சிலுவைப்பாடு – காளிப்பிரசாத்

தமிழிலக்கிய ஆய்வாளரும் நாவலாசிரியருமான பேரா.ராஜ் கௌதமன் அவர்களுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அளிப்பதற்கு முடிவெடுத்திருக்கிறோம். விழா வழக்கம்போல டிசம்பர் இறுதிவாரம் கோவையில் நடைபெறும்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்புள்ள ஜெ,

ராஜ்கெளதமன் அவர்களைப் பற்றி இலக்கிய முன்னோடிகளிலும் நமது தளத்திலும் படித்திருந்தாலும் அவரை முழுவதுமாக படித்து அறிய ஒரு நல்வாய்ப்பு இந்த விருது நிகழ்வு. முதலில் சிலுவைராஜிடமிருந்துதான் துவங்கினேன்.

சிலுவையும் மற்ற குழந்தைகளைப்போல பிறந்தவுடன் குவா குவா என்றுதான் அழுதான் என்ற அறிமுகத்துடன் நாவல் துவங்குகிறது. இது ஆரம்பத்தில் சிரிப்பை வரவழைத்தாலும் நாவலை முடித்தவுடன் மீண்டும் இந்த வரியைப் படிக்கவேண்டும். அது அளிக்கும் உணர்வுகளே வேறு. ஆர்சி கிறிஸ்துவனாக பறையர் குலத்தில் பிறந்தவனின் சரித்திரம் பற்றிய நாவல், அவனும் எல்லோரையும் போலத்தான் பிறந்தான் எனத்துவங்குவதில் உள்ள கசப்பு நகைச்சுவை போல நாவல் முழுவதுமே நிறைய உண்டு. இந்த சரித்திரங்கள் முறையே, அவனது தொடக்கப்பள்ளி சரித்திரம், மேல்நிலைப்பள்ளி சரித்திரம், கல்லூரி சரித்திரம் பின் வேலை தேடும் சரித்திரம் நான்கு பாகங்களாக உள்ளன. கிட்டத்தட்ட அனைவருக்குமே இந்த காலகட்டத்தில் தன் வாழ்வில் நடந்ததாக சொல்லத்தக்க தருணங்கள் இப்படி அறுநூறு பக்கங்களுக்கு இருக்க வாய்ப்பு உண்டுதான். ஆனால் சிலுவைராஜின் சரித்திரம் நாவலில் ராஜ்கெளதமனின் புனைவுக்கலை அடைந்த பெரிய வெற்றி என்பது, சிலுவை வளர வளர கொஞ்சம் கொஞ்சமாக இந்த சமூகத்தை அவன் அறிவதைப் போல, வாசகனும் அந்த கணத்தில்தான் புதிதாக ஒன்றை அறியும் வண்ணம் சொல்லிச் செல்லும் அவரது நடைதான். தன் மீதான புறக்கணிப்பை நுட்பமாகவும், நேரடியாகவும் உணர்ந்துகொண்டேயிருக்கிறான் சிலுவை. அவற்றில் பல, பொது வாசகர்கள் உள்ளே சென்று அறியாத ஒன்று. ஆனால் சிலுவையின் விளையாட்டுத்தனமும் அவன் கூடவே இருக்கிறது. அது அவனை ஐந்நூத்தித் தொண்ணூறு பக்கங்கள் வரை உயிப்புடன் வைத்திருக்கிறது. கடைசி பக்கங்களில் அதையும் காலி செய்துவிடுகிறது. பிறகுதான் எழுத்தாளர் இந்நாவலை எழுதியிருக்கிறார் என்பதாலும் முன்பே ஒரு வரியில் ”பிற்காலத்தில் காலேஜ் வேல கிடைச்சப்புறம்” என சொல்லியிருப்பதாலும் விரைவில் விளையாட்டுத்தனத்திற்கு சிலுவை மீண்டுவிட்டான் என எண்ணி நம்பிக்கை கொள்கிறேன்.

