காவிய நட்பு

மஹாபாரத கர்ணன் எழுதுவது........,
ஏராளம் வேறுபடும் எங்கள் கருத்துக்களிலும்
ஐய ரேகை என்மேல் வீசாதவன்,
எல்லோர் கண்களையும் உறுத்திய என் குலத்தை
என்னில் எப்போதும் காணாதவன்,
காயங்களை மட்டுமே தந்த உலகில்
கரம் நீட்டி என்னை ஆரத்தழுவியவன்,
நான் இரவாமலே எனக்கு ஓர்
உறவு ஈந்த என் வள்ளலவன்,
எதற்குமே கலங்கிடாத தன் வாழ்வில்
என் இறப்பில் கதிகலங்கிய ஜீவனவன்,
சாபங்களுக்கு இடையில் என்னைச்
சேர்ந்த வரமானவன்,
என் உயிர்த் தோழன்....
காவியத்தில் அவன் பெயர் துரியோதனன்..!
**********************
மஹாபாரத துரியொதனன் எழுதுவது.....,
மூர்க்கன் என் முன்கோபங்களைத் தாண்டி என்னில்
முற்போக்குச் சிந்தனைகளைக் கண்டவன்,
ஆதங்கத்தில் சிலபொழுது என்னிடம் பேசாதவன் ஆனால்
எனக்காக எப்பொழுதும் பேசுபவன்,
உதிர்த்த வார்த்தைகளைக் காக்க
உயிர் வலியும் பொறுப்பவன்,
இறை எத்தனை முறை இரந்தும்
என் இணை உடைக்காதவன்,
தோற்பான் எனத் தெரிந்தும் இந்த
தோழனுக்கு இறுதிவரைத் தோள் தந்தவன்,
யுகம் பல தாண்டியும்
உற்ற நட்பிற்குச் சாட்சியானவன்,
பூமிக்காக அல்ல,
புகழுக்காக அல்ல,
வெற்றிக்காக கூட அல்ல,
எனக்காக இறக்கவே போர்க்களம் புகுந்தவன்,
எனக்கு முன்னே இறந்தவன்,
என் உயிர் நண்பன்.....,
காவியத்தில் அவன் பெயர் கர்ணன்!
*********************************************