ஹைக்கூ தோட்டம்

குழந்தைகள் எண்ணும்போது மட்டும்
நட்சத்திரங்கள் பத்துக்குள்ளே முடிந்து விடுகிறது
எப்போதும்.

குழந்தைகளின் அழுகைக்கும் சிரிப்புக்குமான
இடைவெளி இரண்டு அங்குலம் தான்
கன்னத்தில் இருக்கும்
கண்ணீரைத் துடைக்க மறந்துவிட்டு
சிரிக்க தயாராகிறார்கள்.

உதடுகளைக் குவிக்காமலே முத்தமிட்டு
சத்தமில்லாமல் முத்தமிடும் வித்தையை
கற்றுத்தருகிறார்கள்.

வாசலில் அம்மா க்களும்
வீட்டினுள் குழந்தை களும்
கோலமிடுகிறார்கள்.

கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில்
சேலை கட்டிய எல்லாருமே
அம்மாக்கள்தான் குழந்தை களுக்கு...

கடவுளும் பொம்மைகளும்
குழந்தைகளுடன் பேசிவிடுகிறார்கள்
யாருக்கும் தெரியாமல்...

'மன்னிப்பு 'என்ற வார்த்தைக்கு
அர்த்தம் தெரியாமலே
எல்லோரையும் மன்னித்துவிடுகிறார்கள் குழந்தைகள்.

குழந்தைகளிலிருக்கும் வீடுகளில் மட்டும்
அந்நியர்களுக்கு அகப்படாத
புதிய பாஷை ஒன்று புலக்கத்திலிருக்கும்.

இரவும் பகலும் மாறிவருகிறது
குழந்தைகளுக்கு மட்டும்
பகலில் தூங்கி
இரவில் கண்விழிக்கிறார்கள்.


நிலாச்சோறு சாப்பிடும்போதெல்லாம் நிலவுக்கும் கொஞ்சம்
ஊட்டிவிட முற்படுகிறார்கள்.


குழந்தைகளிலிருக்கும் வீட்டினுள்
பூத்துக் குலுங்கின்றன ஹைக்கூக்கள்
வாசலில் தயாராய் காத்து நிற்கிறான்
கவிஞனொருவன்.


- அரவிந்த் ரகு

எழுதியவர் : அரவிந்த் ரகு (30-Aug-18, 9:32 pm)
Tanglish : haikkoo thottam
பார்வை : 3699

மேலே