முத்தமிழ் அறிஞரே…

முத்தமிழ் அறிஞரே…..!
அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த அஞ்சாத சிம்மமெங்கே..?
ஆத்திகர் போற்றுகின்ற நாத்தீகப் பாட்டெங்கே…?
இதய சூரியனே எங்கே நீ எங்கே…?
ஈடில்லாத் தமிழ்கலைஞா எழுத்தாளா நீஎங்கே..?
உலகே அழுகிறதே உன்காதில் விழவில்லையோ…?
ஊருக்காய் வாழ்ந்தவரே ஊரழுதால் பொறுப்பாயோ…?
எங்கள் மனமிங்கே ஏங்கி தவிக்கிறதே
ஏன்மவுனம் ஏன்மவுனம் இனியதமிழ் பேச்செங்கே..?
ஐயகோ முத்தமிழ்தான் அசைவற்ற நாளுண்டோ..?
ஒரேயொரு வாத்தை உடன்பிறப்பே எனவழைத்தால்..
ஓடிவரும் கூட்டமிங்கே ஓடோடி வந்ததையா..?
மவுனம் கலைப்பீரா..? மறுகுகிறோம் தமிழரெல்லாம்….?
சங்கத் தமிழே தமிழின்தொல் காப்பியமே…
பொங்கும் கவியே புனையுங்குறள் ஓவியமே
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிழொழுகும்
பாரோரும் பாடுகின்ற பழக்கத்தைக் கொணர்ந்தவரே..
தமிழ்வாழ்த்தைப் பாடுதற்கும் தமிழுணர்வைத் தந்தவரே
தமிழரெல்லாம் தேம்புகிறார் தமிழ்வாழ்த்தில் கலந்தனையோ…?
கரகரத்த குரலினிலே கவிபாடும் கவிக்குயிலே…
கரகரத்த குரல்கேட்க காத்திருக்கும் கூட்டமிங்கே,..?
அண்ணாவின் இதயத்தை அன்பாலே பெற்றவரே
அண்ணா பெரியாரின் அரும்தொண்டைத் தொடர்ந்தவரே..
கண்ணீர் கவித்துளிகள் கவிஞரெல்லாம் வடித்திருக்க
காவியமே மவுனித்தால் கவிதையெல்லாம் என்னாகும்…..
வள்ளுவத்தை ஓவியமாய் வடித்தெடுத்தாய் உலகறியும்
வள்ளுவரைச் சிலையாக வடித்தெடுத்தாய் புவியறியும்
வள்ளுவரின் வழிநடந்தாய் வையகமே இதையறியும்…
தேசியக் கொடிபோர்த்து தமிழ்ச்சீயம் நீயுறங்க…
தேசீய உணர்வுள்ளோர் தேம்புகிறார் பாரிங்கே…!
தேசியக் கொடியேற்றும் உரிமையினை பெற்றளித்த
உன்னை நினைந்துகொடி நடுநின்று பறக்கிறதே…?
என்னே அதுகூட இடைபறந்து தவிக்கிறதோ..?
அரசுதுறை இயக்குவதில் ஆருன்னை விஞ்சிடுவார்..?
மனிதனை சுமந்தவண்டி மனிதனே இழுப்பதா..?
புனிதா நீபதைத்தாய் மிதிவண்டி யதைக்கொடுத்தாய்
இலவசத் திருமணத் திட்டம் எளியவர்க்கு
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வறியவர்க்கு
மகப்பேறு நிதியுதவித்திட்டம் கொடுத்தவரே
யாருமே தீட்டாத திட்டங்கள் தந்தவரே
யாருமே திட்டாத திட்டங்கள் தந்தவரே
பாருக்குள் நும்போல படைப்பாளி யாரிங்கே…
யாரிங்கே எழுதிடுவார் நும் போல வசனங்கள்..?
கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான்
கற்பித்தானா என கனலெழுப்பி விட்டவரே
சொல்லைத்தான் ஆளும் சூக்குமங்கள் அறிந்தவரே
தென்பாண்டி சிங்கமும் உரோமாபுரிப் பாண்டியனும்
உன்போல யார்தருவார் உதிரத்தே யனல்தருவார்..?
திருந்தாத உள்ளங்கள் திருந்துதற்கு வசனத்தால்
திரும்பிப்பார் என்றவரே திரும்பிப்பார்க்க வைத்தவரே
நான் அளவோடு ரசிப்பவன் என்றடுத்தவடி எழுதுதற்கு
காவியக் கவிவாலி சிந்தித்த கணத்தினிலே
அளவின்றி கொடுப்பவனென்று அடியெடுத்துக் கொடுத்தவரே
அளவின்றி கொடுத்தவரே அதற்குத்தான் சிந்தனையோ..?
கவியரசர் அழைத்தாரோ ?கவிவாலி அழைத்தாரோ..?
கவியரங்கம் நடத்திடத்தான் வானகமே சென்றீரோ..?
அந்தரங்கம் சொல்வீரா..? அந்தஅரங்கம் அந்தரத்தா..?
அண்ணா அழைத்தாரா அவர் தந்த மு. க வே
மு,க வை க்காத்திருந்த மு க நீர்தானே
மு.க மூன்று க கடமை, கண்ணியம் கட்டுப்பாடு
முத்தமிழ் அறிஞரே முரசொலிக் கலைஞரே
முத்தமிழ் கலையாக எந்நாளூம் நீரிருப்பீர்
கோவில்பட்டிக்குக் குடிநீரைத் தந்தவரே
நீராய் இருப்பீர் நிலமாய் பொறுத்திருப்பீர்
காற்றில் தமிழாய் கலந்திருந்தும் வாழ்த்தொலிப்பீர்
கனலாய் நுன்கொள்கை கனன்றிருக்கும் நெஞ்சினிலே
வானகத்தா வானகத்தை நீர் நம்ப மாட்டீரே
வா(என்) அகத்தே செந்தமிழாய் எந்நாளும் வாழ்த்தொலிப்பீர்…

எழுதியவர் : சு.ஐயப்பன் (8-Aug-18, 9:41 am)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 114

மேலே