அக்கமகாதேவி - பெருந்தேவி | Short Story - Vikatan

பன்னிரண்டாம் நூற்றாண்டில், கர்நாடகத்தில் வாழ்ந்த கவிஞரும் சிவ வழிபாட்டாளருமான அக்கமகாதேவியின் ‘வசனங்கள்’ கவித்துவம் நிரம்பியவை. அவரது வாழ்க்கையோ, இன்றளவும் இந்தியச் சூழலில் ஒரு பெண்ணால் எண்ணிப் பார்க்க முடியாத சாகசங்கள்கொண்டது. சாகசம்தான்... ஏனெனில், இன்றும்கூட ஒரு பெண், தான் திருமணம் செய்துகொள்ளப் போகும் ஆணிடம் அக்கமகாதேவியைப் போல மணவாழ்க்கையைக் குலைக்கக்கூடிய நிபந்தனைகள் வைக்க முடியுமா! அவரைப் போல ஆடையைத் துறந்துவிட்டு நிர்வாணமாகப் பொதுவெளியில் நடமாட முடியுமா என்பவை கருதத்தக்கவை.

அக்கமகாதேவிக்கும் சிற்றரசனான கௌசிகனுக்கும் திருமணம் நடந்ததா, இல்லையா என்பதைக் குறித்த சர்ச்சை இன்றளவும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் தொடர்கிறது. ஆனால், சமண சமயத்தினனான கௌசிகன், பசவண்ணர் வழியைப் பின்பற்றிய சரணர்களின் குடும்பத்தில் பிறந்த அக்கமகாதேவியின் மீது கொண்டிருந்த ஒருதலைக் காதலை, அக்கமகாதேவி பற்றிய வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வப் புராண வரலாறுகள் எடுத்துரைக்கின்றன. அவற்றில் அரசனின் காதல், திருமணத்தின் வாயிலாக ஈடேறும் வழியில், சமய வேறுபாடு இடையூறாக இருந்ததையும் தெரிந்துகொள்கிறோம்.

தன் 12-ம் வயதிலேயே தான் பிறந்த ஊரின் (உதுத்தடி) உள்ளூர்க் கடவுளான ‘சென்னமல்லிகார்ச்சுனன்’ என்று அழைக்கப்பட்ட சிவன் மீதிருந்த பிரேமையால், அந்தத் தெய்வத்தைக் கணவனாகவே நினைத்து வாழ்ந்தவர் அக்கமகாதேவி. தன் ‘வசனங்களில்’ சென்னமல்லிகார்ச்சுனனின் பெயரைக் கவிமுத்திரையாகப் பயன்படுத்தியவர். அக்கமகாதேவிவின் இறை ஈடுபாடு தெரிந்தோ தெரியாமலோ, மையலுற்று மணம் முடிக்க எண்ணிய கௌசிகன், அவரின் பெற்றோரிடம் தன் தூதுவர்களை அனுப்பியதாகக் கதை வடிவமொன்று கூறுகிறது. அவரின் பெற்றோர், கௌசிகன் சமண சமயத்தைச் சார்ந்திருந்ததால் மருமகனாக ஏற்க மறுக்கிறார்கள். பல்வேறு வகையிலும் அவர்கள் மனதை மாற்ற முயன்று அவை பலிக்காததால், இறுதியாக உயிருக்கு அபாயம் ஏற்படும் வகையில் அவர்கள் மிரட்டப்படுகிறார்கள். அந்தச் சமயத்தில், தனது மூன்று நிபந்தனைகளை அரசன் ஏற்றால்தான் அவனை மணம் முடிப்பதாகத் தெரிவிக்கிறார் அக்கமகாதேவி.

(1) தனக்கு உகந்தபடி சிவனை தியானம் செய்வதற்கு நேரம் எடுத்துக்கொள்வார். (2) தனக்கு வேண்டியபடி சிவ வழிபாட்டாளர்களோடு அவர் எப்போது வேண்டுமானாலும் நேரம் கழிப்பார். (3) தன் குருவுக்கு சேவை செய்ய, தனக்குப் பிடித்தபடி நேரத்தைச் செலவிடுவார்.

