வீதியுலா

உலா வருவோம் என்றெண்ணி
ஒரு நாள் நகரத்தில்....
மாற்றுஉடை
மன்னனுக்கத்தான் வேண்டும்....
இ(ரு)ந்த உடையிலேயே ஒருவரும்
அறியாதவனுக்கு(?)
சிறகுகள் விரித்தேன்....
நடப்பவர்க்கு பாதையில்லாத
நாட்டின் நகரத்தில்...
உலா வருவோம் என்றெண்ணி..
நிரம்பிய நெரிசல்களின்
வழியே.......
சிறுதுளை கொண்ட
பானையின் வழியே
வழியும் நீர் போல
மெல்ல வழிந்து
பயணம் தொடர்ந்தது....
நிஜங்களை விட
விளம்பரங்களே எங்கும் அழகாய்....
வானம் நீண்டு கிடந்தது...
அதுதூரத்திற்கு வாகனங்களும்...
அவசரம் எல்லோரையும்
இறுக்கி அணைத்திருந்ததால்...
பார்த்த எந்த கண்களிலும்
அகப்படவில்லை...
மனை(ல)க்கழிவுகள்....
சாலையின் இருபுறமும்...
மனக்கழிவுகள் (மனிதர்களில் கழிவுகள்)
சாலையின்
நடுவே.....
சில இடங்களில் திறந்தும்....
சில இடங்களில் ரகசியமாகவும்...
வாழ்வு தொலைத்த
மனிதர்கள்....
வாகன நெரிசல்களின்
நடுவே...
தட்டில் விழுந்த
சில சில்லறை ஒளி(லி)யில்
தேடியவண்ணம்...
வாழ்க்கையை...
மின்கம்பங்கள் இருபுறமும்
முளைத்து தூரத்திற்கும்
கைகோர்த்து நின்று இருந்தது...
இரு புறத்தும் உயர்ந்த
மாடி வீடுகளுக்கு
காவலர்களாய்....
பசுமை நிறம்...
அழகழகாய் தோட்டங்கள்....
வானவில்...
எல்லாம்
வாழ்வியல் விரும்பிய
சில மனிதர்களின்
வீட்டு சுவர்களில்....
சித்திரங்களாய்....
குறுகிய சந்துகள்
மட்டை பந்து திடல்களாய்
அவ்வப்போது விரிந்துகிடந்தது.....
அதற்குள் நான்கும் ஆறும் அடிக்க
பழகியிருந்தனர் வீரர்கள்...
விளையாட்டாய்...
ஆண்களை விட
அதிக எண்ணிக்கையில்
வீடு திரும்பும்
பெண் அலுவலர்கள்....
அதே பழைய
கடமை சுமையுடன்......
பூக்கள் அறியாத
பெ(ஆ)ண்கள்
கரைந்து போன
பூவாச மணங்களுடன்......
பூக்களுக்கு யாரும் வாசம்
பூச முடியாது என்பதனை
மறந்திருந்தனர்...
ஒவ்வொருவரும்
பிறர் தவறானவர்
என்று எண்ணி
தவறியிருந்தார்கள்...
தவறாயிருந்தார்கள்....
அதற்கு
கண்களும் காட்சிகளும்
சாட்சிகளாயிருந்தன...
அங்கிருந்த
பள்ளியொன்றில்
எஞ்சிய பஞ்சு மேனி
பிஞ்சுகளும் கூட...
வேடம் தறிப்பதில்
அக்கறையாயிருந்தனர்....
ஈன்றவர்களாம்...
ஆசிரியர்களாலும்...
உலா முடித்தேன்..
இரவுக்குமுன்
வீடு திரும்புவது தானே
பறவை....
நகரத்தில் வசித்தாலும்..