பிற்கால நீதி நூல்கள் வசுபமாணிக்கனாரின் உரை இயல்புகளும் நடைத் தன்மைகளும்
வ.சுப.மாணிக்கனார் பிற்கால நீதி நூல்களான ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நறுந்தொகை, மூதுரை, நல்வழி, நன்னெறி, உலகநீதி ஆகியனவற்றிற்கு 1957இல் உரை எழுதியுள்ளார். இவ் உரை பல்வேறு பதிப்புகளைக் கண்டுள்ளது. இவ் உரையின் இயல்புகள் குறித்தும் நடைத் தன்மைகள் குறித்தும் விளக்குவதாக இவ் எழுத்துரை அமைகின்றது.
உரை வரலாறு
செம்மல், முதுபெரும்புலவர், பெருந்தமிழ்க் காவலர், முதுபேராய்வாளர் என்றெல்லாம் அழைக்கப்பெறும் வ.சுப.மாணிக்கனார் 17.04.1917 முதல் 25.04.1989 வரை வாழ்ந்தவர். புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரியில் பிறந்த இவரின் இயற்பெயர் அண்ணாமலை என்பதாகும். குருகுல முறையிலான தொடக்கக் கல்வியை தம் ஏழாம் வயது வரை மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையுடன் தொடர்புடைய நடேச ஐயரிடம் பயின்றார். அவரிடமிருந்துதான் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நறுந்தொகை, மூதுரை, நல்வழி, நன்னெறி, உலகநீதி ஆகியவற்றைப் கற்றறிந்திருக்கிறார். தொழில் கற்பதற்காகப் பர்மா சென்று திரும்பிய இவரது உயர்கல்விக்கு வழிகாட்டியவர் பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் ஆவார். அவரின் வழிகாட்டுதல்படி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டத்தையும் (1936-1940) சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.ஓ.எல். (1945), முதுகலைப் (1951) பட்டங்களையும் பெற்றார். தொடர்ந்து ‘தமிழில் வினைச்சொற்கள்’ எனும் ஆய்வுக்காக எம்.ஓ.எல். (1948) பட்டத்தையும் ‘தமிழில் அகத்திணைக் கொள்கைகள்’ எனும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் (1957) பட்டத்தையும் பெற்றார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் (1941-1948), காரைக்குடி அழகப்பா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் (1948-1964), முதல்வர் (1964-1970), அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் & இந்திய மொழிப்புல முதன்மையர் (1970-1977), மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் (17.08.1979 – 30.06.1982) என்று பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர் வ.சுப.மாணிக்கனார்.
தமிழகப் புலவர் குழுத் தலைவர், பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவர், தமிழ் வழிக் கல்வி இயக்கத் தலைவர், தமிழ்ப் பல்கலைக்கழக வடிவமைப்புக் குழுத்தலைவர், தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்காப்பியத் தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்த வ.சுப.மாணிக்கனார் 21 தமிழ் நூல்களையும் 4 ஆங்கில நூல்களையும் 9 நூல்களுக்கு உரையையும் எழுதியுள்ளார்.
“ஆத்திசேர் கொன்றை அழகுதமிழ் மூதுரை
பாத்திசேர் நல்வழி பண்புலகம் – பூத்த
நறுந்தொகை நன்னெறி ஏழும் குழந்தைக்
குறுந்தமிழ் என்றறிந்து கொள்” (2006:7)
என்று பிற்கால நீதிநூல்களின் பெருமையை வெண்பாவாகப் பாடிய வ.சுப.மாணிக்கனார்,
“…தொல் மரபுப்படி “ஏழிளந்தமிழ்” மீண்டும் தொடக்கப் பள்ளிகளில் முழு நூல்களாக இடம்பெற வேண்டும்” (2006:7)
என்ற கருத்துடையவராக விளங்கினார்.
ஆத்திசூடி அமைப்பில் ‘தமிழ்சூடி’ எழுதியவர் (2006:10) வ.சுப.மாணிக்கனார். காரைக்குடியில் தமிழ்ச்சங்கம் அமைத்து அதன் தலைவராய் விளங்கிய அவர், இப்பிற்கால நீதிநூல்களைச் சிறுவர்கள் மனதில் பதியச் செய்ய முயற்சித்து,
“எளிய தெளிவுரை வகுத்துத் தமிழ்ச் சங்க வெளியீடாகப் பல பதிப்புகள் வரச் செய்தார்” (2006:10).