சிலுவையின் தொடக்கப்பள்ளிக்கூட சரித்திரகால விளையாட்டுத்தனத்தில் இந்த சாதீய தாழ்வு அவனுக்குப்புரியவில்லை. கட்டை வாத்தியார் தன் உறவினரானாலும் சிலுவை அவர்களின் உட்பிரிவுப்படி அவரைவிட தாழ்ந்தவன். ஆனால் அவனது சூட்டிகையும் படிப்பும் அவருக்கு ஒருவித காழ்ப்பை ஏற்படுத்துகிறது. அவரது பிள்ளைகளும் அங்கு படித்தார்கள் என்பதும் ஒரு காரணமாக நாவலாசிரியரால் சொல்லப்படுகிறது. ஆனால் சிலுவைக்கு இதெல்லாம் விளங்கவில்லை. யாராவது பாடச்சொன்னால் தொண்டை நரம்பு புடைக்க பாடும் அந்த சிறுவன், டிசிப்ளீன் என்றால் தோல் உறிவது என்பதை விரைவில் உணர்ந்துகொள்கிறான். இருபத்தொன்றுக்குமேல் போனால் விரல்கள் கணக்குபோட பத்தலையே என்ற கவலையும் உண்டு. இங்கு அவனுக்கு அனைத்தும் விளையாட்டுக்கள் மட்டுமே. ஊமைநாயக்கரிடம் நாங்க சாம்பாக்கமாரு என ஜாலியாக கோரஸ் பாடும் அளவிற்கே ஓரளவு புரிகிறது அவன் ஜாதி பற்றி. அதைத்தவிர, அவன் விளையாடும் விளையாட்டுக்கள் அவன் கேட்கும் பேய் கதைகள் எல்லாமே தமிழகத்தின் அனைத்து சிறுவர்களுக்கும் பொதுவானதுதான். சிலுவையே மேல்நிலை பள்ளிக்குச் சென்றதும் அனைத்து ஊர்களிலும் இந்த பேய் கதை சொல்லப்படுவதை எண்ணி வெறுத்துப்போகிறான். அனால் பழம்திருடும் நண்பன் ஜான் மற்றும் நாடோடி. மொந்தன் மாமா போன்ற வளர்ந்த திருடர்களின் சாகசங்கள் வாழ்க்கையை சுவாரசியமாக்குகின்றன. சர்ச் சங்கீதம், நண்பர்கள், நாய்கள், உடும்பு வேட்டை, விளையாட்டு வகைகள் என வகைவகையாக தொடர்ச்சியாக எழுதப்பட்டிருக்கின்றன. அனைத்து பாகங்களிலும் தொடரும் விஷயங்கள் என்றால் அவை அவனது அப்பாவின் சித்திரமும், நடப்பு சினிமா மற்றும் அரசியல் சார்புகளும் கூடவே அவன் சாதீய ஏற்றத்தாழ்வுகளும் மட்டுமே.

நடுநடுவே சில அங்கதமான வரிகள் நகைக்க வைக்கின்றன. ராணுவத்திலிருந்து இருமாத ஓய்வில் வரும் அப்பா அவனை தினம் அடித்து முடித்து ஊருக்கு கிளம்புகையில் அறிவுரை சொல்கிறார். அடிச்சாலும் வாங்கிடலாம் என்ன இருந்தாலும் மறுநாள் போயிடுவாரு என ஆறுதலாக இருக்கிறான் சிலுவை. இன்னொரு இடம், ”நாடோடியை கண்டிக்க திருச்சியில் இருக்கும் அவன் பெரியப்பாவால் மட்டுமே முடியும். ஆனால், பஸ் பிடித்து வந்து நாடோடியைக் கண்டிப்பதைவிட ஆயிரஞ்சோலிகள் அவருக்கிருந்தன” என்றவரி. இதுபோன்ற விவரணைகள் சிலுவை தெருவை சார்ந்த மக்களின் வாழ்க்கையை புன்னகையோடே படிக்க வைக்கின்றன

