375 தற்புகழ்வோர் துரும்பு போல் தான் திரிந்து உழல்வர் – தற்புகழ் 8
அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)
குலமணி வெளியு றாதாழ்
= குரவையூ டொளித்தி ருக்கும்
சலமிசை எவருங் காணச்
= சஞ்சரித் திடுந்து ரும்பு
கலமென மானம் பூண்ட
= கலைவலோர் அடங்கி நிற்பர்
புலனில்சீத் (தை)தயர்த மைத்தாம்
= புகழ்ந்தெங்கும் திரிவர் மாதோ. 8
– தற்புகழ்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”சங்கு, முத்து முதலிய மதிப்பு மிகுந்த பொருள்கள் வெளியில் தெரியாமல் ஆழமான கடலினுள் மறைவாக அமைந்திருக்கும். துரும்பு நீரின் மேல்பரப்பில் எல்லோரும் காணும்படி அலைந்து திரியும்.
அதுபோல, மானமே ஆபரணமாகப் பூண்டோர் அடக்கம் உடையவராக இருப்பர். அறிவில்லாத கீழோர் தம்மைத்தாமே புகழ்ந்து எங்கும் உழல்வர்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
கலம் - ஆபரணம்