இந்நிலையில் ஆத்திசூடி முதலான இப்பிற்கால நீதிநூல்களின் முதல்பதிப்பு 1957இல் வெளிவந்துள்ளது. இதற்கு, ‘ஏழிளந்தமிழ்’ என்று பெயர்சூட்டி மகிழ்ந்துள்ளார் வ.சுப.மாணிக்கனார். இதன் மறு அச்சு, இவரின் நூல்கள் நாட்டுடைமை (2006) ஆக்கப்பட்டதன் பின்னர் 2006இல் மணிவாசகர் பதிப்பகத்தின் வழியும் 2007இல் தமிழ் நிலையத்தின் வழியும் 2014இல் சந்தியா பதிப்பகத்தின் வழியும் வெளியிடப்பெற்றுள்ளது.
இவரின் உரையைத் தழுவி எழுதப்பெற்ற ஓர் உரை பதிப்புச்செம்மல் ச.மெய்யப்பன் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 2009இல் முதற்பதிப்பாகவும் 2012இல் இரண்டாம் பதிப்பாகவும் வெளிவந்துள்ளது. நாட்டுடைமை ஆக்கப்பட்டதன் பின்னர் முதன்முதலில் இவரின் ஏழிளந்தமிழ் உரைகளைப் பதிப்பித்த மணிவாசகர் பதிப்பகம் தற்போது வெளியிடாமல் இவரின் உரைத்தழுவல் உரையை வெளியிட்டிருப்பது வேதனைக்குரியதாக அமைகிறது.
உரை இயல்புகள்
வ.சுப.மாணிக்கனாரின் பிற்கால நீதிநூல் உரைகள் பின்வரும் இயல்புகளைக் கொண்டமைகின்றன. அவை:
கருத்துரைத் தன்மையில் அமைதல்
விளக்கவுரை அளித்தல்
தொகுத்துக் கூறல்
தலைப்பிட்டு உரை எழுதுதல்
கொண்டு கூட்டு நெறி பயன்படுத்துதல்
வடசொல் பயன்பாடு
சமய நம்பிக்கை வெளிப்பாடு.
வழக்குச் சொல் பயன்பாடு
-------------
கருத்துரைத் தன்மையில் அமைதல்
ஒரு நூல் உணர்த்துகின்ற கருத்தைத் தெளிவாக்கி அமைவது கருத்துரையாகும். இது சுருக்கமாக அமைவதால் இதனைக் குறிப்புரை என்றும் குறிப்பிடலாம். இத்தகைய கருத்துரைத் தன்மையிலேயே வ.சுப.மாணிக்கனாரின் பிற்கால நீதிநூல் உரைகள் அமைகின்றன. குறிப்பாக, ஒவ்வொரு அடிகளில் அமையும் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரைகள் அவ்வாறே அமைகின்றன. பிற நூல்களில் அரிதாகச் சில இடங்களில் கருத்தை உணர்த்தும் தன்மையில் இவரின் உரை அமைகின்றது.
“ஈவது விளக்கேல்” (ஆத்.4)
“ஒருவர் மற்றொருவர்க்குக் கொடுப்பதைத் தடுக்காதே” (2007:5)
“ஊக்க முடைமை ஆக்கத்திற் கழகு” (கொன்.86)
“மனம் தளராமை எல்லா முன்னேற்றமும் தரும்” (2007:24)
என்பனவற்றை இதற்குச் சான்றுகளாக அளிக்கலாம். மேலும்,
“அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அதுஏதிங் கென்னில்நீ சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் கூலி
சகலகலை யோதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவச்சி கூலி
மகநோவு தனைத்தீர்த்த மருத்துவன் கூலி
இன்சொலுடன் இவர்கூலி கொடாத பேரை
ஏதேது செய்வானோ ஏமன் தானே” (உலக.11)
என்ற உலகநீதிப் பாடலுக்கு,
“வண்ணான், நாவிதன், கற்பித்த ஆசிரியர், பேறுபார்த்த மருத்துவச்சி, கொடிய நோய் தீர்த்த மருத்துவன் ஆகிய ஐவருக்கும் உரிய கூலியைக் கொடுத்துவிட வேண்டும். அவ்வாறு கொடாதவர்க்கு இயமன் என்னென்ன தண்டணைகள் அளிப்பானோ?” (2007:95)
என்று உரை எழுதுகிறார். இவ்வாறு தேவையற்ற சொற்களைப் பயன்படுத்தாமல் சுருக்கமாகப் பாட்டின் கருத்தைத் தெளிவாக்கும் கருத்துரைத் தன்மை, இவர் உரையில் பரவலாகக் காணப்பெறுகிறது. மேலும், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், உலகநீதி ஆகியவற்றின் முதல் பாடல்களான கடவுள் வாழ்த்துப் பாடல்களின் உரை தொடங்கும் போது ‘கருத்து’ என்று தலைப்பிட்டு உரை எழுதுவதும் இவர் உரை கருத்துரை என்பதையே தெளிவுபடுத்துகிறது.