ஆனால் சிலுவையின் இந்த பால சரித்திரத்தில் அவன் உள்ளிருக்கும் ஒரு வஞ்சம் அல்லது ஒருவித குரூரம் பற்றி அவன் அம்மா அவனிடம் சொல்கிறார். எலி அணில் கட்டெறும்பு போன்றவற்றை குத்திக்கொல்லும் குரூரம் அனைத்து குழந்தைகளிடமும் உண்டுதான் என்றாலும், இதில் இந்த பகுதிகள் மிக முக்கியமானவைகளாக இருக்கின்றன. அது சிலுவையின் உட்கரந்த குணமாக இருப்பதுபோல நுட்பமாக சித்தரிக்கப்படுகிறது. அந்த வஞ்சம் அவன் அப்பாவிடம் அவனுக்கு உண்டு. ( அது சிறு வயது சிலுவைக்கு ஏற்பட்ட ஒரு ஈடிபஸ் காம்ப்ளேக்ஸ் போன்றது என்கிறமாதிரியான குறு விவரம் நாவலில் இருக்கிறது.) அதை நிரூபிப்பது போலவே எல்லா கதாபாத்திரங்களின் பெயர்களும் வரும் இந்த நாவலில் ஒரு இடத்திலும் சிலுவையின் தந்தை பெயர் இல்லை. கல்லூரியில் எஸ்.சிலுவைராஜ் டி.சிலுவைராஜ் குழப்பத்தில் முதல் எழுத்துமட்டும் வருகிறது. சிலுவையின் மூத்த சகோதரியின் பெயர் மேரி என்பது அவன் அம்மாவுக்காக , தகப்பனுக்கு எழுதும் ஒரு கடிதத்தின் மூலம்தான் வாசகன் அறிகிறான். நாவல்முழுவதும் அவர்கள் வெறுமனே சிலுவையின் தகப்பனாராகவும், பெரிய தங்கச்சியாகவும் தான் வருகிறார்கள். அதேநேரம் சினுமை ஜெசிந்தா என அம்மா மற்றும் சிறிய தங்கையின் பெயர்கள் சரளமாக வருகின்றன. அது முழு கவனத்துடன் செய்யப்பட்டதாக இருக்கலாம் அல்லது இந்த கடிதம் எழுதும் வாசகன் அதிகம் படித்த துப்பறியும் நாவல்களின் பாதிப்பாகவும் இருக்கலாம்.

இந்தப்பகுதியிலிருந்து அவன் உயர்நிலைப்பள்ளிக்கு செல்கையில் ( பியூஸி) வருவது அடுத்த சரித்திரம். அவனுக்கு சமூகத்தில் தன் இடம் என்ன என்பது மெல்ல மெல்ல புரியும் இடம். தன்னுடல் சார்ந்த புரிதல்கள், ஹிந்தி எதிர்ப்பு, திமுக மீதான நம்பிக்கை என இந்தப்பகுதி விரிவடைகிறது. இந்தப்பகுதிகள்தான் பைபிள் மற்றும் கிறிஸ்துவத்தின் சில அடிப்படைகள் பற்றி பேசும் இடம். அவைகள் பற்றி அதிகம் அறியாத வாசகருக்கு ஒரு துவக்கத்தை இந்தப்பகுதி அளிக்கலாம். அதில் அவன் எடுக்கும் சார்புநிலைக்கான காரணம் ( சிலுவைக்கு பிதாவாகிய சர்வேஸ்வரனைப் பிடிக்காது. அவரின் கோபம் தண்டனை எல்லாம் தன் அப்பாவையே ஞாபகப்படுத்தியது ), பருவ ஈர்ப்புகள் என செல்லும் பகுதியில்தான் ஜாதி கிறிஸ்தவருக்கும் மற்ற கிறிஸ்துவருக்கும் இருக்கும் அரசியல்கள், குருமார்களின் வேட்கைகள் பற்றிய விவரணைகள் வருகின்றன. அவன் ஊரில் நடக்கும் கலவரமும் அதற்கு காரணமான ஜாதிக்காழ்ப்பும் அதற்கு துணைபோன திமுக ஆட்சியும் அவனை சோர்ந்துபோகவைக்கின்றன. தன் மாமா உறவுமுறை கொண்ட பிரதர் ஒருவர் திறமையிருந்தும் ஜாதியின் காரணமாக, சர்ச் மூலம் பிரான்ஸ் அனுப்பப்படாதது அவனை முற்றிலும் நாத்திகனாக ஆக்க முதலடியை எடுத்து வைக்கிறது. இவையனைத்திற்குமிடையே பொன்னியின் செல்வன் படிக்கிறான். நந்தினியின் சபதம் என்ற நாடகத்தையும் அரங்கேறுகிறான்.

