தலைகவசம்

அலுவலக பயணம்
ஆரம்பம் இன்னும்
ஐந்து நிமிடங்களில்
செய்தி வாசித்தது
கடிகாரம்

இரையை எடுத்துக்கொண்டு
இரை தேட புறப்பட்டேன்

இருசக்கர இயந்திர உலாவியை
இயக்கினேன்
இயற்கையின் குளிருக்கு
அது மட்டும் என்ன விதிவிலக்கா
இன்னும் கொஞ்ச நேரம் போகட்டும் என்று
எழ மறுத்தது

விடைகொடுக்கும் மனைவியின்
புன்னகைக்கும் அவளின்
கண்கள் உதிர்க்கும்
பயமொழிக்கும்
அனைத்து சாலைவிதிகளும் வந்து
உறவு ஏற்படுத்தி விட்டு போனது

உள்ளேயிருந்து
ஓடிவந்து கையசைக்கும்
துடுக்கு மகனின்
உள்ளத்திலிருப்பது
நன்றாகவே கேட்டது
"உள்ளேன் ஐயா " பள்ளி
பிடிக்கவில்லை என்றும்
உன்கூடவே வந்துவிடவா? என்று
கேட்பதையும்

கிராமத்தின் நான்கைந்து
தெருக்களின் முனைகளில்
உறங்கிக்கொண்டிருக்கும் காற்றின்
தூக்கத்தை கிள்ளிவிட்டு
மண் சாலையிலிருந்து
தார்ச்சாலைக்கு தாவினேன்

நேற்றைய இரவின் மழைக்களித்த
நிலத்தின் விருந்தோம்பல்
அடையாளமாய் எஞ்சியிருந்த
மண் விருந்தின் மணம்
காற்றெங்கும் பரவியிருந்தது


வழியெங்கும் தென்னை அன்னைகள்
வருவோர்க்கும் போவோர்க்கும்
வலக்கையினால்
ஆசி வழங்கிக்கொண்டிருந்தார்கள்

பாதையின் மையத்தில்
எந்த வாகனமோ
நியாத்தீர்ப்பெழுதி
தவளைக்கு மரணமும்
எறும்புக்கு உணவும்
ஒரு சேர வழங்கியிருந்தது



"நெடுஞ்சாலை சந்திப்பு
கவனமாக செல்லவும் "
கூடவே கீழே
"மரம் வளர்ப்போம்
மண்வளம் காப்போம் "
ஆலமரத்தை அகற்றிப்
பொருத்திய
அறிவிப்பு பலகை

முகப்புறக்கண்ணாடி
மரங்களை விழுங்குவதை
விட்டுவிட்டு
வாகனங்களை விழுங்க
ஆரம்பித்தது

மாநகராட்சி தங்களை அன்புடன்
வரவேற்கிறது
மனதை தயார்படுத்தியது
வாகன நெருக்கடிச்சாலைக்காக


என்னைப்போல் இல்லாமல்
எத்தனையோ காரணங்களுக்காக
பேருந்து பயணத்திற்காக
காத்திருக்கும் பேருந்து வாசிகள்
விலைவாசியை நினைவுபடுத்தி நின்றார்கள்

சாலையின் குறுக்குச்சந்திப்பை
நெருங்கினேன்
மின்சாரதேனீ மஞ்சள் பூவிலிருந்து
சிவப்பிற்கு நகர்ந்து
தேனெடுக்க ஆரம்பித்தது
வாகனத்தை அணைத்துவிட்டு
பச்சை பூவின் முறைக்காக
காத்திருந்தேன்

குடும்பகட்டுபாட்டையும்
சாலைவிதியையும்
சட்டைப்பையில் போட்டுவிட்டு
இருசக்கரத்தில் நிற்கும்
பெரிய குடும்பம்

இளமை என்ற
வேகம் ஏற்றப்பட்ட
கனவுலகத்தில்
அவசரமாய்
கையில் குறுஞ்செய்தி
ஆயாசமாய்
காதில் இசையுடன்
கல்லூரி இளைஞன்

மின்விளக்குகளிடம்
பணியை ஒப்படைத்துவிட்டு
அலைபேசி அரட்டை
மக்களின் நண்பனாக
மதிப்பிற்குரிய
காவல்துறை

அம்மா இந்த அண்ணா
எப்ப பள்ளிக்கு செல்வார்கள் ?
வினவும் சிறுமிக்கு
சாயங்காலம் என்று
சாமர்த்திய பதிலளித்தாள்
துண்டு பிரசுரம் விநியோகிக்கும்
சிறுவனின் சட்டையில்
கல்வியின் தரித்திரம்
பிரசுரமாயிருந்தது

அறுபது நொடிகளையும்
கண்ணில் எரித்துவிட்டு
வெறுப்பை புகையாய்
வெளிவிட்டு நகர ஆரம்பித்தார்கள்

அடுத்து வந்த
அபாய வளைவு
அண்மையில் தத்தெடுத்த
இரண்டு அபாயக் குழிக் குழந்தைகள்
வாகனமுகப்புகளின்
கண்ணாடி சிதறல்களை வைத்து
அங்கும் இங்கும்
உருட்டி விளையாடிக்கொண்டிருந்தன

இவைகளுக்கெல்லாம் மத்தியில்
அங்காங்கே நினைவினில் வந்து போயின
நேற்றைய மேலலுவலரின் வசை வார்த்தைகள்,
காலையில் அம்மா சொன்ன கால்வலி,
மனைவி காண்பித்த காலியான காபித்தூள் டப்பா.

தீடிரென்று
ஒரு ஆச்சர்யம்
தலைகவசமணிந்து சாலையில்
ஒரே ஒருத்தர்
அவரின் வாகனத்தில்
"ஆயுள் காப்பீட்டு முகவர்"
பின்புறம் பொறிக்கப்பட்டிருந்தது
அவருக்கல்லவா தெரியும் உயிரின் மதிப்பு

அதற்குள் அலுவலகத்தை
நெருங்கியிருந்தேன்
வழக்கம் போல
ஒரு விவாதக்கூட்டம்
காலையிலேயே ஆரம்பித்திருந்தது
ஆனால் இன்று அவர்களின்
நெற்றிசுருக்கில் அனுதாபம்
நிரம்பி வழிந்துகொண்டிருந்தது

அதில் ஒருவர்
"தலைக்கவசம் அணிந்து கூட
பிழைக்கவில்லை பாருங்களேன் என்றார் "
எப்படி நடந்திருக்கும் என்று
வினவுவதற்க்குள் இன்னொருவர்
"அதை போட்டு என்ன பயன்
தாடைக்கச்சையை மாட்டவில்லையே "
அப்படிஎன்றால்
தம்பிரான் புண்ணியத்தில்
தலைக்கவசம் மட்டுமே தப்பித்துக்கொண்டது
தலைமாட்டிக்கொண்டது என்று நகைச்சுவை
விடுக்கிறார் மற்றொருவர்

ஓரமாய் பூத்திருந்த
அழகான பூக்களிடம்
கொஞ்சம் சிரிப்பை கடன்வாங்கிக்கொண்டு
அலுவலகத்தினுள்ளே நுழைந்தேன்

அன்றைய நாள்முழுதுமாய்
ஆயுள் காப்பீட்டு முகவர்
என் உயிரின் மதிப்பை
விலை பேசிக்கொண்டிருந்தார்
எனக்குள்ளே !

தலைகவசம் அணிவீர்
தாடைக்கச்சையுடனே !!
எங்கோ படித்தது ...........................

எழுதியவர் : இம்மானுவேல் (22-Aug-11, 5:17 pm)
பார்வை : 872

மேலே