நான்கு அடிப் பாடல்கள் சிலவற்றிலும் கருத்துரைத் தன்மை காணப்பெறுகிறது. இதற்குப் பின்வரும் நல்வழிப் பாடலைச் சான்றாகக் குறிக்கலாம்.
“வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரஞ் சொன்னார் மனை” (நல்.23)
என்ற நல்வழிப் பாடலுக்குப் பின்வருமாறு உரை எழுதுகிறார் வ.சுப.மாணிக்கனார்.
“நீதி மன்றத்தில் ஒரு சார்பாகப் பொய் சொன்னவன் வீட்டில் பேய் சேரும்; எருக்கஞ்செடி வளரும்; பாதாள மூலி என்னும் கொடி படரும்; மூதேவி தங்குவாள்; பாம்பு குடியிருக்கும். அதாவது அவன் குடியோடு அழிவான்” (2007:62).
இவ் உரையில், ‘அதாவது அவன் குடியோடு அழிவான்’ என்பது கருத்துரைத் தன்மையில் அமைவதாகும்.
விளக்கவுரை அளித்தல்
முதலில் பாடலின் கருத்தைத் தெளிவாக்கிவிட்டு அதுதொடர்பாகக் கூடுதல் விளக்கத்தைத் தருவது உரையாசிரியர்களின் பொது மரபாகும். இத்தன்மையில்தான் உரையாசிரியர்களின் புலமைத்துவம் வெளிப்படும். இத்தன்மையும் இப்பிற்கால நீதிநூல் உரைகளில் காணப்பெறுகிறது. இதனை, நறுந்.26,27,29,60,62, நல்.க.வா. ஆகிய 6 இடங்களில் காண இயலுகிறது.
“கலக்கினும் தண்கடல் சேறா காது” (நறுந்.27)
எனும் நறுந்தொகை அடிக்கு,
“கடலை எப்படிக் கலக்கினாலும் சேறாகாது; தெளிவாகவே இருக்கும்” (2007:29)
என்று உரை எழுதும் வ.சுப.மாணிக்கனார்,
“பால், பொன், சந்தனம், அகில், கடல் ஆகிய ஐந்தும் தம்மைப் பிறர் வருத்திய போதும் தமக்குரிய இயல்பில் மாறுபடுவதில்லை. அவை போலவே பெரியோர் தமக்கு மிகுந்த துன்பம் வந்தாலும் தம் உயர் குணங்களிலிருந்து மாறுபடார்” (2007:30)
என்று விளக்கம் அளிக்கிறார். கடலைப் பற்றிக் கூறும் மேற்கண்ட அடிக்கு அதனை ஒத்த, பெருமையுடைய பால், பொன், சந்தனம், அகில் ஆகியவற்றையும் கூறி அவற்றைப்போலப் பெரியோர் திகழ்வர் என்று கூறும் இவரின் உரை இயல்பு போற்றத்தக்கதாகும்.
“பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா” (நல்.க.வா.)
என்ற நல்வழியின் கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு,
“விநாயகப் பெருமானே! பாலும் தேனும் வெல்லப் பாகும் பருப்பும் ஆகிய நான்கு பொருட்களை நான் உனக்குப் படைப்பேன்; எனக்கு இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் தர வேண்டுகிறேன்” (2007:53)
என்று உரை எழுதுகிறார். இதில், ‘இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும்’ என்பது விளக்க நிலையில் அமைவதாகும். ‘சங்கத் தமிழ் மூன்றும்’ என்பதற்கான விளக்கமாக இது அமைகிறது. இவ்வாறாக, பாடல் முழுமைக்குமான விளக்கம், குறிப்பிட்ட அடிக்கான விளக்கம் என்ற இருநிலைகளில் இவரின் விளக்கவுரைத் தன்மை அமைகிறது.
தொகுத்துக் கூறல்
ஒரு நூலுக்கு உரை எழுதும் உரை ஆசிரியர் நீண்ட பாடலாக இருப்பின் அப்பாடலுக்கு இடையிலோ, தனித்த அதிக எண்ணிக்கையிலான பாடல்களாக இருப்பின் குறிப்பிட்ட பாடல்கள் நிறைவடைந்த பின்னரோ அவற்றின் பொருளைத் தொகுத்துக் கூறி உரை எழுதுவர். பத்துப்பாட்டு உரைகளில் இத்தன்மையைப் பரவலாகக் காண முடியும். இது பாடல் புரிதலுக்கு வழி வகுக்கக் கூடியதாகும்.