மூன்றாவதான கல்லூரி சரித்திரம் சிலுவை நவீன இலக்கியத்திற்குள் அறிமுகமாகும் இடம். ஷேக்ஸ்பியர் தஸ்தயேவ்ஸ்கி ஆகியோரையும் படிக்கிறான். கல்லூரியில் சேர்வதற்கு முன்பான கதையில் அவன் தமிழில் ஃபஸ்ட் க்ளாஸ் என நினைத்த ராஜாமணி ஃபாதர் அவனை தமிழ் ட்யூட்டராக சேர்த்துவிடுகிறார். ஆனால் அவன் விலங்கியலில்தான் ஃபஸ்ட், தமிழில் இரண்டாவதுதான் என அறிந்ததும் தான் ஒரு ஹரிஜனுக்கு வாய்ப்பு அளித்ததாக அனைவர் முன்பும் சொல்வது அவனை நுட்பமாக அவமதிக்கிறது. அந்த ஃபாதருக்கு எதிரான மற்றொரு ஃபாதர் (பிரின்ஸிபால்) சிலுவையின் ஒப்பந்தகாலம் முடிந்தும் அவனை நீக்கிவிடுவார் எனக்கருதுகையில் அவனை அவன் படித்த விலங்கியல் பிரிவிலேயே சேர்க்கிறார். அப்போது மகிழும் சிலுவைக்கு அது நாடார் மற்றும் பிள்ளைமார்களின் மோதலை தவிர்க்க செய்யப்பட்ட உத்தி என தெரியவருகையில் மீண்டும் கூசுகிறான். தன் மதிப்பெண்கள் எங்குமே மதிக்கப்படவில்லை என்பது அவனுக்கு அவமரியாதையாகவே இருக்கிறது. அதன் பின் எம் ஏ சேர்வது, எதிர்வீட்டு மாமி மேல் ஈர்ப்பு, சக மாணவியிடம் சொல்லமுடியாத காதல் என தொடர்கிறது.

எம்.ஏ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றும் வேலை கிடைக்காத சிலுவை இறுதியில் எஸ்.ஸி சான்றிதழுக்காக இந்துவாக மாறும் வரையிலானது நான்காவது சரித்திரம். இதில்தான் அவன் அதிகம் எதிர்கொள்ளும் வியாக்கியானங்களும் சங்கடங்களும் விவரிக்கப்படுகின்றன. அனைத்து அவமானங்களையும் சந்திக்கும் அவன் இடியிலோ தற்கொலையிலோ இறப்பான் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. சிலுவைக்கும் கூடத்தான். இடதுசாரிகள் நக்சல்கள் காவல்விசாரணை என கிளைக்கதைகளும் இந்தப் பகுதியில் இருக்கின்றன. காரைக்கால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் “பறையன் “ என கத்தி சொல்லுமிடத்தில் வெளியேரும் ஒன்று, அவனுக்குள் அதுவரையில் இருந்த அந்த குறும்புக்காரப்பையன் என்கிற பாவனை. அது சிலுவை தன்னிலையறிந்து தனிமையில் நிற்கும் கனம். அதுவரை சிலுவை தான் அவமதிக்கப் படுவோம் என உணர்ந்தே அந்த விளையாட்டுத்தனத்தை கைகொண்டிருந்திருக்க வேண்டும். அதுதான் சிலுவை பள்ளிக்காலத்திலிருந்தே தவிர்த்துவந்த இடமோ.

