என் மன வீணை இது

என் மன வீணை இது....

விரல்மீட்டும் நரம்பிழையில்
இதமான அதிர்வுகள்
ஏழு ஸ்வரங்களாகி
இசைந்து பிறந்திடும் ராகங்கள்....

மடிமீது நான் ஏந்தி
கைவிரல் நுனியில் வருடுகையில்
கனமான மனம் கரைந்து
இறகாகி பறந்திடும் காற்றினில்

எந்த ராகம் மீட்டுவது
எண்ணி சிந்தை தேடுகையில்..
பெண் பார்க்கும் படலத்தில்
நாணி நளினித்து மீட்டிய
வசந்தா ராகம் முந்திவரும்....

முதல்முறையாய் அரங்கில் அமர்ந்து
விழிபிதுங்கி திக்குமுக்காடிய
ஶ்ரீராகம் பின் நினைவில் வரும்....

தோழியரை நெகிழ்விக்க
“கவிதை அரங்கேறும் நேரம்...”
மழலைகளை மகிழ்விக்க
“கொஞ்சிப் கொஞ்சிப் பேசி...”
ஆழ்மனதை துயில்விக்க
“இராசாத்தி ஒண்ண காண நெஞ்சு...”
திரையிசைப் பாடல்கள்
அடுக்கடுக்காய் துள்ளி வரும்....

தனிமை என்னை வாட்டும்போதும்
அமைதியை இதயம் நாடும்போதும்
இணையாகி மீட்டிடும் என்மன வீணையிது
துணையாகிக் கூட்டிடும் இதமான ராகமிது....

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (28-Aug-18, 10:41 am)
Tanglish : en mana veenai ithu
பார்வை : 83

மேலே