எழுந்தருள் என் இறைவா---பாடல்---

மன்னவன் வந்தானடி தோழி மெட்டில் :
திருமலை இடம் கண்டு தவம் கொண்டு
நிலை நின்ற வேங்கடன் போற்றி போற்றி
கருமுகில் நிறம் கொண்டு மழை போன்று
அருள் வார்க்கும் அச்சுதன் போற்றி போற்றி
மலர் போன்று எழில் சிந்தும் விழி கொண்ட
மனங்கவர் கள்வனே போற்றி போற்றி
வரம் தரும் தாயென சேயென தோன்றிடும்
இறைவனே போற்றி போற்றி
அலைமகள் பதியென்று அலையாடும்
கடல் துஞ்சும் மாலவா போற்றி போற்றி
நின் துளை மூங்கில் குழல் ஊதும் உயிரோசை
மனம் கேட்டு உருகும் என்றென்றும் போற்றி...
பல்லவி :
பெண்ணுயிர் நின்றாடிடு நாளும்... (2)
உள்ளத்திலே நினைந்து சந்தத்திலே கரைந்த
பெண்ணுயிர் நின்றாடிடு நாளும்
உள்ளத்திலே நினைந்து சந்தத்திலே கரைந்த
பெண்ணுயிர் நின்றாடிடு...
மாலவனே சேலவனே மாதவனே தேன்மலராய் (2)
பெண்ணுயிர் நின்றாடிடு நாளும்...
சரணம் 1 :
கண்களில் உன் உருவம் படம் பிடித்தேன்
கொண்ட பக்தியிலே உனக்குள் சரண் புகுந்தேன்... (கண்களில்...)
ஏற்றும் அகல் தீபம் ஏந்திடுவேன்... (2)
நிதம் உன் நினைவில் நெஞ்சுருகி சன்னிதியில் வீற்றிருக்கும்
பெண்ணுயிர் நின்றாடிடு...
சரணம் 2 :
ஏற்றிய சோதியில் பேதையின் பார்வையில்
பூமுகம் தோன்றிட காவியம் தீட்டிவிட
பெண்ணுயிர் நின்றாடிடு...
ச.ரி.க.ம.ப.த.நி சரிகமபதநி சுரமேழு மலையேழு
ராம நாமம் நாளும் கூறி நான் அறிவேன்
பெண்ணுயிர் நின்றாடிடு...
கீதை மொழிகள் மனதினில் நிறைந்திட
கோதை மொழிகள் உனதருள் பொழிந்திடவே
பெண்ணுயிர் நின்றாடிடு...
இருவிழி தொழுதிட இதழது புகழ்ந்திட
அருந்தமிழ் சுரந்திட அழிவது அகன்றிடவே
பெண்ணுயிர் நின்றாடிடு...
சொட்டுந்தேன் தரும் பாட்டின் சந்தம்
இந்தத் தாமரைப் பாடும் சந்தம்...
கொட்டுந்தேள் வலி காணும் நெஞ்சம்
உந்தன் வாசலில் தேடும் தஞ்சம்...
இப்பெண்ணுயிர்...
எழுந்தருள் நீ நி வரம்பல தா த அழுதால் பார் ப
தாங்கிடு மால் மா எனையும் காண் க...
எழுந்தருள் நீ வரம்பல தா அழுதால் பார்
தாங்கிடு மால் எனையும் காண்...
நி..த..ப..ம..க.. நி.த.ப.ம.க. நிதபமக
ச - சதங்கையின் இசையால்
ரி - ரிகமபதநிச
க - கருவிழி திறவாய்
ம - மழையென வருவாய்
ப - பதமலர் பணிந்தேன்
த - தவமதில் கரைந்தேன்
நி - நிலவொளி தருவாய்
பாவை மனம் தேடும் உனை நாடும் சுரம் பாடும் வரம் தராய் நடம் பாராய்... (2)
மனதினில் உனை நினைந்திட விழிகளில் மதிமுகம் மலர்வது உதிர்வதில்லை...
பெண்ணுயிர் நின்றாடிடு...