காரைக்கால் சம்பவத்திற்குப் பின் ஊரில், சும்மா வழித்துணைக்கு பேச்சு கொடுக்கும் நாயுடுவிடமே அதைத்தான் சொல்கிறான். ஒருவன் தான் யாரென உணர்ந்து அடுத்து என்ன செய்வது என்றும் தெரியாமல் பித்து போல நிற்கும் இந்த பக்கங்கள் அசலான சிலுவையின் மனப்பாங்காக வெளிப்பட்டுள்ளன. சிலுவை சக்கிலியர் வீட்டில் சாப்பிட மறுப்பது, இடதுசாரிகளின் பாவனைகள் என அனைத்திலும் உள்ள நேர்மை இதை எங்கும் புருவம் உயர்த்தாமல் வாசிக்க வைக்கிறது. இதெல்லாம் நடக்கவில்லையெனில் சிலுவை மற்றொரு தமிழ் வாத்தியாராக பட்டிமன்ற பேச்சாளராக கழகத்தின் பிரசார பீரங்கியாக ஆகியிருக்கவும் கூடும் எனவும் தோன்றாமலில்லை. திமுக மீதான ஈர்ப்பு மேடைப்பேச்சு பின் அவர்கள் மீதான அவநம்பிக்கை. எம்ஜிஆர் மீதான ஆர்வம் என நாவல் நகரும் இடமெல்லாம் அன்றைய சமூகம் மற்றும் அரசியல் குறித்த சித்திரங்களும் தொடர்ந்தே வருகின்றன.

தன்வரலாற்றுப்புனைவு வகை நாவல்களில் முதலில் வெளிப்படுவது ஆசிரியரின் தனித்துவம்தான், ரத்த உறவு, கன்னி நாவல்களில் ஒரு கவிஞர் நாவல் எழுதுகிறார் என்பது படிக்கையிலேயே வாசகனுக்குத் தெரிவது போல இது. ராஜ்கெளதமனின் தனித்துவம் அவர் சிலுவைக்கு அவனுக்கேத்தெரியாமல் தன் அப்பாவிடமிருந்த வந்த ஒவியக்கலை போல இருக்கிறது. இந்நாவலில் பல இடங்களில் வெளிப்படும் அந்த கச்சிதம் ஒரு ராணுவ ஒழுங்கையே கொண்டிருக்கிறது. உதாரணமாக நாய்கள் பற்றிய பத்து பக்க குறிப்புகளில் வேறு ஏதும் இடையூறு செய்வதில்லை. விளையாட்டுகள் பற்றிய குறிப்புகள் வரும் இடங்களில் வேறு தகவல்கள் வருவதில்லை. இந்த வடிவ ஒழுங்கை சிலுவையிடமிருந்து எம்.ஏ தேர்வின் சமயத்தில் நாவலாசிரியர் கண்டுபிடித்திருக்க கூடியதற்கான சாத்தியம் இருக்கிறது. சிலுவையே தனக்கு கவிதைல்லாம் வராது தன்னால் இலக்கியத்தை வகைப்படுத்தமுடியும் என உணர்கிற இடமும் இதில் முக்கியமானது. புனைவு என்றாலும் வருட மாத குறிப்புகளை கவனத்துடனே அளித்துள்ளார். இந்திய சுத்ந்திரத்திற்குப் பிறகு 1950 ல் பிறக்கும் சிலுவையின் இந்த சரித்திரம் அடுத்த 25 வருடத்திற்கான தமிழக நிலையை துல்லியமாக அறியவும் உதவுகிறது. ஆனால் அன்றைய நிலையை வைத்துப்பார்க்கும் போது பரவலாக அறியும் ஒன்று, அத்தனை நாயகர்களும் வறுமையின் நிறம் சிவப்பு என பாலைவன சோலைகளாக திரிந்த காலம். அத்தனை ஜாதி எழுத்தாளர்களும்தான் வேலையில்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.. யார்க்காகவோ காண்டம் வாங்கி வீணடித்திருக்கிறார்கள். அப்பாவின் சட்டையைப்பிடித்திருக்கிறார்கள். குடித்து புலம்பியிருக்கிறார்கள். உதாரணமாக நாஞ்சில்நாடனின் மிதவை.

