நெஞ்சுக்குள்ளே மறைந்த நேசம்---சமனிலை மருட்பா-கைக்கிளை---

சமனிலை மருட்பா - கைக்கிளை :
காயம் மெலிந்துவெயிற் காய்விறகாய் மேல்விழுஞ்செந்
தீயிற் கருகுதற் தீர்வதென்றோ?... - பாயுநதி
நீருக் கேங்கிடும் நிலம்புதை
வேருக் கிணையே விளைந்தவென் காதலே...
மரைவதனம் பார்த்துவிழி மாயலோகஞ் செல்ல
வரைமனத்தைக் காதலெனும் வண்ட(து) - இரையெனத்
தின்றிட வருஞ்சுகந் தேகம்
வென்றிட உறைந்தேன் மெழுகாய் உருகியே...
மாதவட் பின்னால் மருட்கொண்டு கால்நடந்தேன்
சாதகம் ஆகுமோ?... தள்ளிநின்றேன் - மாதங்கள்
காற்றென வேகமாய்க் கடந்துந்
தோற்றேன் காதலைச் சொல்லிட நினைத்தே...
நாக்கினில் வைப்பதெலாம் நஞ்சென் றுமிழ்தலும்
தூக்கமது மெய்நீங்கச் சோர்தலும் - ஏக்கமதில்
நெஞ்சிருட் கொள்தலும் நீங்கிடும்
மஞ்சிடை மதியாய் மங்கைத் தோன்றவே...
சொல்லிடும் ஒத்திகையிற் சொக்கிடும் இன்பத்திற்
கல்லென வீழ்தடையிற் காதலைச் - சொல்மனதோ?...
தர்க்கம் நடத்தியே தயங்கிட
சொர்க்கம் நரகமாய்ச் சுழன்று வந்ததே...