சுதந்திர தினம்
முக்கடல் முப்புறம் சூழ-பனி
மூடிய மலைகளும்...
பசுமை வெளிகளும்...
பாலை வனங்களும்...
சோலை நிலங்களுமென...
பன்மொழி மக்களைக்கொண்டு-உயர்
பண்பாட்டில் தலைத்து
பாருக்குள்ளே நல்ல நாடென
பாரதி பாடிய பாரதநாட்டின்...
பெருமைக்குரிய பேரரசியே!
பாரத தாயே!!
நெற்கட்டு செவ்வலில் விடுதலையெனும்
நீதிகேட்ட பூலித்தேவன் குரலும்...
பாடியே பாரதத்திற்கு
விடுதலை வினவிய பாரதியும்...
இளமைக்காலமுழுதும் செக்கை
இழுத்துக்கழித்த சிதம்பரனாரும்...
மங்கா வீரமுடைய மருதிருவரும்...
பொங்கியெழுந்து போர்வென்று-தலை
தொங்கும் கயிற்றுக்கு முத்தமிட்ட
கட்டபொம்மனும்-கையில் வேலுடன்
நாட்டைக் காக்க வாழ்நாளை போக்கிய
தீரனும்... சுதந்திர தீயை மூட்டிய
சுப்பிரமணிய சிவாவும்...
மணியாச்சியில் மாய்ந்த வாஞ்சியும்...
மரணத்திற்கு அஞ்சாத வீர
மங்கையாம் வேலுநாச்சியாரும்...
வீரன் சுந்தரலிங்கமும்...
கத்திய குரலோடு அழகுமுத்தும்...
பசும்பொன்னாரும்-தன்னமற்ற
தலைவராய் காமராசரும்
அறவழி காந்தியும்...
மறவழி நேதாஜியும்...
கொடிகாக்க உயிர்கொடுத்து
குமரனும்...அமரனாகி...பல தியாகங்கள்
அரணமைத்துக் காத்த அன்னைத்திருநாடு!
சுதந்திரம் வெறும் வார்த்தையல்ல...
எம் நாட்டின் வரலாறு!!
எண்ணற்ற தியாகங்களால்
வார்க்கப்பட்டது!! இந்த
வரலாறை ஏந்திச் செல்லும் புத்தகமே!
எந்நாட்டு இளைஞர் கூட்டம்!!
பெற்ற சுதந்திரமதை
பேணிக் காத்து
ஏணியாய் அமைவோம்-ஐயா கலாம்
எண்ணிய இலக்கை அடைவோம்!!!
#ஜெய்ஹிந்த்