தமிழர் திருமணம்-------------
தமிழ் கடன் கொண்டு தழைக்குமா?
தமிழர் சரித்திரச் சுருக்கம்
தமிழன் எப்படிக் கெட்டான்?
மொழிஞாயிறு
ஞா.தேவநேயப் பாவாணர்
------------------------
முகவுரை
இல்லறமாகிய நல்லறம் பூணும் மக்கள் வாழ்க்கையில் திருமணமே தலைசிறந்த மங்கல நிகழ்ச்சியாதலாலும், நீண்ட காலமாகத் தமிழுக்கும் தமிழனுக்கும் இழுக்குநேரும் வண்ணம் ஆரியமுறையில் பெரும்பால் தமிழ மணங்கள் நடைபெற்று வருவதாலும், அண்மையில் யான் நடத்திவைத்த பல திருமணங்களில் யான் உணர்ந்த குறையை நிறைத்தற் பொருட்டும், இந் நூல் எழுதப்பெற்றது.
தேவநேயன்
சேலம், 15-5-56
---------------------------
முன்னுரை
1. வாழ்க்கை நோக்கம்
இவ்வுலகிற் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு சிறிதேனும் இன்ப மாய் வாழ விரும்புவதாலும், அவ் இன்பத்திற்கு இன்றியமையாது வேண்டுவது பொருளாதலாலும், அப் பொருள் பெற்றார் செய்ய வேண்டிய கடமை அறமாதலாலும் இம்மையில் மக்கள் வாழ்க்கைக் குறிக் கோள் இன்பமும் பொருளும் அறமும்என மூன்றாகக் குறித்தனர் முன்னோர். இம் மூன்றனுள்ளும், அறம் சிறந்ததாயும் ஏனையிரண்டிற்கும் பொதுவாயுமிருத்தலான், அறவழியில் ஈட்டிய பொருளைக் கொண்டு அறவழியில் இன்பந்துய்க்கவேண்டு மென்னும் கருத்தால், அறத்தை முன்வைத்து முப்பொருளையும் அறம் பொருள் இன்பம்என மாற்றியமைத்தனர் பின்னோர்.
ஒருவர்க்கு ஊண், இசை, காட்சி முதலிய பிறவற்றாலும் இன்ப முண்டாகுமேனும், பேரளவுபற்றியும் ஐம்புலனுந்தழுவல் பற்றியும், பெண்ணின்பமே இம்மையிற் பேரின்பமாகக் கொள்ளப்பெற்றது.
"பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மையுண் டாகப் பெறின்". (54)
"கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள". (111)
எனத் திருவள்ளுவனாருங் கூறியிருத்தல் காண்க.
மக்களிடை மதத்துறை வளர்ச்சியடைந்து வீடுபேற்று நம்பிக்கை ஏற்பட்டபின், மாந்தன் குறிக்கோள் அல்லது பேறு அறம் பொருள் இன்பம் வீடு என நான்காக வகுக்கப் பெற்றது. இந் நான்கும் நாற் பொருள் அல்லது நான்மாண் பொருள் எனப்படும்.
இம்மையின்பமாகிய பெண்ணின்பமும் மறுமையின்பமாகிய வீட்டின்பமும், ஒப்பு நோக்க வகையால், முறையே சிற்றின்பம் பேரின்பம் எனப்படினும், சிற்றின்பமே இயற்கைக் கேற்றதும், உடனே நுகர்தற் குரியதும், எளிதாய்க் கிட்டுவதும், கண்கூடாகக் காணப் பெறுவதுமா யிருத்தலின், அதுவே பெரும்பாலரால் விரும்பப்படுவதாம்.
"ஈதல்அறம் தீவினைவிட் டீட்டல்பொருள் எஞ்ஞான்றும் காதல் மனையாளும் காதலனும் - தீதின்றிப்
பட்டதே இன்பம் பரனைநினைந் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு"
என்னும் ஒளவையார் செய்யுள், நாற்பொருளியல்பையும் நன்கனம் தெரிவிக்கும். இச் செய்யுளின் முதலடியை, "ஈதலறம் தீவினைவிட் டீட்டல் பொரு" ளென்றும் என்று சிலர் திருத்துவர்.
