மறுவாய்ப்பு

இந்த மனிதர்களை மீண்டும் காணவேண்டுமா என்று சூரியன் தயங்கித் தயங்கி எட்டிப் பார்க்கும் அதிகாலை நேரம். எவ்விதமான அடர்ந்த பனியும் விலகி காற்றிலும் மனதிலும் தெளிவு பிறக்கின்ற அற்புதமான நிகழ்வு அரங்கேறிக் கொண்டிருக்கும் வேளை. கவனிக்கப் பட விரும்பாத நிலையில் ஒதுக்கி நிராகரிக்கப் பட்ட கோலத்தில் ஒரு வீடு. சரியாக திறக்கப் படவில்லையா இல்லை மூடப் படவில்லையா என்று புரிந்துக் கொள்ள முடியாத நிலையில் ஜன்னல்கள் இருந்த வீடு. மெல்லிசாகக் காற்றை கிழித்து ஒலி அணுக்கள் உள்ளே படை எடுத்து நுழைந்து கொண்டிருக்கிறது. வீட்டின் வாசலில் கோவில் போல் செருப்புக்கள் குமிந்த வண்ணம் கிடந்தன. வீட்டில் நுழைந்தவுடன் இடப்பக்கத்தில் சமையல் அறையும் கழிப்பறையும் நட்பு பாராட்டும் விதத்தில் ஒன்றின் பிறகு இன்னொன்று இருந்தது. சமையல் அறையில் உணவின் நாற்றம் ஏதும் இல்லாமல் யாரோ சமையல் முயன்று தோற்று ஒதுங்கிய தோற்றத்தில் கலை இழந்து காணப்பட்டது. மாறாக மனம் கவராத விதத்தில் மிகுந்த மணத்தில் கழிப்பறை வரவேற்தது. எதிரில் படுக்கை அறையின் கதவு மூடப்பட்டிருந்த நிலையில் வெளிச்சம் கதவின் கீழே வழிந்தோடிக் கொண்டிருந்தது. எறும்புகளின் உணவுச் சந்தையாய் மாற்றப்பட்டுக் காட்சியளித்த மெத்தை கதவிற்கு நேர் எதிரே இருந்தது. தீவிரவாதிகள் மெத்தையின் மீது அணுகுண்டு வீசிப் போர் தொடுத்ததுபோல் சாராய பாட்டில் மூடிகள் படுக்கையை சுற்றிச் சிதறிக்கிடந்தன. இவற்றின் இடையே ஒரு உருவம் முதுகு மேல் பார்த்த வகையில் செயல் இழந்து படுத்து கிடந்தது. அழகாய் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்த முகத்தில் சில நாட்களின் கவலை ஏற்படுத்திய ரேகைகளுடன் வாய்பிளந்து கிடந்தது. முதல் இழப்பைச் சந்தித்த பாரத்தில் அவன் இதயம் கனத்து ஓய்ந்திருந்தது. அவனின் இழப்பிற்கு இயற்கையே வருந்துவது போல் ஜன்னல் வெளிச்சம் அவனை வருடியது. அவன் வலது கையில் ஒரு நாயோடு அவன் விளையாடிக்கொண்டிருந்த பழைய புகைப்படம். இதே நாயுடன் எடுத்த பல புகைப்படங்கள் அந்த அறையின் சுவரை அலங்கரித்தது. அன்றாட உணவை வாங்கிக்கொண்டிருந்த ஏழை எறும்பின் கவனத்தை சிதைத்தது கதவை தட்டுகின்ற சப்தம். வாசலில் அவன் காதலி சிரித்த விதத்தில் இவனைச் சந்தோஷத்தால் வியக்க நின்றுகொண்டிருந்தாள். அவள் இடது கைகளில் இவ்வுலகத்தில் புதிதாய் உறவுகொள்ள பிறந்த எளிய இதயத்துடன் ஒரு நாய்க்குட்டி.

எழுதியவர் : ரா.சா (5-Aug-18, 9:51 am)
சேர்த்தது : ராசா
பார்வை : 567

மேலே