ஒரு தேசம் இரு கோடுகள்
ஒரு தேசம் இரு கோடுகள்
கானி நிலமில்லா
கடைக்கோடி மனிதனும்
ஏர்பிடிக்காது எந்திரம் கொண்ட
எல்லையற்ற வயல்பரப்பின் வாரிசுகளும்
எச்சில் இலைகளை வழித்து உண்ணும்
பச்சை குழந்தையும்
இலைசோறுநிரம்பா வயிறோடு
பிச்சை எடுக்கும் மழலையும்
உயர்தர உணவக ஒருவேளை உணவிற்கு
பட்டாசு கரியாக பணமிறைக்கும்
பகட்டு செல்வந்தரும்
ஒட்டியாணம்போல் ஒரு துணியை
உடல் சுற்றி நிர்வாணம் மறைக்கும்
சாலையோர சகோதரமும்
அமுதசுரபியாய் அலமாரிகளில்
அடுக்கப்பட்ட வண்ணவுடைகளோடு
இடத்திற்கு ஒரு நிறம் அணியும்
பச்சோந்தி சமூகமும்
கழிவுநீர் கால்வாயோரம்
ஒழுகும் குடிசைக்குள்
மழைநீர் பாத்திரம் நிரம்ப
நிரம்பிய நீர் நீள்கோடுகளாய்
மழலையின் கைதொடுகையில்
நெளியும் புழுக்களாய்
நெடுங்காலம் ஒருகூட்டமும்
மழைமீது துறவுகொண்டு
மயக்கத்தின் வாழ்வுதனில்
மாடியின் மாளிகையில்
கோடிகளின் மெத்தைகளில்
வறுமைக்குஞ்சின் முகமறியா
குயிலில்களாய் ஒருகூட்டமும்
தர்மகோடுகளாகவும் தூபகோடுகளாகவும்
இப்போது சொல்லுங்கள்
நம் தேசத்தின் கோடுகள் ஒன்றா இரண்டா