இத்தகைய தொகுத்துக் கூறும் தன்மையை வ.சுப.மாணிக்கனார் தம் நறுந்தொகை உரையில் பயன்படுத்தியுள்ளார். நறுந்தொகையின்,
“தன்னா யுதமும் தன்கையிற் பொருளும்
பிறன்கையிற் கொடுக்கும் பேதையும் பதரே” (நறுந்.71)
என்ற 71ஆம் பாடல் நிறைவுற்றபின் அதற்கான பொருளைக் குறித்துவிட்டு,
“65 முதல் 71 வரையுள்ள செய்யுட்களில் அந்தணப் பதர், அரசப்பதர், வணிகப்பதர், வேளாளப்பதர், இல்லறப்பதர், தொழிலாளிப்பதர் என ஆறுவகைப் பதர்களை ஆசிரியர் கூறியுள்ளார்” (2007:37)
என்று எழுதுகிறார். இவ்வாறு தொகுத்துக் கூறும் இவ் இயல்பு இவ்வோரிடத்தில் மட்டுமே இவ்வுரையைில் காணப்பெறுகிறது.
தலைப்பிட்டு உரை எழுதுதல்
ஓர் உரை தனிப்பாடல்களுக்கானதாக இருந்தாலும் நெடும்பாடல்களுக்கானதாக இருந்தாலும், பிற்கால உரையாசிரியர்கள் அப்பாடல்களுக்கு அப்பாடல்களின் பொருண்மைகளைத் தலைப்பிட்டு உரை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இது மூதுரை, நல்வழி எனும் இருநூல்களுக்கான வ.சுப.மாணிக்கனாரின் உரைகளில் காணப்பெறுகிறது.
ஏழு நூல்களில் உலகநீதிக்கு மட்டும் ‘காப்பு’ என்றும், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை ஆகிய நூல்களுக்குக் ‘கடவுள் வணக்கம்’ என்றும், நறுந்தொகை, நல்வழி, நன்னெறி ஆகியவற்றிற்குக் ‘கடவுள் வாழ்த்து’ என்றும் தலைப்பிட்டு இறைவணக்கப் பாடல்களை அமைத்துள்ளார் வ.சுப.மா.. பிற பாடல்களுக்கு ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நறுந்தொகை, உலகநீதி தவிர்ந்த பிறவற்றிற்குத் தலைப்பின்றி உரை எழுதுகிறார். நறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு அடுத்துள்ள பாடலில் ‘நறுந்தொகை படிப்பதால் வரும் பயன்’ என்று தலைப்பிட்டு எழுதுகிறார்; பிற பாடலடிகளுக்கு எவ்விதத் தலைப்பையும் அளிக்கவில்லை.
மூதுரையில், நன்மை செய்தால் நன்மை வரும், நல்லோர்க்குச் செய்த உதவி நிலையாக நிற்கும், இளமையில் வறுமை, மேன்மக்கள் இயல்பு, காலமறிந்து செய்தல், உயிரினும் மானம் பெரிது, அறிவு செல்வம் குணம் அமைதல், நல்லார் தொடர்பால் வரும் நன்மை, தீயவர் தொடர்பால் வரும் தீமை, நல்லோரால் எல்லார்க்கும் நன்மை, துணை வலிமை வேண்டும், உருவமும் குணமும், கல்லாதவன் காட்டுமரமாவான், போலி அறிவின் இழிவு, தீயோர்க்கு உதவின் தீங்கே வரும், அடக்கத்தை இழக்காதே, உண்மையான உறவினர், கெட்டாலும் மேன்மக்கள் குணம் மாறார், ஆசையாற் பயனில்லை, உடன்பிறப்பும் அயலாரும், மனையாளும் மனையும், ஊழின்படியே நடக்கும், சினத்தில் மூவகை நிலை, குணமும் தொடர்பும், வஞ்சனையுடையார் ஒளிந்து இருப்பர், கற்றோர் சிறப்பு, நால்வகை எமன்கள், கேட்டிலும் பண்பு கெடாமை, நிலையில்லாத வாழ்வு, துன்பம் செய்வார்க்கும் இன்பம் செய்தல் ஆகிய தலைப்புகள் காணப்பெறுகின்றன.
நல்வழியில் கடவுள் வாழ்த்துத் தவிர்ந்த பிற பாடல்களுக்கு, நன்மையே செய்க, உயர்குலம் இழிகுலம், ஈகையின் பயன் வீடுபேறு, காலம் அறிந்து செய்க, கவலையடைதல் கூடாது, பேராசை கூடாது, ஞானிகள் பற்றற்று இருப்பர், ஒழுக்கம் பொருளின் சிறந்தது, குடிப்பிறந்தார் வறுமையிலும் உதவுவர், கொடுத்து உண்டு வாழ்க, வயிற்றின் கொடுமை, உழவின் உயர்வு, நம்மால் விலக்க இயலாதன, மானமே உயிரினும் சிறந்தது, சிவாயநம, வியத்தகு மேன்மை, தீவினையே வறுமைக்கு வித்து, அடிப்பவர்க்கே கொடுப்பர், உயர்நோக்கம் இன்மை, விலைமகள் தொடர்பு, வஞ்சனையில்லார்க்கு வாழ்வு சிறக்கும், புதைத்த பணத்தால் யாருக்குப் பலன்?, வழக்கல் ஓரம் சொன்னவர் மனைபாழ், வாழ்க்கை மாண்புகள் ஐந்து, வரவுக்கேற்ற செலவு, பசிவந்திடப் பத்தும் போகும், எல்லாம் இறைவன் செயல், மனவமைதி வேண்டும், கொடையாளருக்கு எல்லாரும் உறவினர், விதியின் தன்மை, இதனினும் இது நன்று, வன்சொல்லும் இன்சொல்லும், பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை, அறிவுடையோரும் பேதையும், பிறன்மனை விரும்பாமை, வீடு அடைதல், உண்மை நிலை, முப்பதில் முதல்வனை அறி, சிறந்த நூல்கள் ஆகிய தலைப்புகளை அளித்துள்ளார்.