அக்கமகாதேவிமுன்வைத்த நிபந்தனைகளை அரசன் ஏற்றுக்கொண்டு அவரை மணம் முடிக்கிறான். ஆனால், அக்கமகாதேவி எனும் ஆளுமையின் முன் அந்த நிபந்தனைகளை முன்னிட்டுக் கடுமையாகத் தோல்வியடைகிறான். தியானத்தில் இருக்கும்போது அக்கமகாதேவியைக் காமத்தோடு அணுகியது, அவரைக் காண வந்த சிவபக்தர்களைத் திருப்பி அனுப்பியது என்ற இரண்டு பிறழ்தல்களுக்குப் பிறகு மூன்றாம் முறையும் தவறுகிறான்.

கதை இப்படிப் போகிறது. ஒருமுறை, அக்கமகாதேவி அரசனோடு சுகித்திருக்கையில், அவருடைய குரு அரண்மனைக்கு வருகிறார். அவரைச் சந்திக்கும் ஆவலில் படுக்கையிலிருந்து அப்படியே குதித்தோடிச் செல்கிறார் அக்கமகாதேவி. குரு, அவரை உடை அணிந்து வரச் சொல்கிறார். திரும்பிப் படுக்கையறைக்கு வந்து தன் உடையை எடுக்க முயலும் அக்கமகாதேவியை அரசன் சினத்தோடு, “நீதான் பெரிய பக்தையாயிற்றே, உனக்கெதற்கு ஆடை?” என்று கேட்கிறான். மூன்றாவது நிபந்தனையிலும் கணவன் பிறழ்ந்துவிட்டதாகத் தெரிவித்துவிட்டு அவர் அரண்மனையிலிருந்து வெளிநடப்பு செய்கிறார். அதிலிருந்து கூந்தல் மட்டுமே அவர் அணியும் ஆடையாகின்றது.

கதையின் இன்னொரு வடிவத்தில், திருமணம் முடிந்தும் அக்கமகாதேவி, அரசிக்கே உரிய ஆடை அணிகலன்களை அணியாமல், தன் வீட்டிலிருந்து கொண்டுவந்த எளிய பருத்தி ஆடைகளையே அணிவதாக வருகிறது. ஒருநாள் குளித்துவிட்டு தியானத்தில் இருக்கும் அக்கமகாதேவியைக் காமத்தோடு நெருங்கி அரசன் தொட்டபோது, அக்கமகாதேவி தன் சேலையைக் களைந்துபோட்டு, விழிகளின் நெருப்போடு சூரியனைப் போலப் பிரகாசித்து நின்றதாகச் சொல்லப்படுகிறது. “எலும்புகளும் சதையும் கூடிய என் உடல்தானே உனக்கு வேண்டும்?” என்று அரசனிடம் வினவியதாகவும், அரண்மனையைவிட்டு உடனே அகன்றதாகவும் அப்போதிலிருந்து நிர்வாணமாகவே தன் வாழ்நாளைக் கழித்ததாகவும் அந்தக் கதை கூறுகிறது.

15-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வீர சைவ நூலான ‘பிரபுலிங்க லீலை’யில், அக்கமகாதேவியின் திருமணம் குறிப்பிடப் படுவதில்லை. ஆனால், அதிலும் சமய வேறுபாடு முன்னிலைப்படுத்தப்படுகிறது. அவளை மணம்புரிய நினைத்து வந்த அரசனிடம் சமணத்திலிருந்து சைவத்துக்கு மாறிச் சரணராக வாழச்சொல்லி அக்கமகாதேவி கேட்கிறார். அதை அரசன் மறுப்பதால், அரசன் தனக்களித்த ஆடை, ஆபரணங்களைத் திருப்பி அனுப்பிவிட்டு, தன் ஆடைகளைத் துறந்து சுதந்திரமாக நடமாட ஆரம்பிக்கிறார்.

