நாளாம் நாளாம் திருநாளாம்

#நாளாம் நாளாம் திருநாளாம்...!

பொன் வேண்டும் பொருள் வேண்டும்
வர தட்சிணையாய் இன்னும் வேண்டும்
பட்டாடை யுடுத்தியே பிச்சை கேட்கும்
பரதேசிகள் எல்லாமே வந்தும் போக
பண்பான பெண்ணிவள் போதுமென்றே - தாலி
காண்கின்ற முதிர் கன்னிக்கு திருநாளன்று..!

கூடை கூடையென காய் கனிகள்
கூவியே ஏழைகள் நித்தம் விற்க
காக்கிஉடை கள வாணியர்கண்ணில் அன்றோ
சிக்காது போகும் அந்த நாளிலுமே
கனியெல்லாம் பணமென்றே ஆகுமென்றால் - இலாபம்
காண்கின்ற வியாபாரிக்கு திருநாளன்று

பசி மறந்து பிள்ளைக்காய் பாரம் சுமந்து
அவர் கல்விக்கு ஈட்டியதை உரமுமாக்கி
ஏங்கி நிற்கும் ஏழையின் குடும்பக் கனவு
ஏழ்மையிலும் மகனுயர்வாய் கனவுமிருக்க
கனவதுவை நனவாக்கி நிற்கும் பிள்ளை
காண்கின்ற ஈன்றோர்க்கு திருநாளன்று .!

அண்டைநாடெல்லாம் அட்டை எனவே
ஊடுருவி இங்கேதான் அமைதி உறிஞ்சும்
எல்லையில் தொல்லை தீவிரவாதம்
பாவம் என் செய்தார் எம்மக்கள் அவரும்
இருப்பிடம் நீங்கி எங்கும் சிதறும் - எனும்
கொடுமைகள் நீங்கி எங்கும் அமைதி
காணும் மக்களுக்கு திருநாளுமன்றோ..!

கொள்ளை கொலை என்று வளர்ந்தும் என்ன
குடி குடி கெடுத்து அழிந்தும் என்ன
காவிரிநீர் கிடைக்காமல் போனால் என்ன
கழனிக்காடு பாலை என்றானால் என்ன
எந்நாளும் அவர்க்கெல்லாம் திருநாள் தானே
அரசியல் வாதிக்கு நித்தம் பெருநாள்தானே..!
---------------------------------------------------------------------------------

ஆடியிலே கூழூற்றி வெப்பம் தணிப்போம்
அதற்கெனவே திருநாளை கொண்டாடி மகிழ்வோம்
புரட்டாசி திங்களில் கொலுவும் வைப்போம்
சுண்டல் நித்தம் சுவைத்துமே புரதம் சேர்ப்போம்
திருநாள் கொண்டாட்டம் தேகம் காக்கும்
அறிந்தே கொண்டாடி ஆரோக்கியம் வளர்ப்போம்...!

(01-10-2016 அன்று அருந்தமிழ் கலை இலக்கிய மன்றத்தில் வாசிக்கப்பட்ட கவிதை. தலைப்பினை அளித்து கவிதை வாசிக்க பணித்த திரு துருவன் சார் அவர்களுக்கும் திரு கனல்மணி சார் அவர்களுக்கும் எனது நன்றிகள்)

எழுதியவர் : சொ.சாந்தி (9-Oct-18, 9:01 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 69

மேலே