பயனுண்டோ

==============
ஆருயிரே பேரழகே ஆவியிலே கலந்தவளே
=ஆசையெனும் ஊஞ்சலிலே ஆடவிட்ட அஞ்சுகமே
ஒருயிராய் நாமிணைந்து உறவாடிக் களித்துவிட்டால்
=உள்ளமெலாம் இனிக்குமடி உயிர்வரையில் மணக்குமடி
நீருயிர்கள் நிலம்வந்தால் நீங்குவது போலடியே
=நீயில்லா என்னுயிரும் நீங்குமெனச் சொன்னவரும்
ஓருயிராய் நினைத்தவுயிர் உலகினையே விட்டோட
=உடன்சென்று சேர்ந்ததுண்டா உளறியதை நினைத்ததுண்டா
௦௦
கூடவரும் பேர்களுடன் கூடவரும் மரணமது
=கூடவரா தோர்களையும் கூட்டிச்செல் லும்நேரம்
கூடவரக் கூடுமெனக் கூடிநிற்கும் உறவனைத்தும்
=கூக்குரல்க ளிட்டாலும் கூட்டிச்செல் லும்பாராய்!
மாடமணி மாளிகைகள், மண்குடிசை வாசலென
=மனிதர்நாம் வகுத்துவைத்த மரபனைத்தும் உடைத்தெறிந்து
சூடவரும் சாமாலைச் சுயம்வரத்திற் குயிர்கொடுத்துச்
=சுடுகாடோ இடுகாடோ செல்வதுவே முறையாகும்.!
௦௦
கைகளிலே மரணமெனும் காகிதத்தை வைத்தபடிக்
=காத்திருக்கும் வாழ்க்கையிதுக் கணப்பொழுதில் முடிந்துவிடும்
மெய்யெனவே அமைந்ததிந்த மேனியினை விட்டாவி
=மெல்லமெல்ல பிரிந்துவிட்டால் மிஞ்சுவது கூடுமட்டும்.
வெய்யிலிலே இட்டவுடன் விரைந்துருகும் நெய்யெனவே
=விளைகின்ற மரணத்தை வெல்லவழி யறியாமல்
பொய்புரட்டுச் சூதுவஞ்சப் பித்தலாட் டமென்பதெலாம்
=புரிந்துபொருள் சேர்ப்பதனால் பயனுண்டோ சொல்வீரே?
***

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (11-Jul-18, 2:36 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 95

மேலே