நன்னெறியின் கடவுள் வாழ்த்துத் தவிர்ந்த பிற பாடல்களுக்குப் பின்வரும் தலைப்புகளை அளிக்கிறார். புகழ் கருதாமல் உதவுக, பெரியோர் வன்சொல், முறையறிந்து கொள்க, செல்வப் பயன், பிரியாத நட்பின் சிறப்பு, கணவன் மனைவி கருத்தொற்றுமை, கல்விச் செருக்குக் கூடாது, சினங்காத்தல் சிறப்பு, வல்லோர் துணை வலிமை, விழுமியோர் இயல்பு, மெய்யறிவாளரும் புலன்களும், உடம்பில் உயிர்தங்கல் வியப்பு, உள்ளதற்குத் தக உதவுக, செல்வச் செருக்குக் கூடாது, வாழ்வுக்கு அன்பு அடிப்படை, உயர்ந்தோர் உதவும் முறை, வன்மையிலும் உதவி, இன்சொல் இனிமை தரும், நல்லோர் வரவு நல்கும் இன்பம், கருணை உள்ளத்தியல்பு, கல்லார் செருக்கு கற்றார்முன் அடங்கும், பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை, மனவுறுதி வேண்டும், கீழோர் பிறர் குற்றமே பேசுவர், கீழோர் சேர்க்கையால் சிறப்புக் கெடும், உருவத்தைக் கொண்டு மதிப்பிடாதே, கைம்மாறு கருதாது உதவுக, வெறுப்பிலும் மேலார் உதவுவர், பத்தியுடையார்க்கு அச்சமில்லை, காலத்தில் அறஞ் செய்க, பிறர் துயரம் தாங்குக, முறையறிந்து அறம் செய்க, பெரியோர்க்குக் காப்பு வேண்டாம், பெரியோர் பழிக்கு அஞ்சுவர், மேன்மக்கள் கற்றோரை விரும்புவர், தக்கார்க்கு உதவுக, தற்புகழ்ச்சியால் தாழ்வு, நல்லோர் தொடர்பு நலம் தரும், தீயோர் தொடர்பு தீமை தரும், அரசரினும் அறிஞரே சிறந்தவர் என்பன அவை.
இவ்வாறு தலைப்பிட்டு உரை எழுதும் தன்மை பாடலைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. கற்றல், கற்பித்தல் முறைக்கு இது இன்றியமையாததாகவும் அமைகிறது.
கொண்டு கூட்டு நெறி
தொல்காப்பியத்தில் ‘மாட்டு’ என்று குறிக்கப் பெற்ற இது நச்சினார்க்கினியாருக்குப்பின் கொண்டு கூட்டாக வளர்ந்தது. பின்னர் இது ஒரு தனிநெறியாக வளர்க்கப்பெற்று உரையாசிரியர்களால் பயன்படுத்தப் பெற்றுள்ளது. நூலின் பொருட்புரிதலுக்கு இந்நெறி பெருந்துணை புரிகின்றது என்றாலும் சில இடங்களில் வலிந்து அமைந்து விடுவதும் உண்டு. சரியான முறையில் இதனைப் பயன்படுத்தும்போது பாடலின் பொருளைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இவ்இயல்பைப் பயன்படுத்தாத உரையாசிரியர்களே இல்லை என்று கூறலாம்.
இத்தகு தன்மையுடைய இவ்இயல்பு வ.சுப.மாணிக்கனாராலும் பயன்படுத்தப் பெற்றுள்ளது. அவரின் மூதுரை, நன்னெறிப் பாடல்களுக்கான உரைப்பகுதிகளில் இது பயன்படுத்தப்பெற்றுள்ளது. சான்று வருமாறு:
“நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா – நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தரு லால்” (மூது.1)
எனும் இப்பாடலுக்கான பொருள் கொண்டு கூட்டுத் தன்மையில் வ.சுப.மாணிக்கனாரால் அளிக்கப்பெற்றுள்ளது. அப்பொருள் வருமாறு:
“தென்னைமரம் வேரால் உண்ட நீரை இனிய சுவையுடைய இளநீராக்கி முடியாலே தருகின்றது. அதுபோல, நாம் பிறர்க்குச் செய்யும் உதவி நமக்குத் தவறாமல் வந்து சேரும். ஆதலால் என்றும் நன்மையே செய்க” (2007:40-41).
