திரைகடலோடி

வானம் பாத்த பூமியில
விவசாயம் கைவிரிக்க
வக்கத்து போனோமடா மகனே
எம்பொழப்பு உனக்கு வேண்டாம்
திரைகடலோடி திரவியம் தேடடா என
நிலத்த வித்து அனுப்பி வைக்க
அறியா தேசத்தில் அந்நியனாய்....

ஒரு வேளை கஞ்சினாலும்
அம்மா நீ அள்ளித்தந்தா
மனமாத்தான் நான் குடிச்சேன்
கஞ்சிக்கு மிளகாய பாசமாத்தான்
நான் ருசிச்சேன் - இங்கே முட்ட சாப்பிட்டாலும் முழுசா திருப்தி இல்ல....

தலைக்குத் தாய்மடி யில்லாம
மனசுக்கும் உறக்கமில்லை
பல்ல கடிச்சுக்கிட்டு பல வருஷம்
கடத்திபுட்டேன்  இப்போ எங்க
கூரைவீடு மச்சாச்சு - லீவுல ஊருக்கு
வந்தேன் என் கல்யாணம் முடிச்சாச்சு.....

பத்துநாள் வாழ்ந்துட்டு பறந்துட்டேன் பழையபடி, என்னவளோ தனிமையில
என்னையே நினைத்தபடி...
கணினி திரைவழியே காதலத்தான்
நா வளர்த்தேன் - அவள் கடைக்கண்
நீர் கசிய மனசுக்குள்ள தான்அவிஞ்சேன்

நல்லதொரு நாளிலே நல்ல
செய்தி யொன்றுசொன்னாள்
பேருவகை கொண்ட மணம்
பெருந்தவிப்பு கொள்ளுதம்மா - என்
னவளைக் கட்டியணைத்து முத்தமிட
கணினியும் வகை செய்குமோ.....

வயிறுவலி எடுத்திடுச்சு மாமா
உங்க வாரிசு வரப்போறானு
சொல்லிச்சிரிச்சா உதட்டோரம்மா
அவசோகத்த மறைச்சா...-பிள்ளபிறந்து வருஷம் ரெண்டாச்சு அப்பன்புள்ள பாசமெலாந் திரையிலத்தான் என்றாச்சு

பின்னொருநாளுல பிள்ளகிட்ட
பேசயில காசு அனுப்பிருக்கேன் 
வேண்டியத வாங்கிகோனு
பகுமானமா நாஞ்சொல்ல - நீதான்
எனக்குவேனும் எப்ப வருவனு?
பட்டுனுதான் கேட்டுப்புட்டான்.....

இந்தநிமிசமே வந்திடத்தா
யெனக்காசை பிள்ள நீபடிக்க இன்னும் சேர்க்கனுங் கொஞ்சக்காசை
நினைச்சமாத்திறத்தில் தொண்டக்
குழிதானடைக்க.... சிக்னல்இல்ல
பொய்யச்சொல்லி ஃபோன  வைச்சேன்...
பின் பொய்யாதா னானுஞ்சிரிச்சேன்......



 
 

எழுதியவர் : முகில் (19-Oct-18, 8:39 am)
சேர்த்தது : முகில்
பார்வை : 1393

மேலே