உதிர்ந்தது சூரியன்

தென்னகத் தமிழே, தென்றல் காற்றே
திருக்குவளை தந்த திறன்மிகு தலைவோய்
முத்துவேல் அஞ்சுகத் தம்பதி பெற்ற
தட்சிணா மூர்த்தியே, கருணா நிதியாய்
அழகிரி சாமியின் அரசியல் பேச்சால்
அரசியல் வாதியாய் அடையாளம் காண
இந்தி எதிர்ப்பில் தீவிரம் காட்டி
இணையிலா அரசியல் அடிதனை ஊன்றி
வரலாற்று நாயகன் வரலாறு படைக்க
குளித்தலைத் தொகுதி வெற்றியை வழங்க
தான் போட்டியிட்ட தேர்தல் அனைத்திலும்
தேறியே வெற்றித் தேனைச் சுவைத்து
ஐம்பது ஆண்டுகள் திமுக தலைவராய்
ஐந்து தேர்தலில் தமிழக முதல்வராய்
ஆற்றிய பணிகள் அளவிடற் கரியது
அன்னவர் வழியோ அனைத்திலும் சிறந்தது
சூரியனை மேகங்கள் மறைக்க எண்ணி
சூரியனின் கிரணத்தை அடக்க எண்ணி
நோய்தாக்கம் அதிகரித்து நோய் முன்னேக
திமுக தலைவரது உடல் பின்னேக
மாலை ஆறு பத்துக்கு உதிர்ந்தது சூரியன்
அதனால் தானோ மழையும் அழுதது
எதுகையும் மோனையும் ஏறிட்டு அழைக்கவே
கூடவே தமிழும் கலங்கித் தவித்தது
தலைவனை இழந்த திமுக வினரின்
திரவிய மான திராவிட மூச்சே
நின்னை அழைத்திட்ட நிலமகள் மடியினில்
நீள்துயில் கொள்வாய் நிறைவாய் என்றுமே...

என்றும் தமிழ் பற்றுடன்
காரைக்குடி ச. சரவணன்.

எழுதியவர் : டிஜிட்டல் சரவணன், காரைக்க (8-Aug-18, 8:35 am)
சேர்த்தது : டிஜிட்டல் சரவணன்
பார்வை : 173

மேலே