சில துறவியர், வரையிறந்து பெண்ணை வெறுத்துப் பெண்ணின் பத்தைப் பழித்திருப்பர். அது துறவியர்க்கே கூறியதென்று இல்லறத்தார் பொருட்படுத்தாது விட்டுவிடல் வேண்டும். விலை மகளுறவையும் நெறிதிறம்பிய காம நுகர்ச்சியையும் பழிக்கலாமே யன்றி, பெண் ணின்பந்தன்னையே பழித்தல் கூடாது. அங்ஙனம் பழிப்பவர், இறைவன் ஏற்பாட்டையும் தம் பெற்றோர் வாழ்க்கையையும் பழிப்பவரேயாவர்.
2. வாழ்க்கை வகை
மாந்தன் வாழ்க்கை, இல்லறம் துறவறம் என இரு வகைத்து, மனைவியோடு கூடி இல்லத்திலிருந்து, அதற்குரிய அறஞ்செய்து வாழும் வாழ்க்கை இல்லறம்; உலகப்பற்றைத் துறந்து, அதற்குரிய அறத்தோடு கூடிக் காட்டில் தவஞ் செய்து வாழும் வாழ்க்கை துறவறம். அது மணவாநிலையிலும் தொடங்கலாம்; மணந்த நிலையிலும் தொடங்கலாம்.ஒருவன் மணஞ் செய்யாது இறுதிவரை மாணியாய் (பிரமச் சாரியாய்) இருப்பினும், அவன் வாழ்க்கை இல்லறத்தின் பாற்படும்.ஒருவன் நாட்டினின்று நீங்கிக் காட்டில் வாழினும், மனையாளொடு கூடி வாழின், அது இல்லறத்தின் பாற்படுவதே.ஒருவன் இல்லத்திலிருந்து மனையாளொடு கூடி வாழினும், அறஞ் செய்யாது இருப்பின், அவன் வாழ்க்கை இல்லறமாகாது வெறுமனான இல்வாழ்க்கையாம். ஒருவன் துறவு மேற்கொண்டும் அதற்குரிய அறம் பூணானாயின், அது ஈரறத்தொடுங் கூடாது தீவினையை மிகுக்கும் அல்வாழ்க்கையாம்.இக்காலத்தில், துறவு பூண்டோர் காட்டிற்குச் செல்லாது நாட்டிலும் நகரத்திலும் தங்கி, தம்மாலியன்றவரை பொதுமக்கட்குத் தொண்டு செய்வது, சிறந்த துறவாகக் கருதப்படுகின்றது.
3. இல்லறச் சிறப்பு
இறைவன் ஏற்பாட்டின்படி மக்களுலகம் இடையறாது தொடர்ந்து வருவதற்கு இல்லறமே காரணமாதலாலும், துறவியர்க்கும் அவர் முற்றத் துறக்கும்வரை இன்றியமையாத் துணையாயிருப்பது இல்லறத்தாரே யாதலாலும், இல்லறத்தாலும் வீடுபேறு கிட்டுமாதலாலும், மாயமால நடிப்பிற்கிடம் துறவறத்தினும் இல்லறத்திற் குறைதலாலும், இல்லறமே நல்லறமாம். இதனாலன்றோ,
"இல்லற மல்லது நல்லற மன்று"
என ஒளவையாரும்,
"அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று" (49)
"அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்" (46)
என்று திருவள்ளுவனாரும், கூறினார் என்க.
அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந் நன்றி யறிதல், நடுவுநிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பிறனில் விழையாமை, பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினையச்சம், ஒப்புரவறிதல், ஈகை என்பன இல்லற வாழ்க்கைக்கு விதிக்கப்பட்ட அறங்களாதலின், இவையனைத்தையுங் கைக்கொள்வார் வீட்டுலகை யடைதற்கு எள்ளளவும் ஐயமின்றாம்.
ஆயினும், மக்கள்தொகை மிக்கு மாநில முழுதும் இடர்ப்படும் இக்காலத்தில், துறவறஞ் சிறந்ததென்று கூறித் துறவியரை ஊக்குதல் வேண்டும் என்றே தோன்றுகின்றது.
மீண்டும் வளரும்