இந்திய வரலாற்றில் இருண்ட காலம் ஆகஸ்ட் 26 2016

எது மனிதம் என்பது தெரியாமலே உலகிற்கே கலாச்சாரத்தையும் வாழ்க்கை பண்பையும் கற்றுகொடுத்தோம். மனிதத்தை கற்றுக்கொடுத்த நாம் நம்மை அறியாமலே அதை சிறிது சிறிதாக சிதைத்துக் கொண்டிருக்கிறோம். மனிதம் என்பது என்ன ? என்ற கேள்விக்கு விடை தெரியாத பூமியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறாம் என்ற கசப்பான உண்மையை தாங்கிக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம். துயரத்தில் தோள் கொடுக்காவிட்டாலும் அதை பெரிதாக்கி சக மனிதனை மனதளவிலும் உடலளவிலும் துன்புறச் செய்து கொண்டிருக்கிறோம்.

உலகம் தோன்றிய நாள் முதல் இந்தநாள் வரை தனது அதிகாரத்தை ஆதிக்கம் செய்து லட்சக்கணக்கான உயிர்களை கொன்று குவித்த கொடுங்கோல் மன்னர்கள் கூட செய்யத் துணியாத செயலை உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நடக்கும் நம் நாட்டில் அரங்கேற்றி உலகையே நம்மை அச்சத்துடன் திரும்பி பார்க்க வைத்திருக்கின்றோம்.

உலகிற்கு வாழ்வியலை தந்த வள்ளுவன் பிறந்த மண்ணில் நடைபெற்ற இந்த செயல் மண்ணில் மனிதம் மறைந்து விட்டதோ என்ற என்னத்தை நம் மனதில் உருவாக்கி விட்டது.பணமில்லை என்ற காரணத்திற்காக இறந்த பெண்மணியின் உடலை (ஆன்மாவை அமைதியாக்க) அடக்கம் செய்ய வாகனமின்றி .வாழ்க்கைத் துணையை இழந்த கணவனே வழித்துணை ஏதுமின்றி பல மைல் தூரம் தோளிலே சுமந்து சென்று அடக்கம் செய்த நிகழ்வு நமது நாட்டிலே நடந்துள்ளது.. இது இழிவான மிகக் கொடூரமான செயல் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. உலகமே வியந்து பார்க்கும் பரந்து விரிந்த பாரதத்தில் பணமில்லா பாமர மனிதன் வாழமுடியாது என்ற எண்ணத்தை உலகிற்கு உணர்த்தி இருக்கிறோமே என்று உள்ளம் பதறுகின்றது.

உலகெங்கிலும் இல்லாத அளவிற்கு பெண்ணை தெய்வமாக பூஜிக்கும் நமது பாரத பூமியில் இந்த செயல் நடைபெற்றதற்கான காரணம் எதுவாக இருந்தாலும் மன்னிக்க முடியாத மிக இழிவான செயல் என்பது மனசாட்சி உள்ள எந்த ஒரு மனிதனும் மறுக்க முடியாத உண்மை. இந்த ஆண்டில் நடந்த இந்த செயல் இனி வருங்காலங்களில் நடக்காவண்ணம் நம்மை நாமே திருத்திக் கொள்வோம்.

இறைவனைக் கூட நம் உள்ளம் மறக்கட்டும் ஆனால் இரக்கத்தை மறக்காத உள்ளத்தை வளர்க்க உறுதி ஏற்போம்.

எழுதியவர் : கருப்பசாமி (21-Oct-18, 10:14 pm)
சேர்த்தது : ஆர் கருப்பசாமி
பார்வை : 141

மேலே