கண்ணுறங்கி கண்டிடடா

கண்ணுறங்கி கண்டிடடா...!!!

காற்று வரும் உன் தலை கோத..
கடலும் வரும் உன் கால் மோத...
உன் கனவெல்லாம் கைகூடும்
கண்ணுறங்கி கண்டிடடா..!

பொய்யில்லை, திருட்டில்லை...
புறம்கூற வழியே இல்லை...
நான் பெற்ற குட்டி கண்ணன் நீ
நாளெல்லாம் மகிழ்வதாய்
கண்ணுறங்கி கண்டிடடா...!

நம்பிக்கை என்றும் குறைந்திராது- உன்
நற்பெயர் என்றும் தளர்ந்திடாது...
சின்ன குட்டி உன்தன் செவிகளினை
சேர்வதென்றும் சுபங்களென..
கண்ணுறங்கி கண்டிடடா...!

நல்லவனின் நகலானாய் – என்
நம்பிக்கையின் அகலானாய்..
பெற்றவரின் பெயர் சொல்ல
நற்பெயரை பெற்றிடவே
கண்ணுறங்கி கண்டிடடா...!

காதலென்றால் தவறில்லை..
கண்ணா நீ காதலிப்பாய்...
கல்வியையும், கடமையையும்
சேர்த்தே நீ மணமுடிக்க
கண்ணுறங்கி கண்டிடடா...!

நல்லவர்க்கு நல்லவராய்..
நிறைய பேர் வாழ்ந்திடலாம்..
கெட்டவர்களுக்கும் நல்லவனாய்
வாழ்வது உன் கடமையென
கண்ணுறங்கி கண்டிடடா..!

சுகங்கள் மட்டும் வாழ்வில்லை..,
சில சோகங்களும் அதிலுண்டு..
எந்த நிலை வந்தாலும்
ஏற்றுக்கொண்டு வாழ்ந்திடவே
கண்ணுறங்கி கண்டிடடா...!

நோயொன்றும் நெருங்கிடாமல்...
நொடி கூட சோர்ந்திடாமல்..
ஆரோக்கிய வாழ்வினை
அதிகமாய் பெற்றிட
கண்ணுறங்கி கண்டிடடா...
உன் கனவெல்லாம் கைகூடும்...
கண்ணுறங்கி கண்டிடடா..!

- மணிசோமனா ஜெயமுருகன்.

எழுதியவர் : மணிசோமனா ஜெயமுருகன். (21-Aug-18, 9:55 pm)
பார்வை : 624

மேலே