ரசனை

=======
பெயர்கெட்டு விடுமென்று பிழைக்கஞ்சி வாழ்பவர்கள்
=பெருந்துன்பத் தகப்பட்டே பிழைப்பை யோட்ட
கயமைதமைப் புரிகின்ற கள்வர்கள் மென்மேலும்
=களிப்புற்று வாழ்வதனைக் கண்ணால் காண்போம்
உயர்ச்சியென ஒன்றுமில்லை உனக்கெதற்கு மீசையென
=உதாசீனப் படுத்துகின்ற உலகின் முன்னே
பயனற்றப் பிறவியெனப் பழிசுமந்து நல்லவர்கள்
=படும்பாட்டை அறியாமல் பார்த்து நிற்போம்.
௦௦
வல்லவர்கள் என்கின்ற வட்டத்துள் நின்றுகொண்டு
=வதைத்தெடுக்கப் பழகியவர் வீசு கின்ற
நல்லெலும்புத் துண்டுக்காய் நயமாக வாலாட்டும்
=நன்றியற்றச் சென்மங்கள் நலமாய் வாழக்,
கொல்வதையும் தொழிலாகக் கொண்டுயரும் பொல்லாதக்
=கொள்கைதனில் உறுதிகொண்ட குருடர் தாமும்
நல்லவர்போல் நடிக்கின்ற நாடகத்தை நடத்திவிட
=நயனங்கள் திறந்தபடி நாம்ர சிப்போம் .
=
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (10-Jul-18, 2:45 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 242

மேலே