கடல் கொண்ட கருணா

ஈர் எழுத்து இமையம்
கூர் எழுத்து புலவர்
கார் நிறத்து மேனியன்
பார் போற்றும் "கலைஞன்"

சுடர் விரித்த சூரியன்
இடர் களையும் வேந்தன்
படர்கின்ற பைந்தமிழை
தொடர்கின்ற தொண்டன்

அஞ்சுகம்மாள் பெற்றடுத்த அருமை மகன்
அஞ்சாமை குணம் கொண்ட பெருமை மகன்
அறிவிழந்தோர் பழிக்கும் கருமை மகன்
தமிழுக்கே இவன் தான் ஒருமை மகன்

புவிதனிலே பிடர் கொண்ட ஏறுதன்னை
அவிதனையும் விளக்கு போல் அவித்ததுவே இயற்கை - எங்கள்
கவித்தலைவன் கடக்கின்றான் கடற்கரை ஓரம்
தவிக்கின்ற மக்களை கண்திறந்து பாரும் ஐயா

பீறிட்டு எழும் பேச்சு எங்கே?
அதை பீரங்கி வண்டி கொண்டுபோகின்றதே

ஓய்வின்றி உழைத்த உடல் எங்கே?
அதை சந்தன பேழை தான் மூடுகின்றதே

வாய்விட்டு அழுகிறோம் வாருமையா
வாழ்க தமிழ் என்று முழங்கும் ஐயா

முக நூல் பக்கம் எல்லாம் இன்று
மு.க முகம் மலர்கிறது - நீ இன்னும்
முக கண் இரண்டையும் மூடி சாய்ந்திருப்பதேன்
எழுந்து வா தலைவா

கடல் ஓரம் நின் உடலை மூடுகின்றார்
குடல் வற்ற கத்துகிறோம் விழித்திடுவாய்
மடல் ஒன்றை நீட்டுகிறோம் பாராய் - அதில்
இன்னும் ஒரு தமிழ் கவிதை படைத்திட வாராயோ?

ஆதவன் மாய்ந்தனன்
அந்தியும் சூழ்ந்தனன்
சிந்திய கண்ணீர் கடல் கடந்து
அலை கடல் ஆள போகிறார் காவலன்

முத்தமிழே முழங்கு
"முரசொலியே" முழங்கு
தமிழ் வளர்த்த மு.க வாழ்கவென்று முழங்கு

இது இயற்கை செய்த சதியே
தி.மு.க வின் அதிபதியே
"குறளோவியம்" படைத்த முழுமதியே
எங்கள் "கருணாநிதியே"

"நெஞ்சுக்கு நீதி" படைத்தோனே
பெரியார் அண்ணா வழி அஞ்சாமல் நடந்தோனே
பஞ்சாலே ஆன மஞ்சள் நிற மாலை அணிந்தோனே
தஞ்சம் அடைகின்றாயோ உப்பு மணல் கரையிலே

வா எழுந்து வா. ஓய்வு போதும் வா.
தமிழ் அன்னை அழுகின்றாள் கேளாயோ?
உமிழ் தெறிக்க தமிழ் பேசும் உதயனே
கட்டுமரம் போல் மிதப்பேன் என்று சொல்லி
கவிழ்கின்றாயே இது நீதியா?

வா "வசன கர்த்தாவே" வா
வந்து தமிழ் அன்னை துக்கம் ஆற்று
எங்கள் துயர் ஆற்று
சீக்கிரம் வா

உன் பிரிவில் வாடும்,
நம் தாய் இளைய மகன்.
மதியரசு.

எழுதியவர் : மதியரசு (16-Aug-18, 3:56 pm)
சேர்த்தது : மதியரசு
Tanglish : kadal konda karuna
பார்வை : 83

மேலே