கடலோர காவியம்

மீனவள்
*************

காலையும் விடிஞ்சாச்சு..
வேலையும் வந்தாச்சு..

எனக்கு
வளையல் போட்ட மச்சான்
வலை எடுத்துப் போனான்..

என்
மீசைக்கார மச்சான்
மீன் பிடிக்கப் போனான்..

என்
பாசக்கார மச்சான்
படகோட்டிப் போனான்..

மூத்த பிள்ளை
என் வயிற்றில் இருக்க..
எனக்கு முத்தமிட்டுப்
போனான்..

கடலிலே அவன் மிதக்க..
கரையிலே நான் நிற்க..

என் கண்விட்டு
மறையும் வரை
கை அசைத்து
நின்றேன்..

கண்விட்டு விலகியதும்
கஞ்சி தண்ணி நான் குடிக்க
குடிசைக்குப் போனேன்..

இன்று கடலுக்குள்
யாரும் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்

வானொலியின் எச்சரிக்கை
என் காதில் விழ..
கலங்கித் தவிக்கிறேன்

அலையின் சீற்றம்
அதிகரிக்க..
அலறித் துடிக்கிறேன்

இப்போது என்ன செய்வேன் நான்..
புரியாமல் புலம்புகிறேன்..

நிறைமாச கர்பிணியாய்
நிர்கதியாய்
நிற்கிறேன்..

படியளக்கும் கடலம்மா..!
மடி பிச்சைக் கேட்கிறேன்
என் மகராசனைத்
திருப்பிக்கொடு..

கதறிக் கேட்கிறேன்
என் கணவனை
கரைகொண்டு
சேர்த்து விடு..

மீனவன்
************

கடலம்மா...
கடலம்மா...

என் தாய போல
உன்ன எண்ணி
படகேறி வந்தேனே..

மீன் பிடித்து வித்த
காச
பசியாத்த நெனச்சேனே..

கொந்தளித்து நீ இருக்க..
அதில் தத்தளித்து
நான் மிதக்க..

என்ன நம்பி வந்த புள்ள
கரையோரம் காத்திருக்கா..

சோறு தண்ணி உங்காம
கால்கடுக்க நின்னிருப்பா..

மாமனென்ன காணாம
கண்கலங்கி தவித்திருப்பா..

என் தாயான தாரம்மவ
தாயாக போகும்போது
என் தோள்மேல தாங்குவேன்னு
ஒத்தையில நம்பிக்கிடக்கா..

என் மகராசிய
பாக்கனும்..
என் புள்ளைய
கையில ஏந்தனும்..

என்ன கரை சேர்த்திடு
கடலம்மா..

கண்ணுல அவள
பாக்கனும்.

முடிவு
********

காத்து காத்து
அவள் கரையில் கறைந்திருக்க..

நீந்தி நீந்தி
அவன் நீரில் தத்தளிக்க..

இயற்கைக்கு
இரக்கம் வந்ததுவோ..

பெரும் அலையொன்று
அள்ளி வீசியதே
அவனை பாறையின் மேலே..

பக்குவமாய் பற்றியபடி
அவனும் உயிர் பிழைக்க..

பாறையிலே மயங்கிக்
கிடந்தான் வெகுநேரமாய்..

கடலின் சீற்றம்
மெதுவாய் குறைய..
கடலோரப் படைகள்
விரைந்ததுவே
கடலுக்குள் மீட்க..

கதிரவக் கதிர்கள்
அவன் முகத்தில் பாய..

மெதுமெதுவாய் அவன்
விழிகள் விரிய..

கண்டான் கடலோரப்
படைகள் மீட்க வருவதை..

சட்டென எழுந்து
சட்டையை கழற்றி அசைக்க..

பெருமூச்சொன்றை விட்டு
மகிழ்ந்தான்
கப்பல் அவன் திசை
வருகிறதே..

இரண்டு மணி நேரப்பயணம்..
முழுவதும் அவள்
முகம் நினைவில்..

கரைவந்த நொடியே
பாய்ந்தோடிய கால்கள்
நின்றதே குடிசைக்குள்..

மாரோடு அணைத்த
அவன் புகைப்படத்தோடே
அவள் கண்மூடி
சாய்ந்திருக்க..

விழிமூடிய கண்களில்
வடியும் நீரைத் துடைத்து அமர்ந்தான்
அவள் பக்கத்தில்..

சட்டென கண்விழித்து
அவனை கண்டதும்
வார்த்தைகளற்று
வாரி அணைத்தாள்..

மகிழ்ச்சியில்
குழந்தையும் முண்டியது
வயிற்றுக்குள்..

அவன் கைகள்
அவள் வயிற்றைத்
தொட்டதும்.

எழுதியவர் : கலா பாரதி (1-Jul-18, 3:45 pm)
Tanglish : kadalora kaaviyam
பார்வை : 70

மேலே