சொட்ட சொட்ட காதல்

பிளிறும் களிறும்
உன்னை கண்டு மிளிரும்!

துளிர்க்கும் மழைத்துளி
உன் மடி தவழும்!

காற்றுக்கும் கைகள் முளைத்து
உன்னை தீண்ட தொடரும் ..

உன் நிகக்கண் இடுக்கினுள்
என் நித்தமும் தொலையும்..

உன் புருவ அசைவுகளில்
சிறு பூவும் பூப்பெய்தும்!

உன் சைவ கண்களில்
அசைவ பார்வை அலைமோதும்!!

உன் மெல்லிய இடை நூலகத்தில்
நான் எதுகையும் மோனையுமாய்...

சிலையழகால் சிறையாக்கினாய் !
சில நிமிடம் மரமாக்கினாய் !

உன் சிரிப்பினால் சித்தம் கலங்கும்
என் சிந்தையின் மொத்தம் மயங்கும்!

முத்து பவளம் மாணிக்கம்
இவையாவும் உன்னிடம் யாசிக்கும்!

சில நொடி தோன்றும் வானவில்லும்
உன் கண்களால் காணவே தவமிருக்கும் !!

மெண்மை
உந்தன் மேனி சொல்லும்
அதன் மேன்மை

வெண்மை
உந்தன் நிறம் சொல்லும்
உண்மை

பெண்மை
நீயே அதற்கு
பெருமை

சந்தங்கள் எல்லாம் உன்னை பாட
சண்டைகள் போடுது ஏனோ?

உன் உதடுவழி வார்த்தைகள்
கேளாத காதிலும் தேனாக பாய்ந்திடும் !

உன்னால்
கூண்டுக்கிளியும் குயிலாகும்
சிறு பட்டமும் வானூர்தியாகும்!!

பொம்மைகள் கொண்டு நீ விளையாடி
பொம்மலாட்டமும் ஆடுகிறாய் ...

திருவிழாக்களில் நீயே தேராகிறாய்..
உன்னை இழுக்கும் பக்தர்களில் நானும் ஒருவனாகிறேன்..!

குளத்தில் தாமரையே !
என் மனத்தின் தாரகையே !!

கயிறு கட்டி நீ தூலியாடா
ராட்டினமாய் உனையே சுற்றுவேன்!

உனக்கு நான் சோறுவூட்டி
நிலாச்சோறு நான் அறிவேன்!

உன் நெத்திப்போட்டுல நான் விழுந்து
என் நெஞ்சாங்கூட்டுல மீண்டுழுந்தேன்!!

நீ பூக்களின் அருகினில் போனாலே
தேனீக்கள் மொய்த்திடும் தன்னாலே...

தெருவில் நீ நடந்து சென்றால்
சாலையோரப்பூக்களும் சாய்ந்து உனையே பார்க்குமே..
உன் பாதம் பட்ட இடமெல்லாம் புதுப்பூவும் பூக்குமே..

தொலைதூரத்தில் உன் முகம்
ஆகாயத்தின் ஒற்றை நிலவு !

உன் விழி பட்டாலே
அஃறிணையும் உயர்திணையாகும் !

உன் குரல் கேட்டாலே
பூனையும் வீணை வாசிக்கும்!
புலியும் புல்லாங்குழலூதும் !

என் கற்பனையின் தேவாரமே
என் விற்பனையின் கூடாரமே!

இதழ் முத்த கோபம் கொள்!
மார்போடு மன்னித்தருள்!!

உன்னுடல் வியர்வை தான்
என் உயிர் செடிக்கு சொட்டு நீர் பாசனம் ..

உன் காதுக்குள் காதல் சொல்ல
காலமெல்லாம் காத்திருப்பேன்...

"தீண்டாமை" வேண்டாமடி
உன் கைகள் தாராயோ!!!

எழுதியவர் : குணா (23-Aug-18, 10:59 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 434

மேலே