‘அண்ணா, நீ இருக்கும் இடம் தேடி நான் வருகையில்’-------------மெரினாவில் ---------கருணாநிதி உடல் அடக்கம்

திமுகவில் எவர் ஒருவரைவிடவும் கருணாநிதியின் உழைப்பை அறிந்தவர், அங்கீகரித்தவர் அறிஞர் அண்ணா. “ஒருநாளைக்கு கருணாநிதி எத்தனை மணிநேரம் தூங்குகிறார் என்று அவருக்குத் தெரியாமல் பார்க்க வேண்டும்”, “தண்டவாளத்தில் தலை வைத்துப் படு என்றாலும், அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள் என்றாலும் இரண்டையும் ஒன்றாய் கருதுபவன் என் தம்பி கருணாநிதி” என்று கருணாநிதியை உச்சி முகர்ந்து பாராட்டியவர் அண்ணா. எல்லாவற்றுக்கும் மேலாக, “தமிழ்நாட்டின் பாதிச் சரித்திரத்தை நான் எழுதிவிட்டேன். மீதியை என் தம்பி கருணாநிதி எழுதுவார்” என்று சொன்னதுதான் கருணாநிதிக்கு அவர் அளித்த மிகப்பெரிய அங்கீகாரம்.

1969 பிப்ரவரி 3-ம் நாள் அந்த அண்ணாவின் மரணம், கலைஞரை கலங்கடித்தது. கண்ணீரோடு உட்கார்ந்து அவர் பேனா பிடிக்க, உள்ளத்து உணர்ச்சி எல்லாம் பேனாவின் ரத்தமாகி, காகிதத்தை நிறைத்தது.

‘‘இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..
நான் வரும்போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா?’’

என்று எழுதியபோது கையை வியர்வையும் காகிதத்தைக் கண்ணீரும் நனைத்திருந்தது.

உணர்விழந்த நிலையிலும் அண்ணா புகைப்படத்தைப் பிரமிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்த கருணாநிதிக்கு, அண்ணா சமாதியில் இடமில்லை என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

நேற்று இரவு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் உள்ளிட்டோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாளை(இன்று) காலை விசாரணைக்கு ஒத்திவைத்தனர்.

இதில் மெரினாவில் நினைவிடம் அமைக்க காமராசர், ஜானகிக்கு கருணாநிதி இடம் ஒதுக்கவில்லை. கருணாநிதி அப்போது எடுத்த நிலைப்பாட்டைப் பின்பற்றி தற்போது தமிழக அரசு எடுத்துள்ளது. முன்னாள் முதல்வர்கள், ஆட்சியில் இருக்கும் போது இறந்தவர்களையும் ஒரே மாதிரியாக இறுதிஅஞ்சலி செலுத்த முடியாது என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், வீர கதிரவன், ஆர்.விடுதலை ஆகியோர் வாதாடி வருகின்றனர். அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதிட்டார். இதற்கிடையே திமுக மனுவை எதிர்த்து அரசு சார்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘‘திமுக தலைவர் கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய அண்ணா நினைவிடம் அருகே இடம் ஒதுக்க இயலவில்லை என்பது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராக திமுக எதிராக வழக்கு தொடர முடியாது. இடம் ஒதுக்க முடியாததற்கு மத்திய அரசின் விதிகளே காரணம்’’ என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு திமுக தரப்பில் வழக்கறிஞர்கள் வாதிடுகையில், ‘‘முன்னாள் முதல்வர்கள் நினைவிடத்தை மெரினாவில் அமைப்பதற்கும், விதிகளை வகுப்பதற்கும் மத்திய அரசுக்கு அதிகாரமில்லை. இறந்தவர்களின் தகுதி கருதி, மாநில அரசே முடிவு செய்யலாம்’’ எனத் தெரிவித்தனர்.

அப்போது, நீதிபதிகள், மெரினாவில் நினைவிடம் அமைக்கக் கருணாநிதிக்கு இடம் அளிக்கத் தமிழக அரசு மறுத்ததற்கான காரணம் என்ன என்பதைக் கூறுங்கள் என்று தமிழகஅரசிடம் கேள்வி எழுப்பினார்கள்.

