இவள் எதற்கு இப்பொழுது

சனிக்கிழமை.
நள்ளிரவு 2 மணி.
இரவைத்தின்றபடி
படுக்கையில் புரண்டேன்..
'என்ன ஆனது எனக்கு?’ …
'இதோடு ஆயிரம் முறை'யென
தலையணை சொல்லியது
கணக்குப்பிள்ளையாய்...
தலையில் அடித்துக்கொண்டு
தலையணைக்கருகில்
என் தூக்கம், பரிதாபமாய்...
நான் என்ன செய்வேன்?
என் விண்மீன் தோட்டத்தில்
அவள் நட்பை
ஒரு விண்மீனாய்தான் வளர்த்தேன்..
இந்நாட்களில் மட்டுமெப்படி
முழுநிலவாய்த் தெரிகின்றது?
'அடடா...அப்படியா சங்கதி..
நானே சொல்கிறேன்..
உன் 'மார்க்ஸ்' கண்களுக்கு
அவள் 'ஜென்னி'யாய்த் தெரிகிறாள்'
சொல்லிச் சிரித்தது
சுற்றாத மின்விசிறி.
ஆ.. அவளை நான் விரும்புகிறேனா?
'அட மடையா...
இனியுமா தெரியவில்லை..
ஒப்புக்குத் துடிக்கும்
உன் இதயத்தைக் கேள்'
பணித்தது போர்வை.
இல்லை...அவள் என் தோழி...
'உண்மைதான்...
உனக்கு அவள் தோழிதான்...
இனியும் அவள் தோழிதான்...
மறுக்கவில்லை..
இதுகாறும்
நீ காணும்
நிலைக்கண்ணாடி என்றிருந்தாள்..
நின் கண்களாகவே இனியிருந்திடுவாள்
நின்னவள் நாள்தோறும்..
தவறேதுமில்லை-நீ
தப்பிவிட வழியேதுமில்லை...
வெட்கம் வேண்டாம்..ஒற்றுக்கொள்'...
அரவணைத்துச் சொன்னது
அன்பான மனம்.
ஆம்...உண்மை...
அவளை நான் விரும்புகிறேன்...
எவையெல்லாம் அழகழகாய்த் தெரிந்தனவோ
அவையெல்லாம் அவளாகவேத் தெரிகின்றன
இப்போதெல்லாம்...
'வாடா அப்படி வழிக்கு..
எடு என்னை..இப்போதே சொல்லிவிடு'
கட்டளையிட்டது செல்பேசி.
இப்பவா...அட போப்பா...
மணி இரண்டரை...
இப்........
.
.
.
(செல்பேசி அழைப்புச்சத்தம்)
யாரது இந்நேரத்தில்?
ஆ... அவளேதான்...
இவள் எதற்கு
இப்பொழுது அழைக்கிறாள்?
.
.
.
.