சிலுவையின் நெருக்கடி சண்முகத்துக்கும் உண்டு. அதிலும் பெண்கள் மூலம் அடையும் கிளர்ச்சியும் பின் தன்னிலை அறிந்து அடையும் விரக்தியும் இருவருக்கும் பொதுவானதாகவே வருகிறது. அவமானப்படுத்தப்படுவதும் ஏளனம் செய்யப்படுவதும் என வரலாறு இருவருக்கும் சமமாக இருக்கிறது. அந்த அவமானத்திற்கு காரணமாக தோன்றுவது அவர்களின் கல்வி. வெளியில்தான் ஜாதியும் பொருளாதார நிலையும். ஆனால் உறவுக்குள், தன் வீட்டாரைவிட அதிக மதிப்பெண் எடுத்த கோபத்தால் விலக்கி வைத்தல், கைதூக்கிவிடாமல் போகுதல் என சிக்கல்கள் இருக்கின்றன. அதேநேரத்தில் அவர்கள் இருவரும் தான் படித்தவன் என்கிற நுண்ணகங்கரத்தாலேயே மற்றவர்களின் நடத்தையால் தூண்டப்படுகிறார்கள். மற்றவர்க்கு அது பொருட்படுவதில்லை. தன் உறவினராக இருந்தாலும் உட்பிரிவில் உயர்ந்தவரான கட்டைவாத்தியார் ஆறாம் வகுப்பில் தன்னை அந்த உட்பிரிவின் பெயர் சொல்லி திட்டுவதை அடிப்பதை ராக்கம்மா பாட்டியிடம் புலம்புகிறான் சிலுவை. அதற்கு அவள் நாம அதானய்யா என்று எளிதாக கடக்கிறாள். ஆனால் அப்போதே சிலுவையால் முடியவில்லை. அது அந்த கல்வி அளித்த கோபம். அந்தக் கல்வியே பிற்காலத்தில் தன்னை தனிமைப்படுத்தவும் பிறருடன் ஒன்றவிடாமலும் அடிக்கும் தருணங்களை இருவருமே கடக்கிறார்கள். அந்த கல்வியாலேயே அவர்கள் மீண்டு வருகிறார்கள். நக்சல் தோழர்கள் போல வீரமரணம் அடையாமல் இருக்கவும் அவர்களை அனைத்திலிருந்தும் விலக்கியும் வைப்பதும் அவர்கள் அடைந்த இலக்கியம்தான். உலகியலும் தன்னறமும் கலக்கும் இடம் அது. அந்த இடத்தில் சண்முகத்திற்கு கம்பன் கிடைக்கிறான் சிலுவைக்கு கைலாசபதி கிடைக்கிறார். இலக்கியத்தின் பயன் மதிப்பு என இவற்றைச் சொல்லிக்கொள்ளலாம்




R.காளிப்ரஸாத்

எழுதியவர் : (3-Aug-18, 6:46 pm)
பார்வை : 66

மேலே