அப்போது தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் வாதிடுகையில், ‘‘முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கத் தமிழக அரசின் விதிமுறைகளில் இடம் இல்லை. கருணாநிதி ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜானகிக்கு இடம் மறுக்கப்பட்டது. திமுக தலைவர் மீது தமிழக அரசு மிகுந்த மரியாதை வைத்துள்ளது. கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதில் வேண்டுமென்றே திமுக அரசியலாக்குகிறது.

முன்னாள் முதல்வர்கள் காமராசர், ஜானகி அம்மாள் விவகாரத்தில் கருணாநிதி என்ன நிலைப்பாட்டைப் பின்பற்றி தமிழக அரசு இப்போது முடிவு எடுத்துள்ளது. முன்னாள் முதல்வர்களையும், பதவியில் இருக்கும்போது இறந்தவர்களையும் மரபுகள்படி ஒரேமாதிரியாகக் கருத முடியாது’’ என வாதிட்டனர்.

திமுக தரப்பில் வாதிடுகையில், ‘‘முதல்வராக இருப்பவர்களுக்கு மட்டுமே மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற சட்டம் இல்லை. அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதே சாலச் சிறந்தது.

காமராசர், காந்தி மண்டபம் ஆகியவை அடையாற்றில் உள்ளன. அவை மெரினாவில் இல்லை. இந்தத் தலைவர்களின் சித்தாந்தங்கள் திராவிட இயக்கத்தில் இருந்து வேறுபட்டவை, தலைவர்களும் வெவ்வேறானவர்கள்’’ என வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை வழங்கியது. ஒற்றைவரியில் மெரினா கடற்கரையில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.
------------------------------.


மெரினாவில் கருணாநிதி உடல் அடக்கம் செய்ய அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு


இந்த நேரத்தில், கலைஞர் மு.கருணாநிதி எழுதிய அந்தக் கவிதாஞ்சலியின் இறுதிப் பகுதியை மறு பிரசுரம் செய்கிறோம்.

‘‘பத்துச் சிலை வைத்ததினால் - அண்ணன் தமிழின்பால் வைத்துள்ள
பற்றுதலை உலகறிய அண்ணனுக்கோர் சிலை
சென்னையிலே வைத்தபோது..
ஆட்காட்டி விரல் மட்டும் காட்டி நின்றார்.
ஆணையிடுகிறார் எம் அண்ணா என்றிருந்தோம்
அய்யகோ; இன்னும்
ஓராண்டே வாழப்போகின்றேன் என்று அவர்
ஒர் விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது!
எம் அண்ணா... இதயமன்னா...
படைக் கஞ்சாத் தம்பியுண்டென்று
பகர்ந்தாயே;
எமை விடுத்துப் பெரும் பயணத்தை ஏன் தொடர்ந்தாய்?
உன் கண்ணொளியின் கதகதப்பிலே வளர்ந்தோமே;
எம் கண்ணெல்லாம் குளமாக ஏன் மாற்றிவிட்டாய்?
நிழல் நீதான் என்றிருந்தோம்; நீ கடல்
நிலத்துக்குள் நிழல் தேடப் போய்விட்டாய்: நியாயந்தானா?
நான்தானடா நன்முத்து எனச் சொல்லி
கடற்கரையில் உறங்குதியோ?...
நாத இசை கொட்டுகின்ற
நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்?
விரல் அசைத்து எழுத்துலகில்
விந்தைகளைச் செய்தாயே; அந்த
விரலை ஏன் மடக்கிக் கொண்டாய்?
கண்மூடிக் கொண்டு நீ சிந்திக்கும்
பேரழகைப் பார்த்துள்ளேன்.. இன்று
மண் மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல்
தடுப்பதென்ன கொடுமை!
கொடுமைக்கு முடிவுகண்டாய்; எமைக்
கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்:
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
கடற்கரையில் காற்று
வாங்கியது போதுமண்ணா
எழுந்து வா எம் அண்ணா
வரமாட்டாய்; வரமாட்டாய்,
இயற்கையின் சதி எமக்குத் தெரியும் - அண்ணா நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..
நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா?’’

-----------------------------------

எழுதியவர் : (8-Aug-18, 11:31 am)
பார்வை : 38

மேலே