இனியொரு சுதந்திரம்
அந்தி வானம் ஏன்
அப்படி சிவந்திருகிறது
ரத்த தேசத்தை
சுத்தப்படுத்தி
சுத்தசிவப்பானதோ?
அகிம்சை கொண்டுதான்
ஆங்கிலேயரை விரட்டினோம்
இன்று
வன்முறைகளை மட்டுமே
வாழ்க்கை என்றாக்கிக் கொண்டோம்
நாட்டை காப்பதற்காய்
போர்க்களம் சென்ற
நாட்கள் போய்
நாட்டையே போர்க்களமாக்கிய
நாகரீகவான்கள்
நாங்கள்
மது வெறியனுக்குக்கூட
மயக்கம் தெளிந்துவிடுகிறது
மத வெறியனுக்கோ
மனிதன் என்பதே
மறந்துபோகிறது
இங்கு
சாதியும் மதமும்
தழைத்து வளர்கிறது
மாண்டு போவதென்னவோ
மனிதன் மட்டுந்தான்
மனிதனை
புனிதனாக்க ஓதப்பட்ட
வேதங்கள்
மண்ணினைக் குருதியாக்கி
மாள்வதர்க்காகவா?
ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தை காட்டு என்றார்கள்
அரிவாளோடு நிற்பவர்கள்
அறைவதற்கு தயாரில்லை என்பதுகூட
அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை
ஏசுவைக் கொன்றோரை
ஏற்றுக்கொண்டதனாலும்
காந்தியை சுட்டவனை
போற்றுவதனாலும்
ரத்த கோலத்தைபார்த்து
புத்த கொள்கைக்கு மாறிய
அசோகனின் வரலாறு கூட
இவர்களுக்கு
அனாவசியமானதுதான்
அரசியல் சுதந்திரத்தை
அகிம்சை வழியில்
பெற்றுதந்த பெருமகனே
காந்தி மகானே
இன்னுமொரு சுதந்திரபோர்
இங்கு நடத்துவது வேறு யார்?
புண்ணிய பாரத பூமியில்
புதிய அவதாரமெடுத்து வா
கைத்தடியோடு அல்ல
கைத்துப்பாக்கியோடு!