இந்தக் கதைகளில் / புராணங்களில் ஆடை களைதல் என்பது துறவுக்கான முக்கியமான குறியீடு ஆகிறது. அக்கமகாதேவியைப் பொறுத்தவரை துறவில் நுழைய ஒரு தொடக்கச் சடங்குபோலவும் ஆடை களைதல் நடக்கிறது. இதில் சமண மரபுகளின் தாக்கமும் இருக்கிறது. ‘திகம்பரர்கள்’ எனப்படும் சமண சமயக் குழுவைச் சார்ந்த துறவிகள் நிர்வாணமாக இருத்தல் மரபு. ஆண் துறவிகளுக்கான இந்த நிலையைத் திகம்பரச் சமண மரபு, பெண் துறவிகளுக்கு அனுமதிப்பதில்லை. பெண்ணின் உடல் குறைபாடுகொண்டது, பெண்ணின் நிர்வாணம் ஆண் துறவிகளின் மோட்சத்துக்கான பாதையில் குறுக்கே வருவது போன்ற காரணங்களை வைக்கிறது அது. பசவண்ணரின் பக்தி இயக்கத்தைப் போலவே திகம்பர சமண மரபும் மக்கள் மத்தியில் தாக்கம் ஏற்படுத்தியிருந்த அன்றைய சூழலில், அக்கமகாதேவியின் ஆடை களைதலை, சமூகத்தில் நிலவிய ஆண் மைய உடைக் கருத்தியலுக்கு எதிரான புரட்சிகரச் செயல்பாடாகவே நாம் பார்க்க வேண்டும்.

ஆடை என்பது, அத்தியாவசியப் பொருளோ அலங்காரப் பொருளோ மட்டுமல்ல. குறியீட்டு மதிப்போடு ஆண், பெண் பால் கட்டமைப்பை நிகழ்த்துவது அது. உடலார்ந்த செயற்பாட்டின் (Embodied practice) வாயிலாக ஆடை, ஆண் / பெண் பாலின வகைமைகளை நிறுவுகிறது; மீள்-உருவாக்கம் செய்கிறது. காலம்காலமாக அந்தந்தப் புவியியல், பண்பாட்டுச் சூழல்கள் சார்ந்து, இந்த மீள்-உருவாக்கம் நடக்கிறது. ‘பாலியல் ஒழுக்கம்’ சார்ந்த மதிப்பீடுகளும் பாலினம் சார்ந்து இந்த மீள்-உருவாக்கத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. அக்கமகாதேவியின் ‘ஆடை களைதல்’ இத்தகைய மீள்-உருவாக்கத்துக்கு எதிரான அதிரடிச் செய்கையாக உள்ளது. அதேநேரத்தில், அவரது ஆடை களைதல், அரண்மனை / படுக்கையறை என்கிற வீடு / குடும்ப வெளியிலிருந்து பொதுவெளிக்கான ஒரு பெண்ணின் நகர்தலோடும்கூட இருக்கிறது. கணவன் என்ற பாத்திரத்தையும் குடும்ப நிறுவனத்தையும் மறுக்கும் நகர்தலாகவும் அக்கமகாதேவியின் பொதுவெளியை நோக்கிய நகர்தல் இருக்கிறது. என்றால், அத்தகைய நகர்தலில் அவரது பெண் அடையாளம் என்னவாக உருமாறுகிறது என்பதும் கவனிக்கத் தக்கது.

