ஆத்மாநாம் விருதுகள் விழா
தமிழ் நவீன கவிதையின் செழுமையான காலகட்டமான 1970களில் கவிதைகள், கவிதையியல் பற்றிய உரையாடல், கவிதைக்கென ஒரு பத்திரிகை என பன்முகமான பங்களிப்பை வழங்கியவர் கவிஞர் ஆத்மாநாம். கவிஞர் ஆத்மாநாமின் இலக்கியப் பங்களிப்புகளை நினைவூட்டும்வகையில் மெய்ப்பொருள் பதிப்பகம், ஆத்மாநாம் அறக்கட்டளையை 2015ஆம் ஆண்டு நிறுவி ஆண்டுதோறும், ஒரு கவிஞருக்கு அவரது பெயரில் ரூ.25,000 பரிசுத் தொகையும் கவிஞர் ஆத்மாநாம் விருதும் வழங்கி வருகிறது.
கவிஞர் ஆத்மா நாம் நினைவாக கவிதை மொழியாக்கம் ஆகியவற்றுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்பட்டுவரும் விருதுகள் இம்முறை கவிஞர் போகன் சங்கர், கார்த்திகைப் பாண்டியன் அனுராதா ஆனந்த் ஆகியோருக்கு அளிக்கப்படுகின்றன. விழா வரும் அக்டோபர் 20 அன்று சென்னையில் நிகழகிறது. சிறப்பு அழைப்பாளராக சந்திரகாந்த் பாட்டீல் அவர்கள் கலந்துகொள்கிறார்
--------------
ஒவ்வோர் ஆண்டும் பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பாகும் ஒரு கவிதை நூலுக்கு கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை சார்பாக மொழிபெயர்ப்பு விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2018-ம் ஆண்டிற்கான விருதுக்கு 2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளில் பிற மொழிகளிலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்த கவிதைத் தொகுப்புகளிலிருந்து 2 நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ``நரகத்தில் ஒரு பருவகாலம்" என்ற நூல். `கார்த்திகைப்பாண்டியன்’ இதை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இது பிரெஞ்சு கவிஞர் ஆர்தர் ரைம்போவின் உரைநடைக் கவிதைத் தொகுப்பின் மொழிபெயர்ப்பு ஆகும். எதிர் வெளியீடு சார்பாக இந்த நூல் 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
சால்ட் பதிப்பகம் சார்பாக 2017-ல் வெளியிடப்பட்ட ``எண்: 7 போல் வளைபவர்கள்: தற்கால ஆங்கில கவிதைகள்" என்ற நூல் விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு நூல் ஆகும். இதைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர் `அனுராதா ஆனந்த’. தற்கால அமெரிக்காவின் பெண், ஆண், திருநங்கை ஆகியோர் உள்ளிட்ட பதினாறு கவிஞர்களின் அறுபத்து மூன்று கவிதைகள் அடங்கிய கவிதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு இந்த நூல்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களைப் பற்றியும் அந்த இரண்டு தொகுப்புகளுக்கும் தலா ரூ.25,000 பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை, அறங்காவலர், வேல் கண்ணன் அறிவித்துள்ளார். இந்தத் தேர்வு இரண்டு அடுக்குகளில் நடத்தப்பட்டது. இதில் முதல்நிலைத் தேர்வாளர்களாக அசதா, சீனிவாசன் நடராஜன், என்.சத்தியமூர்த்தி ஆகியோர் செயல்பட்டனர். அகிலன் எத்திராஜ், ஆர்.சிவகுமார் ஆகியோர், இரண்டாம் நிலைத் தேர்வாளர்களாகச் செயல்பட்டனர் என்றும் அறிவித்துள்ளார்.
------------
கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளையின் நிறுவனர், ஓவியர் மற்றும் எழுத்தாளர் சீனிவாசன் நடராஜன். இதன் அறங்காவலர்களாக வேல்கண்ணன் மற்றும் கார்த்திகேயன் செயல்படுகிறார்கள்.