முதல் சினேகிதன்
அன்புள்ள அப்பா
உன் மீதான
காதலை
நான் சொன்னதில்லை
இன்றைக்கான
அமாவாசை
தர்பணத்தில்
உன்னோடு பேசுகிறேன்
நீ பூசுகிற
பவுடர் வாசனை
வாசலில்
கழற்றிவிடுகிற
செருப்பு
உனக்கென்ற
கோடுபோட்ட சட்டை.
யாவற்றோடும்
தினமும் நினைவில்
பேசுகிறேன்.
விடுபடுதலின்
ரணமேறிய
இந்த நாட்களில்
உனது இருப்பின்றி
நகர முடியாமல் நாங்கள்.
அப்பா உனது
வெற்றிக்காக
பலமுறை
தோற்றுப்போகிறேன்
அச்சிடப்படாத
எனது
வெற்றுகாகிதத்தில்
உன்னோடு இருந்த
நாட்களை
நிறைத்து வைக்கிறேன்
பிரியமான அப்பா
அழியாத
பினிக்ஸ் பறவை நீ.
உனது பொறுப்பெனும்
ஆடையோடு
உனது நினைவுக்காக
காத்திருப்போம்.
அன்புள்ள சகா,
நாம் வெற்றியாளர்கள்.
இப்படிக்கு
உன் நினைவு
நண்பனும் மகனும்.