அக்கமகாதேவி தான் நிர்வாணமாக இருக்கத் தேர்ந்தெடுத்த முடிவு இன்றும் ஆச்சர்யம் தருகிறது. மேலும், அன்றையச் சமூகம் எப்படி அதை எதிர்கொண்டிருக்கும் என்றும் சிந்திக்கத் தூண்டுகிறது. ஒருவகையில் அவரின் செய்கைக்கான உந்துதல், பசவண்ணர் முன்னெடுத்த பக்தி இயக்கத்தின் கொள்கைகளிலிருந்தே வந்திருக்க வேண்டும். வைதிக மதத்தின் வேள்வி முதலிய சடங்குகள், உயிர்ப்பலி, வர்ணப் பாகுபாடு, பிராமணப் பூசக அதிகாரம், கோயில் வழிபாடு போன்றவற்றை மறுத்து பக்தியை முதன்மையாக வைத்த இயக்கம் 12-ம் நூற்றாண்டில் பசவண்ணரால் கட்டி அமைக்கப்பட்டது (பின்னால், இரு நூற்றாண்டுகள் கழித்து அது ‘வீர சைவம்’ என்ற பெயரால் வழங்கப்பட்டது). காலங்காலமாக இருந்துவந்த மரபுகளை, வழக்கங்களை, நிறுவன அதிகாரங்களை எதிர்க்கும் பசவண்ணரின் இயக்கத்தோடு, அதைப் பின்பற்றிய சரணர்களோடு இருந்த பரிச்சயமும் உறவும் அக்கமகாதேவியின் கலகத்துக்கு வித்திட்டது எனலாம்.

பசவண்ணரின் இயக்கம் வசனங்களால் பரப்பப்பட்டது. 12-ம் நூற்றாண்டில் ஆக்கப்பட்ட வசனங்களில், இன்றைக்குக் கிட்டத்தட்ட 130 வசனக்காரர்களால் ஆக்கப்பட்ட 15,000 சொச்சம் வசனங்கள் கிடைத்திருக்கின்றன. இந்த வசனக்காரர்களில் 33 பேர் பெண்கள். சரணர்களின் சமய வழியில் புறந்தள்ளப்பட்ட ஐந்து வகைத் ‘தீட்டுகள்’ (தூமைத் தீட்டு, சாவுத் தீட்டு, குழந்தைப் பேறுத் தீட்டு, சாதித் தீட்டு, மற்றும் வைதவ்யம் எனப்படும் கைம்பெண் கோலம்) பெண்களை ஓரளவுக்கு ஆணாதிக்க நியதிகளிலிருந்து வெளிவர உதவியாக இருந்தன எனலாம். பசவண்ணரின் இயக்கத்தில் பெண் சரணர்களின் கணிசமான பங்களிப்பையும் இவ்வகையில் புரிந்துகொள்ள முடியும்.

வசனம் என்பதன் பொருள் ‘வாக்கு’ அல்லது ‘கூறப்பட்ட கூற்று.’ இந்த அர்த்தங்களே, வேதத்தைக் குறிக்கும் சுருதி என்பதன் பொருளான ‘கேட்கப்பட்டது’ என்பதிலிருந்தும், இதிகாசங்கள், புராணங்கள், தர்ம சாஸ்திரங்களைக் குறிக்கும் ‘நினைவுகூரப்பட்டது’ என்பதிலிருந்தும் மாறுபட்டிருப்பதை நாம் புரிந்துகொள்ளலாம். சாமானியர்களை முன்வைத்து மொழியப்பட்டவை வசனங்கள். அதனாலும்கூட வசனங்களை அடிநாதமாகக்கொண்ட பசவண்ணரின் பக்தி இயக்கத்தில், அக்கமகாதேவிக்கும் பிற பெண் சரணர்களுக்கும் பொருண்மையான இடம் கிடைத்தது. இந்தப் பின்னணியில் அக்கமகாதேவியின் வசனங்கள், அவர் தனது உடை சார்ந்த செயற்பாட்டை எப்படி உத்திபூர்வமாக, கவனமாக முன்வைத்தார் என்பதைப் புரிந்துகொள்ள உதவலாம். அவரது இரண்டு வசனங்களைத் தருகிறேன்:

ஆண்களும் பெண்களும் தம்மை
மூடியிருக்கும் துணி நழுவினால் கூச்சப்படுகிறார்கள்
வாழ்வின் இறையான நீ முழு உலகத்தையும்
சூழ்ந்து அணைத்திருக்கும்போது
கூச்சப்பட என்ன இருக்கிறது?
சென்னமல்லிகார்ச்சுனன், மென் - மல்லிகை,
கண்களாகவே மொத்த உலகத்தையும் பார்க்கும்போது
எதனை உன்னால் மூட இயலும், மறைக்க இயலும், மனிதனே!