இப்பாடலின் 3,4ஆம் அடிகளுக்கான பொருள் முதலிலும் முதலிரண்டு அடிகளுக்கான பொருள் இரண்டாவதுமாகச் சொல்லப்பெற்று, இப்பாடலுக்கான பொருள் விளக்கம் அமைந்துள்ளது. இவ்வாறு தேவையான இடங்களில் மட்டுமே தெளிவாக, சிறப்பாக இக் கொண்டுகூட்டு பயன்படுத்தப்பெற்றுள்ளது. மாறாக வலிந்து அளிக்கப்பெற்றனவாக இது திகழவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.
வழக்குச் சொல் பயன்பாடு
உரையாசிரியர்கள் அனைவரும் நூல் தோன்றிய கால வழக்கைப் பதிவு செய்ததை விட, உரை எழுதப்பெற்ற கால வழக்கத்தையே மிகுதியாகப் பதிவு செய்துள்ளனர். உரையாசிரியர்கள் கால வழக்கத்தைப் பயன்படுத்திப் பனுவல் தரும் பொருளை உணர்த்துதல் உரை மரபில் பரவலாக இருந்து வருகிறது. இத்தன்மை வ.சுப.மாணிக்கனாராலும் பின்பற்றப்பெற்றுள்ளது. இவர், தம் உரையில் வழக்குச் சொற்றொடர்களை அரிதாகக் கையாள்கிறார். ‘நீராம்பல்’ (மூது.7:1), என்பதற்கு, ‘அல்லிக்கொடி’ (2007:43), என்றும் ‘நாகம்’ (மூது.25:1), என்பதற்கு, ‘நாகப்பாம்பு’ (2007:50), என்றும் குறிப்பிடுவதை இதற்குச் சான்றுகளாகக் குறிப்பிடலாம்.
உரையைப் படிப்பவர் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டே உரையாசிரியர்கள் பேச்சு வழக்கில் பயன்படுத்துவதை உரையில் காட்டுகின்றனர். இது காலத்தின் தேவையும் ஆகும்.
வடசொல் பயன்பாடு
வடசொல் என்பது தொன்றுதொட்டே தமிழ் மொழியில் பயின்று வந்துள்ளது. இதற்கு,
“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” (தொல்.சொல்.எச்சம்.5)
என்ற தொல்காப்பிய நூற்பா சான்றாகும். வடசொற்களும் வட எழுத்துகளும் தொல்காப்பியம் தோன்றிய காலத்திலேயே தமிழோடு கலந்துவிட்டது என்பதனை இதன்வழி அறியலாம். இன்றும் சில சொற்களைத் தமிழ் என்று கூறுவதா? வடமொழி என்று கூறுவதா? என்பதான குழப்பங்கள் நீடித்துக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில்தான் உரையாசிரியர்கள் பயன்படுத்துகின்ற வடமொழிச் சொற்களை நாம் பார்க்க வேண்டி உள்ளது. மேலும், ‘வைணவ வியாக்கியானர்கள்’ பயன்படுத்திய மணிப்பிரவாள நடையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதாகவே உள்ளது. தனித்தமிழ் மரபைப் போற்றியவர்களின் தொடக்ககால எழுத்துகளிலும் இவ்வடமொழிக் கலப்பைக் காண இயலுகிறது. இவ்வகையில், தமிழரின் அகவாழ்க்கை மரபு குறித்துத் ‘தமிழ்க்காதல்’ எழுதிய வ.சுப.மாணிக்கனாரின் ஏழிளந்தமிழ் உரையிலும் வடசொற்கள் காணப்பெறுவது குறிப்பிடத்தக்கதாக அமைகிறது. இச்சொற்கள் அரிதாகவே காணப்பெறுகின்றன. சான்று வருமாறு:
“தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்” (நல்.40:1)
என்ற அடிக்கு உரை எழுதும் வ.சுப.மா., ‘திருநான் மறைமுடிவு’ என்பதற்கு உபநிடதம் என்று பொருள் குறிக்கிறார்.
