்...
என்ன செய்வது??? யோசிக்க ஆரம்பித்தேன்...

உடனே ஒரு யோசனை தோன்றியது...

" உடனே ஒளிந்துகொள் மோகினி, என் மனைவி வந்துவிட்டாள்" என்று ஹைபிட்சில் கத்தினேன்...அவ்வளவு தான் மோகினி அவள் வந்த கரும்புகைக்குள் மீண்டும் நுழைந்துகொண்டு தண்ணீர்த்தொட்டிக்குள் சென்றுவிட்டாள்....

இந்த உடனடி நிகழ்வை பார்த்து எனக்கே அதிர்ச்சியாகிவிட்டது, என் மனைவி தானே வந்தாள் என்று சொன்னேன்,அதற்கு ஏன் இவள் பயந்து ஓடினாள், பொதுவாக மனிதர்கள் தன்னை மறந்து சிரிக்கும்போது கொஞ்சம் சத்தமாக அவர்களுக்குள் ஓர் அதிர்வு தரும்படி எதாவது சொன்னால் அவர்கள் அந்த விஷயத்தை என்ன என்று யோசிக்கும் முன் சொன்னவரின் பதட்டமும் அலறலும் அவர்களுக்குள்ளும் தொத்திக்கொண்டு அவர்களின் சிரிப்பை நிறுத்தியிருக்கும், அப்படி தான் மோகினியின் சிரிப்பை நிறுத்த என் மனைவி வந்ததாக சொல்லி ஓர் பதட்ட நிலையை உருவாக்கினேன், ஆனால் இந்த மோகினி என்னவோ இப்படி பயந்து ஓடிவிட்டதே...ஒன்றும் புரியவில்லையே..

நியாயப்படி பார்த்தால் ஊருக்கு சென்ற மனைவி திரும்பி வந்ததை அறிந்தால் கணவன்மார்கள் தான் ஓடுவார்கள், மோகினி கூடவா ஓடும்...

சரி இதெல்லாம் எதற்கு, மறுபடியும் மோகினியை ழைத்து விவரத்தை சொல்வோமென நினைத்து மோகினியை கூப்பிட்டேன்..

எத்தனை முறை கூப்பிட்டு பார்த்தாலும் மோகினியிடம் இருந்து ஒரு பதிலும் வரவில்லை, நேரம் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது...

மனது கொஞ்சம் சோர்வடைய ஆரம்பித்தது, அட! நிச்சயமாக நீ மடையன் தான், எப்படிப்பட்ட காரிகை அவள், நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம், அப்படிப்பட்டவளை விரட்டிவிட்டாயே, இனி அவளை எங்கே போய் தேடுவது....கனகா வரும்வரை இருந்துவிட்டு போகிறேன் என்று எவ்வளவு அழகாக அனுமதி கேட்டாள், சம்மதம் சொன்னால் குறைந்தா போவாய்.... நீ கட்டிய வீடா, இல்லை இந்த இடத்தை பட்டா போட்டு வைத்திருந்தாயா, அப்படி என்ன குறுகுறுப்பு.... இனி அவளை காணவே முடியாதா, மடச்சாம்பிராணி, இப்படி காரியத்தையே கெடுத்துவிட்டாயே...என்று மனம் தாறுமாறாக திட்டி கொண்டிருந்தது...

அவளை காணவேண்டுமென நெஞ்சம் பாடாய்ப்படுத்தி கொண்டிருக்க வாசலில் யாரோ அழைக்கும் சத்தம் கேட்டது...

அவ்வளவு தான், என் மோகினி போய்விட்டாள், அவ்வளவு தான் என்று புலம்பி கொண்டே போய் கதவை திறந்தேன்...

கதவை திறந்தால் ஓர் அழகான இளம்பெண்....

"சார், இங்க குழந்தைகள் யாராவது இருக்காங்களா?"

அவள் கேட்ட கேள்வியை விட அவளின் வடிவம் தான் மேலும் என்னை திணறடித்தது...அப்படியே மோகினி சாயலை உரித்து வைத்திருந்தது அவளின் அழகு...

"சார், உங்களை தான் கேட்கறேன்"

"என்னது, என்ன கேட்டீங்க?"

"இங்க குழந்தைங்க இருக்காங்களா?"

"குழந்தைகளா,ஏன் உங்க குழந்தையை காணோமா, இங்க எந்த குழந்தையும் வரலையே, கதவை தாள் போட்டு தானே வச்சிருந்தேன்"

"சார், நான் என் குழந்தையை தேடி வரலை, குழந்தைக்கு சொட்டு மருந்து போடறோம், அதான் உங்க வீட்ல குழந்தைங்க இருக்காங்களான்னு கேட்டேன்"

"அதுக்காகவா, என் வீட்ல குழந்தைங்க இல்லமா" என்று சொல்லிவிட்டு அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தேன்..

நான் கூர்ந்து பார்த்தது அவளை சங்கடப்படுத்தியிருக்கும் போல, கொஞ்சம் நெளிந்தாள்...

"சார், கொஞ்சம் தண்ணி கிடைக்குமா, காலைல இருந்து அலைஞ்சி திரிஞ்சதுல நாவெல்லாம் வறண்டு போச்சி"

"தண்ணி தானே, உள்ள வாம்மா தரேன்"

இப்படி முன்பின் தெரியாதவர்கள் வந்தால் வாசலோடு நிறுத்திவிடுவது தான் என் வழக்கம், இன்று தான் வழக்கம் போல் எதுவும் நடக்கவில்லையே....

"இங்க உட்காரும்மா, நான் தண்ணி எடுத்துட்டு வரேன்"

தண்ணி எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தால் அங்கு உட்கார்ந்திருந்த பெண்ணை காணோம், இங்கே தானே உட்கார்ந்திருந்தாள் என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே கதவு தட்டும் சத்தம் கேட்டது...
கதவை திறந்து தானே வைத்திருந்தேன், என்ன நடக்கிறது, குழப்பம் சூழ போய் கதவை திறந்தால் மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது...

எழுதியவர் : ராணிகோவிந் (18-Jun-18, 5:00 pm)
பார்வை : 437

மேலே