பத்ம வியூகம்
#பத்ம வியூகம்
போரினை விரும்பாதவளை சுற்றி
பத்ம வியூகம் அமைக்கிறாய்..!
எத்தனை முறை நான்
உடைத்தெறிந்து மீள்வது..?
சொத்தைப் படைகள்
தோற்றுவிடும் என்பதை
இன்னுமா அறிந்திருக்கவில்லை..!
மாயக் குளத்தில்
விழுந்த துரியோதனனைகண்டு
நகைத்த தி்ரௌபதி
வந்து போகிறாள் காட்சிகளில்…!
சிரிப்பும்
போரினை விதைக்கும் என்பதால்
திமிரும் சிரிப்பினை
சிரச்சேதம் செய்கிறேன்
பேரழிவினைத் தடுக்க…!
யுத்தம் என்று வந்த பிற்பாடு
நெஞ்சினை காட்டி நிற்கிறேன்
போருக்கான வீரத்துடன்
உனக்கு எப்போதும்
என் புறமுதுகுதான்
பிடித்தமானதாக இருக்கிறது
இலகுவாக ஈட்டி எறிய..!
நியாயமற்ற போர்
விதிமுறைகளைக் கடந்து
நிகழும்போதோ
அல்லது நிகழ்த்தப்படும்போதோ
என் பார்வைக்கு
நீ சிகண்டியாகத்தான் தெரிகிறாய்..!
இதோ
இப்போதும் தாக்குதலுக்கான
உன் பலவீனப்பட்ட
நோஞ்சான் படைகளுடன்…!
நான் கடிவாளம் மட்டும் கட்டிக்கொண்டிருக்கவில்லை
காந்தாரி போன்று
விழிகளையும்தான்…!
வஜ்ரம் பாய்ந்திருக்கும் விழிகளில்
தப்புவதில்லை
மறைமுக காட்சிகளும்
துரோகங்களும், துரோகிகளும்
எத்தனை முறையேனும்
பத்ம வியூகம் அமைத்துக் கொள்
கருவில் இருந்து கொண்டு
பத்ம வியூகத்தை
அரைகுறையாய் கற்ற
அபிமன்யு அல்ல நான்
மிதிபட்டு மாண்டு போவதற்கு..
குருகுலம் சென்று
வித்தை கற்காதவள் தான்
இறைவனை
வேலியாகக் கொண்டிருப்பவளை
எந்த வியூகத்தால்
வீழ்த்திவிட இயலும்…?
சிறு சிறு விழுப்புண்களுடன்
விழாமல் பவனி வருவேன்
வாகை மாலைகள் தோள்கள் சூடி..!
முடிந்தால் வாழ்த்து…
இல்லையெனில்..
#சொ.சாந்தி