“பொன்னணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி
மன்னும் அறிஞரைத்தான் மற்றொவ்வார் – மின்னுமணி
பூணும் பிறவுறுப்புப் பொன்னே அதுபுனையாக்
காணுங்கண் ஒக்குமோ காண்” (நன்.40)
என்ற பாடலில் வரும் ‘அணி’ என்ற சொல்லுக்கு உரை முழுவதிலும் ‘ஆபரணம்’ என்றே பொருளுரைக்கிறார். இவ்வாறு இவ்விரு இடங்களில் மட்டும் வடசொற்களைப் பயன்படுத்தியுள்ளார் வ.சுப.மாணிக்கனார்.
சமய நம்பிக்கை வெளிப்பாடு
உரை எழுதும் ஒவ்வொருவரும் தாம் சார்ந்திருக்கும் சமயம் தொடர்பான பதிவை ஏதேனும் ஓரிடத்தில் பதிய வைத்து விடுகின்றனர். இதை வைத்துத்தான் முற்கால உரையாசரியர்களின் சமயத்தைப் பற்றி நம்மால் அறியமுடிகிறது. இதற்கு வ.சுப.மாணிக்னாரும் விதிவிலக்கல்ல. இவர்தம் உரையில் 8 இடங்களில் அவரது சமய நம்பிக்கைப் பதிவுகள் காணப்பெறுகின்றன. அவை வருமாறு:
“சிவபெருமான் விரும்பும் விநாயகக் கடவுளைப் பலமுறை வாழ்த்தி வணங்குவோம்” (ஆத்.க.வ.)
“சிவபெருமானின் திருக்குமரனாம் விநாயகக் கடவுளின் திருவடிகளை நாள்தோறும் வணங்குவோம்” (கொ.வே.க.வ.)
“ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளாகிய விநாயகரின் திருவடிகளை வணங்குவோம்” (நறுந்.க.வா.)
“வலிமை பொருந்திய அழகிய உடலினையும் தும்பிக்கையையும் உடைய விநாயகக் கடவுளின் திருவடிகளை…” (மூது.க.வ.)
“விநாயகப் பெருமானே! பாலும் தேனும் வெல்லப் பாகும் பருப்பும் ஆகிய…” (நல்.க.வ.)
“ ‘சிவாயநம’ என்னும் திருவைந்தெழுத்தை இடையறாமல் நினைந்திருப் போர்க்கு…” (நல்.15)
“ஒளிவீசும் சடைமுடியையுடைய விநாயகக் கடவுளின் திருவடிகளை வணங்கினால்,…” (நன்.க.வா.)
“சிவபெருமானைச் சார்ந்துள்ளமையால் பாம்பு தன்னினும் வல்லமையுடைய கருடனைக்கண்டு அஞ்சாது” (நன்.9)
“ ‘உலகநீதி’யைச் சொல்வதற்கு நூலறிவால் அறியமுடியாத பெருமையினை யுடைய யானைமுகக் கடவுள் துணையாவார்” (உலக.கா.)
இச்சான்றுகளில் வரும் ‘சிவபெருமான், விநாயகக் கடவுள், ஓம் எனும் பிரணவ மந்திரம், விநாயகர், விநாயகப் பெருமான், ‘சிவாயநம’ என்னும் திருவைந்தெழுத்து, யானைமுகக் கடவுள்’ ஆகிய சொற்றொடர்கள் வ.சுப.மாணிக்கனாரின் சமய நம்பிக்கையை வெளிப்படுத்துவனவாகும். பாடலடிகளில் இத்தன்மையைக் குறிக்கும் சொற்றொடர்கள் வந்திருந்தாலும் ‘பெருமான், கடவுள்’ என்பன இவரது இறைநம்பிக்கையின் வெளிப்பாடாகவே அமைகின்றன.
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் சிவவழிபாட்டிலும் (9 நகரக் கோயில்கள்) விநாயகர் வழிபாட்டிலும் (பிள்ளையார்பட்டி) மிகுந்த ஈடுபாடு உடையவர்கள் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். இம்மரபில் தோன்றிய இவரின் உரையிலும் இவ்வகையிலான இறை நம்பிக்கை காணப்பெறுவதென்பது வியப்பிற்குரியதொன்றில்லை.
நடைத்தன்மைகள்
பொதுவாக உரையாசிரியர்கள் அனைவரும் பண்டித நடையைப் பின்பற்றியே உரை எழுதுவர். ஆனால், வ.சுப.மாணிக்கனார் இதிலிருந்து சற்று மாறுபட்டுப் பொருட்புரிதலை அடிப்படையாகக் கொண்டு தம் உரைக்கான நடைத்தன்மையை அமைத்துக் கொள்கிறார். அவரின் ‘ஏழிளந்தமிழ்’ உரைக்கான நடைத்தன்மைகள் பின்வருமாறு அமைகின்றன. அவை:
எளிய நடை
விளித்தொடர் நடை.