திறந்துபோட்ட வட்ட முலைகளையும்
முழு இளமையின் வசீகரத்தையும்
கண்டு நீ வந்தாய், சகோதரனே!
சகோதரா! நான் பெண்ணல்ல
நான் ஒரு வேசியல்ல:
பின் என்னை மீண்டும் மீண்டும்
யாரென்று எண்ணி நீ பார்க்கிறாய்?
சென்னமல்லிகார்ச்சுனன், மென் - மல்லிகையைத் தவிர
வேறெந்த ஆண்களும் நமக்குப் பொருந்த
மாட்டார்கள், சகோதரனே!

ஒரு தளத்தில், தான் வழிபடும் சிவனின் எதையும் காணவல்ல இறைத் தன்மையைச் சுட்டிக்காட்டி, உடையின் தேவையோ, நிர்வாணத்துக்காகக் கூச்சப்படவேண்டிய அவசியமோ மனிதருக்கு இல்லை என்பதை வலியுறுத்துகிறார் அக்கமகாதேவி. அதே நேரத்தில், தான் பெண்ணே இல்லை என்று பெண் அடையாளத்தை மறுத்து, அதைத் தாண்டிச் செல்கிறார். கூடவே, ‘மானுடர்க்கென்று பேச்சுப் படின் வாழகில்லேன்’ என்ற ஆண்டாளைப்போல மானிட ஆண்களன்றி, சென்னமல்லிகார்ச்சுனனே தனக்குப் பொருத்தம் என்றும் அறிவித்து விடுகிறார்.

தனது பெண் அடையாளத்தை அக்கமகாதேவி மறுத்துப் பேசுவதை அவரது பக்தியோடுகூடிய உத்திபூர்வமான சொல்லாடலாகவே என்னால் பார்க்க முடிகிறது. போலவே, ‘சகோதரா’ என்று விளித்தும் தனக்கு ஆண்கள் பொருந்த மாட்டார்கள் என்று தெரிவித்தும் தன் மேல் குவியும் ஆண் பார்வைகளையும் மிகக் கவனமாக அப்புறப் படுத்துகிறார் அக்கமகாதேவி. இன்றைக்கும் ஆடை களைந்த நிர்வாணம் சமூகவெளியில், யாருக்குமே கடினம். அதுவும் குறிப்பாக, பெண்களுக்குச் சாத்தியமே இல்லை என்பதை யோசிக்கும்போது, அக்கமகாதேவி தன் பெண் அடையாளத்தை மறுத்ததன் நியாயம் விளங்குகிறது; அத்தகைய மறுப்பை மீறியும், சமூகப் பண்பாடு கட்டமைத்திருக்கும் பாலினப் பாகுபாட்டுக்கு எதிரான அவரது புரட்சிகரப் பங்களிப்பும் புரிகிறது.

