நேரம் சரியில்லை
அவசரமாக கிளம்பி கொண்டிருந்தான் சுரேஷ். அவ்வளவு வேகமாக அவன் பேன்ட் ஷர்ட் போட்டு வித்யா பார்த்து இல்லை. அவள் தனது மகள் மலர்விழியை பள்ளிக்கு அனுப்ப தயார் செய்து கொண்டிருந்தாள்.
சுரேஷின் அவசரத்தை கவனித்தாள். ஆச்சரியமாக அவனைக் கேட்டாள். ஏன் இந்த வேகம்.. அப்படி என்ன அவசரம் இப்போது ராகுகாலம் வேறு. ஒரு அரைமணி நேரம் கழித்து புறப்படு சுரேஷ் என்றாள் வித்யா.
அவன் உடனே சற்று கோபமாக ஆபிஸில் இன்று ஆடிட்டர் வரப்போகிறார். அதற்கான பைல்களை எடுத்து வைத்து ஒருமுறை சரிபார்க்க வேண்டும் அவர் வருவதற்குள். இந்த டிராபிக்கில் நான் சென்றடைய அரைமணி நேரம் ஆகும்.
மலரை உடனடியாக ரெடி செய்து அனுப்பினால் நான் அவளை பள்ளியில் விட்டு செல்கிறேன் என்றான். ஆனால் வித்யா உடனே குறுக்கிட்டு இராகுகால வேளையில் அவளை அனுப்ப மாட்டேன் என்று கூறினாள்.
நான் அவளை எனது ஸ்கூட்டரில் கூட்டிக் கொண்டு விடுகிறேன் பின்னர் என்றாள். ஆனாலும் சுரேஷ் அவளுக்கும் நேரம் ஆகிறதே ..நீ என்ன இது போல அடம்பிடிக்கிறாய் இராகுகாலம் என்று .ராகுகாலத்தில் என்ன உலகமே நின்றுவிடுகிறதா என்றான் , நீ படித்தவள் தானே ..என்று விரக்தியுடன் கூறிவிட்டு டிபன்கூட சாப்பிடாமல் கிளம்பிவிட்டான் .
இவர் திருந்தவே மாட்டார் என்று முணுமுணுத்தவாறே உள்ளே சென்றாள் .பின்பு அரைமணி நேரம் கழித்து மலர்விழியை தன்னுடைய வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாள் . ஆனால் அதற்குள் நேரமாகிவிடவே பள்ளியின் கேட் மூடப்பட்டுவிட்டது . அங்கு நின்றிருந்த காவலாளியிடம் கெஞ்சியம் பலனில்லை .காரணம் பள்ளி ஆரம்பித்து பதினைந்து நிமிடங்கள் ஆகிவிட்டது .சற்று வருத்தமுடன் மகளுடன் வீடு திரும்பி கொண்டிருந்தாள் .அப்போது எதிரே சிக்னலை பார்க்காமல் கடந்து வந்து கொண்டிருந்த ஒரு கார் இவள் மீது மோதிவிட்டு இருவரும் தூக்கி வீசப்பட்டார்கள் .
ஒருமணி நேரம் கழித்து சுரேஷுக்கு தகவல் வர அவன் மருத்துவமனைக்கு ஓடினான் .அங்கு மிகவும் ஆபத்தான நிலையில்கிடந்த வித்யாவை கண்டதும் அழுது விட்டான் .அருகில் சென்று அவள் கையை பிடித்ததும் அவள் லேசாக கண்விழித்தாள் .கண்ணீர் கசிந்தது .மிகவும் மெல்லிய குரலில் நீங்கள் கூறியது போல ராகுகாலத்தை நம்பிய எனக்குத்தான் கெட்டகாலம் ,மலர் எப்படி இருக்கிறாள் என்று தெரியவில்லை. அதற்குள் அருகில் இருந்த நர்ஸ் குழந்தைக்கு ஒன்றும் இல்லை தலையில்தான் லேசான அடிபட்டிருக்கிறது என்றாள் .சுரேஷ் பக்கத்து அறையிலிருந்த மலர்விழியை பார்த்து வருவதற்குள் வித்யா இறந்துவிட்டாள் . கதறி அழுத சுரேஷை நண்பர்களும் உறவினர்களும் ஆறுதல் கூறிகொண்டிருந்தார்கள் .
இந்தக் கதையின் முடிவால் உங்களுக்கு என்ன கூற வருகிறேன் என்று புரிந்திருக்கும் நான் சொல்ல தேவையில்லை .இன்னும் இது போன்ற மூடநமபிக்கைகள் சிலருக்கு இருப்பது வருந்தத்தக்கது .
பழனி குமார்