கட்டுப்பெட்டியின் காதல்
என்றும் தலைகுனிந்தே நடக்கும்
கட்டுப்பெட்டியிடம் கதை பேசக்
கூடப் படித்த குழப்படிகாரர்கள்
கூட எண்ணித் துணிந்ததுமில்லை
வேலைத்தலத்தில் யாரிடமும்
வேலையைத் தவிர்த்தவள் பேசுவதுமில்லை
இருவர் மட்டுமான வருவாய்ப்பிரிவில்
இருந்த கூட்டாளிக்கோ
இருமூன்று மாதஞ்சென்றுமவள்
“பெயரென்ன?” கேட்டால் தெரியாது...
பேசா மடந்தை...!
“பேசுவாளோ?, பேசினால்...!”
வந்தான் ஒருவனவள் வாழ்வில்
சிந்தையது அவனசைவைச்
சித்திரமாய் சிறைபிடிக்க-எதிர்
வந்தவழி செல்கையிலோ
ஏதுமறியாப் படபடப்பு
வந்தவேலை மறந்தங்கு
வருமோர் பெருந்தவிப்பு
எந்தநாளு மில்லாமல்
ஏனவனோடு மட்டும்?
பார்க்கத் தவித்துப்
பார்த்த ஈரிருவிழிகள்
பாரா திருந்தால் தவித்தன-
காரணமறியாமல்!
பேசத் தவித்துப்
பேசிய மொழிகள்-
பேசாதிருந்தால் தவித்ததப்
பேசா மடந்தையுளம்
காந்தக்கண் பார்வையில்
கபடமில் வார்த்தைகளில்
கபளீகரம் போனது
கண்கள் மட்டுமா?
களங்கமில் நெஞ்சமுமா?
மயக்கும் அவன்
மழலைச் சிரிப்பில்
மயங்கிய மனமும் மதியும்
மறுகணம் விழித்துப்
பயந்தனவந்நேசம் படுத்தியபாட்டால்,
வியந்தன: “இது தான் காதலோ?”
“தகுதிக்கு மீறிய ஆசையாகாது!”
மனமடக்கி ஈராண்டாய்த்
தலை குனிந்தேயவள் நடந்தாள்
“சேலையில் அழகு!
தினமும் அணியலாமே!” என்பான்...
“உம்போல் திறமையிங்கு
எவருக்கும் இல்லை!!” என்பான்...
“வாழ்ந்தால் உம்முடனே,
இல்லையேல் மணமுடியேன்!” என்பான்...
சாதனைப் பெண்ணேயானாலும்
சீதனம் வேணுமே மணமுடிக்க?
“காதலித் தோடினாள்,
பேதைமகள்!” பழிக்கஞ்சி
வேதனையோ டவளங்கே
விலகித் தனிவழி நடப்பாள்...
“நேசம துண்மை தானே!”
ஏசியவன்றன் மனமாற்றி
ஏந்திழை யொருத்திக்கு
“வேந்த! நீ மாலையிடு!!”
விடியட்டுமுன் தங்கை வாழ்வென்றாள்
சேர்ந்தது அச்சோடி
சிரித்திட்டாள் சிலதுளிவிழிநீர்
தெறிக்க அவ்வுவகை யூடே...!
~தமிழ்க்கிழவி (2003 )