முகத்தில் ஒளிரும்

ஆல மரத்து விதைபோல
அழகான சின்ன வார்த்தை,
இயற்கை தந்த வரம் என்பதால்
இதன் புகழ் இமயம் தொடும்,
விண்ணையும், மண்ணையும்
இணைக்க வல்லது
அதனால் தானோ
அகிலமே இதன் காலடியில்

மக்களை ஒன்றுபடுத்த
மதங்கள் போதித்த வார்த்தை
ஆற்றல் மிகுந்த சொல்
அனைவரையும் வசப்படுத்தும்,
பொறுமையின் சின்னம்
பொறாமை கொள்ளாது
வறுமையில் வாடினாலும்
வாழ்க்கைக்கு இனிமை சேர்க்கும்

தனக்கு உதவியாக இறைவன்
தாயை படைத்து
அனைத்து உயிர்களையும் காக்க
இதற்கு அருள் தந்தான்,
நதியின் கரையோரம் வளரும்
நாணலைப்போல
வெள்ளம் பெருகி வந்தாலும்
வளைந்து கொடுத்து நிமிரும்

ஆன்ம நேயத்தின் அடித்தளம்,
அனைத்தும் இதற்கு
ஈடாகாது என்றால்
அன்பு தானே அது,
காட்டு விலங்குகள் கூட
காட்டும் அன்பால் கட்டுபடும்
அறிவு கண்களில் தெரியும்
அன்பு முகத்தில் ஒளிரும்.

எழுதியவர் : கோ. கணபதி. (29-Jun-18, 9:54 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : MUGATHIL olirum
பார்வை : 49

மேலே