நனவென ஒன்று இல்லை

“நனவென ஒன்றுஇல்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்”

இந்நாட்களில் அக்கனவு தினம் தினம் என்னை தேடி வருகின்றது. இது கனவல்ல என்று சில சமயங்களில் தோன்றுவதுண்டு. நான் துயில் பயின்று சில நொடிகளில் அக்கனவு வந்துவிடுகின்றது.

கனவில் இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே. தேவதை ஒன்றும், நானும். தேவதை என்பது அஃறிணையா அல்லது பெண்பாலா? என்ற கேள்விக்கு என்னுள் தெளிவான விடைகள் ஏதுமில்லை. என் கனவுகளில் தேவதையை பெண்பால் என்றே கருதுவோம். பூட்டிய அறைகளுக்குள் இவள் எவ்வாறு வந்திறங்கக்கூடும்? அவள் வருகையிலோ, வெளி செல்கையிலோ நான் கண்டதில்லை. வானத்தில் இருந்து இப்பொழுது தான் இறங்கி வந்தது போன்ற ஒரு வனப்பு.

எனது அழுக்கு படுக்கை விரிப்புகளில், போர்வைக்கு நடுவே ஒளிந்து கொண்டு நான் உறங்கிக்கொண்டிருப்பேன். வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதை ஒருத்தி, (வானம் இல்லாவிட்டாலும், மேகங்களில் இருந்து வந்திருக்கக்கூடும். வெள்ளையும் கருப்பும் கலந்த ஆடைகள் கண்ணில் கண்டதாக நினைவு), என்னை பின்புறம் இருந்து இறுக்கி பற்றிக்கொள்வாள். அவளோடு சேர்ந்து அறையெங்கும் பறந்து திரிவோம். அறைவிட்டு ஒருநாளும் அவள் என்னை வெளியே கூட்டிச் சென்றதில்லை. இதுநாள் வரை அதுகுறித்து விண்ணப்பங்கள் ஏதும் நான் தந்திடவும் இல்லை.

அவளது பூவிதழ்கள் இரண்டும், செந்தமிழ் பாடல் ஒன்றை முணுமுணுத்தபடியே இருக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகே வார்த்தைகளை நான் கண்டுகொண்டேன்.
“நனவென ஒன்றுஇல்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்”

புவிஈர்ப்பு விசை மறந்து, இருவரும் காற்றிலே பறந்துத் திரிவோம் இறுக பற்றிய இரு பட்டாம்பூச்சிகள் போல. நிதமும் எத்துணை நேரம், மற்றும் எத்துணை தூரம் இந்த பயணம் என்பதை அவளே முடிவு செயகிறாள். ஊர்கோலம் முடிந்தபின், சிறகிலிருந்து பிரிந்த இறகு போல மெதுவாக நான் எனது படுக்கைக்குத் திரும்புகிறேன். பிரமிளின் கவிதையொன்று உங்களது மனதில் இப்பொழுது வந்து செல்லக்கூடும். அவர் கூறிய இறகே இங்கு நானாகிப் போகிறேன்.

வந்த சுவடு ஏதுமின்றி அவள் காற்றினுள் கரைகிறாள். மகரந்தம் உண்டு மயங்கும் வண்டினைப் போல மீண்டும் எனது தூக்கத்தை தொடர்கிறேன்.

“நனவென ஒன்றுஇல்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்”

இக்குறள் தவிர்த்து வேறு வார்த்தைகள் நான் கேட்டிடவில்லை. விழித்திருக்கும் வேளைகளில் குறளின் பொருள் தேடி நனவினில் நான் நிதமும் தொலைகிறேன்.

எழுதியவர் : (26-Sep-18, 9:33 pm)
சேர்த்தது : தமிழ் பித்தன்
பார்வை : 237

மேலே