அக்கமகாதேவியின் நடவடிக்கையை மற்ற சரணர்கள் எப்படிப் பார்த்தார்கள் என்பதும் முக்கியம். தன் குழலையே ஆடையாகக்கொண்டு, உடுத்தடியிலிருந்து கல்யாணா என்ற நகரத்தில் சரணர்கள் கூடும் இடமான ‘அனுபவ மண்டபம்’ எனப்படும் மண்டபத்துக்கு அவர் வருகிறார். சரணர்கள் குழுமியிருக்கும் இடமான அங்கே சரணர்களின் குருவான அல்லமா பிரபுவுக்கும் அவருக்கும் உரையாடல் நிகழ்கிறது. 15-ம் நூற்றாண்டு கன்னட நூலான ‘சூன்ய சம்பாதனே’ என்ற நூல் இதை விவரிக்கிறது. அல்லமா இவரைப் பல கேள்விகள் கேட்கிறார். அக்கமகாதேவி தன் கணவனை நீங்கிய காரணத்திலிருந்து, சென்னமல்லிகார்ச்சுனனை அவர் கணவனாக வரித்ததிலிருந்து, ஆடையில்லாமல் நடமாடுவது வரை. அக்கமகாதேவியின் மனப்பக்குவத்தைச் சோதிக்க அல்லது பிற சரணர்களின் புரிந்துகொள்ளலுக்கு உதவ, என்றெல்லாம் பல நூல்கள் இந்தக் கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்தாலும், அக்காவின் மீதான ஆண் அதிகார மையங்களின் கேள்விகளாகவே அவை இருக்கின்றன. குறிப்பாக, “ஆடை தேவையில்லாத அளவுக்கு நீ வளர்ந்துவிட்டிருந்தால், தலைமுடியால் உடலை மூடிக்கொள்வதேன்?” என்று வினவுகிறார் அல்லமா. அதற்கு அக்கமகாதேவி, ‘‘பழம் பழுத்தாலன்றி அதன் தோல் உரியாது. நேயத்தே நின்ற இறையின் முத்திரையை என் உடலில் காண்பது உங்களுக்குத் (பார்ப்பவர்களுக்கு) தொந்தரவு தரலாம். எனவே, என்னை மறைத்துக் கொண்டேன்.” என்று தன்னைப் பார்ப்பவர்களிடத்தில் கேள்வியைத் தள்ளிவிட்டுத் தப்பிக்கிறார். அல்லமா இவ்வாறு ‘விசாரித்த’ பிறகு, வயதில் சிறியவர் என்றாலும் மனப்பக்குவம் பெரிது எனப் பாராட்டி, ‘‘எங்களுக்கெல்லாம் அக்கா நீ’’ என்று அழைக்கிறார்.

மகாதேவி, ‘அக்க’மகாதேவியாக அழைக்கப்பட்டதை, அங்கீகரிக்கப் பட்டதைச் சொல்லும் கதை இது. இதிலிருந்து மிகவும் வேறுபட்ட ஒரு காட்சிச் சித்திரத்தை 15-ம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட, ‘மகாதேவி அக்கான்ன புராண’ என்கிற நூல் காட்டுகிறது. கல்யாணாவுக்கு வருகை தருகிற அவரைப் பசவண்ணரும் அவர் மனைவி நீலாம்பிகையும் கனிவோடு வரவேற்று உபசரித்த பின், பல பெண் சரணர்கள் வந்து உரையாடுகிறார்கள். போந்தா தேவி, பீலி தேவி, கமலாம்பிகை, விமலவ்வே, கேதல தேவி, மசனம்மா போன்ற பலர். அவர்கள் ஒருமித்த குரலில், ‘கௌசிக மன்னனைவிட்டு வந்த நீ மிகச் சரியான காரியத்தைச் செய்தாய்’ என்று பாராட்டுகிறார்கள். இளம் வயதில் அக்கமகாதேவி அடைந்திருக்கும் மேன்மையையும் பக்குவத்தையும் புகழ்கிறார்கள். பெண்களின் சகோதர ஒன்றிப்பு அந்த இடத்தில் சாத்தியமாகிறது. அக்கமகாதேவியைப் பார்க்க வந்த அந்தப் பெண் சரணர்களில் சிலராவது ஆண் மைய ஆடை அரசியலை அக்கா கைப்பற்றி, தனக்கு உகந்ததாக உருமாற்றியதை உகந்து, சிலாகித்திருக்கக்கூடும், குறைந்தபட்சம் அவர்கள் மனதிலாவது.

உதவிய நூல்கள்:
Chaitanya, Vinaya. Songs of Siva: Vacanas of Akka Mahadevi. New York: Harper Perennial, 2017.
Rao, Mukunda. Sky-clad. The Extraordinary Life and Times of Akka Mahadevi. Chennai: Westland, 2018

எழுதியவர் : (18-Jul-18, 6:43 pm)
பார்வை : 106

சிறந்த கட்டுரைகள்

மேலே