மாங்கொட்ட சாமி – புகழ்
எழுத்தாளர் புகழால் எழுதப்பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு. மொத்தம் 13 சிறுகதைகள். செட்டிக்குளம் என்னும் கிராமத்திலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் நடைபெறும் சம்பவங்களே ஒவ்வொரு சிறுகதையும்.
இந்தக் கதைகளின் சிறப்பம்சம் என நான் கருதும் ஒன்று இதில் கையாளப்பட்டிருக்கக்கூடிய மொழி வழக்கு. புகழ் இயல்பிலேயே கிராமத்து வாழ்விலிருந்தமையால் அவருக்கு மிக எளிதாக இந்நடை கூடி வந்திருக்கிறது. அத்தகைய கிராம சூழ்நிலைகளிலிருந்து வளர்ந்து வந்த எவர் ஒருவரும் தன்னை மிக நெருக்கமாக இந்தக் கதைக்களத்திற்குள் இணைத்துக்கொள்ள முடியும். அத்தனை இயல்பான கிராமத்து சொலவடைகள். நானே நேரடியாகக் கேட்ட பல சொலவடைகள் எங்கோ என் மனதின் ஆழத்தில் கிடந்தவற்றை இச்சிறுகதைகள் உயிரெழுப்பின.
மிகச்சில இடங்கள் தவிர்த்து ஏனைய இடங்களில் கிராமத்து சொலவடை அப்படியே பதிவு செய்திருக்கிறார். அது இச்சிறுகதைகளுக்கு ஒரு இயல்பான ஒரு தோற்றத்தை அளிக்கிறது.
எல்லா கதைகளுமே ஒன்றுக்கொன்று ஏதோ தொடர்போடு இருப்பதாகவே தோன்றுகிறது. அது இச்சிறுகதைகளை ஒற்றைப்படையாக மாற்றுவதாகத் தோன்றுகிறது. உதாரணமாக ஒலச்சான் சின்னாளு, அருணாச்சலம் பெரும்பாலும் எல்லாக் கதைகளிலும் வருகிறார்கள்.
குறிப்பிடத்தக்க ஒரு கதை தொங்கட்டான் கிளவி. இந்தக் கதை ஒரு கிழவியின் மரணப்படுக்கையில் தொடங்குகிறது. நூலாசிரியரே கதை சொல்லியாக மாறி நமக்கு கதையினை சொல்கிறார். பெரும்பாலான அனைத்துக்கதைகளுமே அப்படித்தான். அக்கிழவியின் வாழ்க்கை, பட்ட கஷ்டங்கள், அவள் மகனை வளர்த்த விதம் என எல்லாவற்றையும் சொல்லி முடிக்கிறார். எல்லோரும் அவள் இறப்பை எதிர்நோக்கி இருக்க, அவள் தன் மகனை எதிர்நோக்கி இருக்கிறாள். அதனால் பால் ஊற்றியும் மரணிக்காமல் இருக்கிறாள். இறுதியில் தன் மகனைப் பார்த்ததும் உயிர் பிரிகிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க கதையாக எனக்குத் தோன்றுகிறது.
இதைத் தவிர ஏனைய கதைகள் அனைத்துமே ஒரு வாசகனுக்கு எந்தவித சவாலையும் அளிக்காத கதைகள். உதாரணமாக ஏதாவது ஒரு சொற்றொடரையோ சொலவடையையோ கூறும்பொழுது ஆசிரியரே கதை சொல்லியாக அதற்கான விளக்கத்தையும் அளித்து விடுகிறார். இதனால் அதனை வாசகன் தான் அறியும் பொருட்டு அடையும் பரவசத்தினை அடைய முடிவதில்லை. எழுத்தாளர் ஜெயமோகன் ஒருமுறை கூறினார், சிறுகதை என்பது குறைவாகக் கூறி அதிகமாக கற்பனை செய்ய வைப்பது. அந்த இடத்தில் இந்த சிறுகதைத் தொகுப்பு சறுக்கியிருக்கிறது. இச்சிறுகதைத் தொகுப்பை அதன் வெளியீட்டிற்கு முன்னால் ஜெயமோகனிடம் கொடுத்திருந்து அவர் திருச்சி சுற்றுவட்டாரப்பகுதிகளில் வாழ்ந்து வரக்கூடிய ஒருவரையாய் இருந்திருந்தால் இத்தொகுப்பு தமிழின் தலைசிறந்த சிறுகதைகளாக மாறியிருக்கும் என்றே நான் நினைக்கிறேன்.
Posted by மகிழ்நன்