ஊன் வேட்டை

#ஊன்_வேட்டை

சாதனையாளராக
களத்தில் துடிப்புடன்
அரக்கர்கள்,
மக்கட்திரட்சி
ஈசலைப் போலே
நிரம்பி வழிகிறது,

உயரழுத்த அதிரொலி
எமனின் வருகையை
உறுதிபடுத்த,
மாக்கள் மஞ்ச
வர்ணக்கோட்டில்
களம் காணத் தயாராகி
மூர்கத்தனத்தோடு
முண்டியடித்து
எமனைப் பற்றேறுகிறார்கள்,

காலத்தின்
நிலையறியா எமன்
வேகத்தில் வினைதேட,
விஷ்ணுவின் சக்ராயுதம்
மின்னுதவியோடு
செந்நிறக் கம்பிகளைப்
பற்றிச்சுழலும் வேகம்,
தீப்பிழம்புகளைச்
சூரியனிடமிருந்து
மீட்டு வருகின்றன,

புத்தியில்லாப் புரவிகள்
பந்தயத்தில் ஈடுபடத்
தம்மைத் தயார்படுத்தி
குதித்தோடுகிறார்கள்,
விவேகம் வேகத்தோடு
போட்டிபோடுகிறது,

ஊனேங்கி நரகுலகு
காத்துக்கிடக்க,
எமனும் மக்கட்திரட்சியும்
வட்டரங்கு வேடிக்கைக்கு
பார்வையாளராகி,
மனம் பித்துப்பிடித்து
பதறுகிறது
காட்சிகளைக்காண,

புரவிகள் ஒன்றன்பின்
ஒன்றாக யமனின்
இரும்புக்கரத்தைப் பற்றியேற
வேகத்தோடு தானும்
வேகமாகியோடுகிறார்கள்,
கரத்தைப் பற்றியோர்
பின்வந்த புரவிகளுக்குதவ,

அனைவரும் எமனின்
மேல் பயணிக்கிறார்கள்,
இரும்புக்கரத்தைப் பற்றி
டிஸ்கோ டான்சாடுகிறார்கள்,
சிறகுகளை விரித்து
காற்றாகிப் பறக்கிறார்கள்,

எமனின் மறுருவாக
ஒளிவிளக்கொன்று
காத்திருக்கிருக்க,
நடைமேடைகளில்
எமனைப்பற்றி
பனிச்சறுக்கொன்று அரங்கேற,

வேகமெடுக்கிறது எமனின்
ஊன்வெறிப் பயணம்,
சறுக்கலில் சறுக்கிய புரவி
சக்கரத்தில் சுழல,
குருதி வெள்ளம் எட்டொரு
திசைகளில் தெறிக்க,
புரவிகளும் மக்கட்திரட்சியும்
திகைத்து நிற்கிறது,

ஒளிவிளக்கின் ஒளியணைத்து
காளையர் வருகிறார்
அள்ளிக்கொண்டு செல்கிறார்.

எழுதியவர் : தமிழினியன் (18-Jul-18, 9:19 pm)
சேர்த்தது : தமிழினியன்
பார்வை : 144

மேலே