அஞ்சலி என்ராமதுரை-----------------அறிவியல்புரம் ஆசிரியர் ராமதுரை காலமானார்

அறிவியல்புரம் ஆசிரியர் ராமதுரை அறுவை சிகிச்சைக்குப்பின் உடல்நலம் குறைந்து அக்டோபர் 16-ஆம் தேதி அதிகாலை காலமானார்.

இறுதிவரை கற்கவேண்டும், எழுதவேண்டும் என்பதே அவர் விருப்பம். அவருடைய கட்டுரை முந்தினம் தினத்தந்தியில் வெளியானதாக மருமகள் அவரிடம் சொல்ல, நினைவு சற்றே இருந்த நிலையில் மருமகளின் கையை அழுத்தி மனநிறைவைத் தெரிவித்தார்.

அவர் சமீப காலமாக வெவ்வேறு நிலையில் முற்றுப்பெறாமல் இருந்த புத்தகங்களை எழுதி முடித்து பதிப்பாளரிடம் ஒப்படைப்பதில் கவனம் செலுத்தினார். விரைவில் அவை வெளியாகும் என்று நம்பலாம்.

ராமதுரையின் நீண்ட பயணத்தில் உதவிய அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி - அவரை ஊக்குவித்து கற்க உதவியவர்கள், வாய்ப்பளித்த பத்திரிகை ஆசிரியர்கள், அவருடன் பத்திரிகை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் பணியாற்றியவர்கள், புத்தகங்களைச் சிறப்பாக வெளியிட்ட கிழக்குப் பதிப்பகம் மற்றும் க்ரியா, வாசகர்கள், இறுதிவரை தொடர்பிலிருந்த நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்.
இக்க
- ராமதுரையின் குடும்பத்தினர்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இனியும் படைப்புகள் ராமதுரை அவர்கள் நினைவுகளை மனதில் தூண்டும் .எளிய தமிழில் இனி வானவியல் தொடர்பாக கட்டுரைகள் யார் தருவார் என்று ஒவ்வொரு தமிழனும் ஏங்குவதே ராமதுரை அவர்களின் புகழைக் கூறும்.

அய்யாவின் காலமான செய்தி ...மிகவும் கவலையளிக்கின்றது. அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

---------------------------------------------------
ராம துரை ஜெயமோகனுக்கு எழுதிய கடிதமும் ஜெயமோகனின் பதிலும் படிக்க

பாலைவனத்தில் நகரும் கற்கள் பற்றிய எனது கட்டுரை பற்றிக் குறிப்பிட்டு எனது எழுத்தைப் பாராட்டியிருந்தீர்கள். அதற்கு மிக்க நன்றி. தமிழில் அறிவியலை எளிதாக எழுத முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் 30 ஆண்டுக்காலமாக எழுதி வருகிறேன். 81 வயதாகிறது. என் ஆர்வம் தான் எனக்கு தெம்பை அளித்து வருகிறது.

இலக்கியத்துக்கும் எனக்கும் அதிக தூரம். பயணக் கட்டுரைகள் பிடிக்கும். சில ஆண்டுகளுக்கு முன்னர் தாங்கள் நண்பர்களுடன் சமணக் கோயில்களுக்கு சென்றது பற்றிய கட்டுரைகளை மிக ஆர்வத்துடன் படித்தது நினைவிருக்கிறது. பயணக் கட்டுரைகள் எழுதுவது மிகக் கடினம். நிறையக் குறிப்புகள் தேவை. நினைவாற்றல் தேவை.

ராமதுரை
--------------
நான் மிகவிரும்பிப் படிக்கும் அறிவியல் எழுத்தாளர் நீங்கள். அறிவியலைக் கொண்டே சுவாரசியத்தை உருவாக்கமுடியும் என நம்புவதனாலும் உங்கள் எல்லைகளை தெளிவாக உணர்ந்திருப்பதனாலும் உங்கள் எழுத்து மிகவும் நம்பகமானதாக உள்ளது. அனேகமாக வாரம் ஒருமுறை உங்கள் இணையதளத்தை வாசித்துவிடுவேன்

அவை அறிவியல்செய்திகள் என்பதற்கும் மேலாக எனக்கு மனிதனைப்பற்றிய அடிப்படையான எண்ணங்கலை உருவாக்குபவையாகவும் இன்னொருபக்கம் என்னுள் உள்ள சாகசக்காரனை கனவுகாண வைப்பவையாகவும் உள்ளன. புனைவுஎழுத்தாள்னாக இது எனக்கு மிகமுக்கியமானது

சமீபத்தில் இரு கட்டுரைகளை அவ்வாறு வாசித்தேன் எரிமலை வாய்க்குள் இறங்கி சாதனை புரிந்தவர் முக்கியமான கட்டுரை. நேரடியான தமிழில் ஆச்சரியமூட்டும் தகவல்கள்

இன்னொன்று பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்

இரண்டுகட்டுரைகளுமே கற்பனையைத் தூண்டின. மனிதன் எப்போதும் தன் எல்லைகளை வெல்லவே முயன்றுகொண்டிருக்கிறான் என்பார்கள். சாகசம் ஆராய்ச்சி கற்பனை எல்லாமே தன் முகங்கள்தான் என எண்ணிக்கொண்டேன்

ஜெ
------------------
நகரும் கற்கள்


என் ராமதுரை எழுதும் அறிவியல் கட்டுரைகளை அவ்வப்போது வாசிப்பதுண்டு. அறிவியலை அறிமுகம் செய்வதற்குரிய நேரடியான, சுருக்கமான , புறவயமான மொழி. தகவல்களாலேயே சுவாரசியத்தை உருவாக்கக்கூடிய திறன்.

பாலைவனத்தில் கற்கள் நகர்வது பற்றிய இந்தக்கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது. அந்தத் தகவல்கள் மட்டும் அல்ல, அந்த நிலப்பரப்பு. இந்த விளக்கமெல்லாம் மானுட மனதில் உதிக்காத பதினான்காம் நூற்றாண்டின் செவ்விந்தியர்கள் அந்த நிகழ்வை எப்படிப்புரிந்துகொண்டிருப்பார்கள் என நினைத்தேன். மனம் பரவசம் அடைந்தது

ஜெ

எழுதியவர் : (21-Oct-18, 9:35 pm)
பார்வை : 33

மேலே