எளிய நடை
சிறு சிறு தொடர்களைக் கையாண்டு அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதுவதே எளிய நடை ஆகும். கல்கியின் புதினங்கள் தொடக்ககாலத்தில் பெருவெற்றி பெற்றதற்குக் காரணம் அவரின் எளிய நடையே என்பார் இரா. அறவேந்தன் (2005:29-34).
உரைநடை, புதினம், சிறுகதை ஆகியவற்றில் பயன்படுத்தப்பெறுகின்ற இவ் எளிய நடையை, வ.சுப.மாணிக்கனார் தம் உரையிலும் பயன்படுத்தி அனைவருக்கும் பொருள் தெளிவை ஏற்படுத்துகிறார்.
“சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி” (நல்.2)
என்ற பாடலுக்கு,
“துன்பப்படுவோர்க்குக் கொடுத்து உதவுபவர் உயர்குலத்தார் ஆவர். அங்ஙனம் கொடாதவர் தாழ்ந்த குலத்தவர் ஆவர். உண்மை நூலில் சொல்லப்பட்ட கருத்தும் இதுவேயாகும். ஆதலால் பிறவியினால் உயர்வு தாழ்வு இல்லை” (2007:54)
என்று சிறுசிறு தொடர்களைக் கையாண்டு எளிமையாக, அனைவருக்கும் புரியும் வகையில் உரை எழுதியுள்ள திறம் போற்றத்தக்கதாகும்.
விளித்தொடர் நடை
விளித்தொடர் எந்தெந்தப் பாடல்களில் பயின்று வருகின்றனவோ அந்தந்தப் பாடல்களுக்கான உரையில் வ.சுப.மாணிக்கனாரும் விளித்தொடர்களைப் பயன்படுத்தி உரை எழுதுகிறார். இத்தன்மை நன்னெறி, உலகநீதி ஆகிய இரண்டு நூல்களின் உரைகளில் காணப்பெறுகின்றது.
நன்னெறியில், பெண்ணே (நன்.1,2,3,5,12,13,14,17,20,23,34,37,39), மதிபோன்ற முகத்தை யுடையவளே (நன்.6), நற்குணமுடைய பெண்ணே (நன்.15,38), ஒலிக்கின்ற வளையல் அணிந்த பெண்ணே (நன்.18), அழகிய கண்களையுடையவளே (நன்.25), இன்சொல்லாய் (நன்.29), சிறந்த அணிகலன்களையுடைய பெண்ணே (நன்.31), அழகிய நெற்றியை உடையவளே (நன்.32), வேல்போன்ற கண்களையுடையவளே (நன்.35) ஆகிய விளிச்சொற்களும் உலகநீதியில், நெஞ்சமே (உலக.1), மனமே (2,3,4,5,6,7,8,9,10) ஆகிய விளிச்சொற்களும் பயன்படுத்தப்பெற்றுள்ளன.
இவ்விளிச்சொற்கள் பொருட்புரிதலைத் தெளிவுபடுத்தவும் உரையை எளிமைப்படுத்தவும் உதவி புரிகின்றன.
இவ்வகையில், வ.சுப.மாணிக்கனாரின் ‘ஏழிளந்தமிழ்’ என்று அழைக்கப்பெறும் பிற்கால நீதிநூல்களுக்கான உரை அனைவருக்கும் புரிய வேண்டும் என்ற எண்ணப் பின்னணியில் உருவாக்கப்பெற்றதாக அமைகிறது. உரை இயல்புகள் பொதுவானதாக இருந்தாலும் நடைத்தன்மைகள் இவருக்கே உரிய தனித்தன்மைகளாக அமைகின்றன என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.
துணைநின்றவை
அறவேந்தன் இரா., இலக்கியக் கருத்தாக்கத்தில் நெறியும் பிறழ்வும், தாயறம், குமரன் நகர், திருச்சிராப்பள்ளி, 2005
கோபாலையர் தி.வே. & அரணமுறுவல் ந. (பதி.), தொல்காப்பியம் – சொல்லதிகாரம் (சேனாவரையம்), தமிழ்மண் பதிப்பகம், தியாகராய நகர், சென்னை, 2003
மாணிக்கனார் வ.சுப. (உரை.), ஏழிளந்தமிழ், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை, 2006
…, நீதி நூல்கள் (ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நறுந்தொகை, மூதுரை, நல்வழி, நன்னெறி, உலகநீதி), தமிழ் நிலையம், தியாகராய நகர், சென்னை, 2007
…, ஏழிளந்தமிழ் (நீதி நூல்கள்), சந்தியா பதிப்பகம், சென்னை, 2014
மெய்யப்பன் ச.(பதி.), நீதிநூல் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை, 2012 (இ.ப.)
முனைவர் மா.பரமசிவன்
தமிழ் உதவிப்பேராசிரியர்,
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி (தன்னாட்சி)
சிவகாசி – 626 130