தீதின்றி வாழ இயலாது பெண்ணினம்

கருவிழிகள் வண்ணங்களை வருடிச் செல்கின்றன
களிவண்டுகள் தேன்மதுரத்தை சுவைத்துத் திளைக்கின்றன
காற்றலைகள் வாசத்தை சுமந்து திரிகின்றன
கிளையிலைகள் மென்மேனியை அணைத்துத் துளிர்க்கின்றன

மலரே....
அத்தனையும் உன் அனுமதியின்றியே நிகழ்கிறது...
ஏனென்று நீ கேட்க முனைந்தால் ...
இயல்பு என்பார் இயற்கை என்பார்....
மலரும் மங்கையும் ஓரினம் என்பார்....
ஆனால் உனக்கும் எனக்கும் ஒரே நீதியோ....?

வண்ணமாய் மலர்ந்தது உன் குற்றமா....?
வசிய வாசம் வீசுவது உன் குற்றமா...?
வடிதேனைச் சுரப்பது உன் குற்றமா...?
வசந்தம் அணைக்கத் துடிப்பது உன் குற்றமா...?

திரைபோட்டு இறைமை உனைப் படைத்திடவில்லை.....
தீங்கொன்றும் உனக்கு நேர்ந்திடவில்லை.....
மறையோடு முறையாக யாம் வாழ்ந்தாலும்....
குறையோடு கறையாக வரைதாண்டும் ஈனங்கள்....
திரைமறைவாய் தீண்டும்வரை
தீதின்றி வாழ இயலாது பெண்ணினம்....!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (19-Oct-18, 10:51 am)
பார்வை : 64

மேலே