‘நானும்’ இயக்கம், ------------எல்லைகள்---------------படித்ததை பகிர்கிறேன் -------------சிந்தனைக்களம் ---விவாதக்களம்
மீடூ இயக்கம் துவங்கியது எங்கு ?
தன் அதிகாரத்தை ,வயதை,பெண்களின் இயலாமையை உபயொக்கித்து பாலியல் மீறல்களில் ஈடுபடுபடும் ஆண்களைப் பற்றி தைரியமாக வெளியே பேச சமூகம் தரும் தைரியம்தானே மிடூ ? பெண் அத்துமீறல்களை வெளியே சொல்லுவதை சமூகம் கேவலமாக பார்ப்பதை தவிர்த்து தைரியம் தரும் இயக்கம்தானே இது ?
மிக அவசியமான இயக்கம் ,பெண்கள் வேலைக்காக வெளியே வரும் இத்தலைமுறையில் அவசியத்தேவை .
ஆனால் இந்தியாவில் ஒரு ஆண் பெண்ணிடம் எனக்கு உன்னை உடலாக பிடித்திருக்கிறது என்று சொன்னாலே அதை மிடூவாக்கி விடுகிறார்கள் , ஒரு இந்திய ஆண் பெண்ணிடம் உடல்ரீதியான மீறலில் ஈடுபடாமல் ‘எனக்கு தேவை’ என சொன்னாலே அது பாலியல் மீறல் ஆகிவிடுமா ?
ஆண் பெண்ணிடம் உணர்த்தித்தானே ஆகவேண்டும் ? அது அடிப்படை இச்சை அல்லவா ?
அதை அப்பெண் வெளியாக்குவாள் என்றால் அதை ஒத்துக்கொள்ளும் மனநிலையும் இருக்குமாயின் ஒரு ஆண் கேட்பதில் என்ன பிழை ? பெண் முதலடி எடுத்துவைக்காத சமூகத்தில் ஆண் எப்படித்துவங்குவது ?
இதுவும் சமூகம் முன்னேறிப்போவதன் அடையாளம்தான் என எண்ணுகிறேன் .
இப்படிக்கு
அ
[நானில்லை …]
---------------------------------------------------
1984ல் நாங்கள் காசர்கோட்டில் தொழிற்சங்கப் பணி நிமித்தமாக ஒரு மிகமுதிய தொலைபேசி ஊழியையைச் சந்திக்கச் சென்றோம். அவருக்கு 80 வயது. அவர் தொலைபேசி ஊழியையாகப் பணியாற்றிய காலகட்டத்தைப் பற்றிச் சொல்லும்போது எந்த உணர்ச்சியுமில்லாமல் சொன்னார், அன்று உயரதிகாரிகளின் பாலியல் அடிமையாக இருந்தால் மட்டுமே அவ்வேலையைச் செய்யமுடியும் என்று. அவர் ஆங்கில இந்தியப்பெண். அவர்கள் மட்டுமே அன்று அவ்வேலைக்கு வந்தனர், அவர்களின் குடும்ப அமைப்பால் அவர்களுக்கு வேறுவழியிருக்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு குடும்பத்தொழில் இல்லை, குடும்பப் பாதுகாப்பும் இல்லை
அப்போதுதான் தோழர் சொன்னார், இந்தியத் தொழிற்சங்கத்தின் முக்கியமான சாதனை வேலைசெய்யும் பெண்கள் மீதான பாலியல் ஆதிக்கத்தை அழித்தது என. ஏ.கே.கோபாலனின் தன்வரலாற்றில் [கொடுங்காற்றின்றே மாற்றொலி] அவர் நடத்திய போராட்டங்களில் பெரும்பாலானவை ‘கர்ப்பசத்யாக்கிரங்கள்’ என்பதைக் காணலாம். இடதுசாரிகளின் முதன்மையான போராட்ட வழிமுறை அது. தொழில்முதலாளிகளாலும் நிலவுடைமையாளர்களாலும் கருவுற்ற பெண்களுக்காக அவர்களைப் பயன்படுத்திக்கொண்டவர்களின் வீட்டு முற்றத்தில் அமர்ந்து செய்யும் சத்யாக்கிரகம் அது. அவர்களை அம்பலப்படுத்தி, நாணச்செய்வது. கிட்டத்தட்ட இன்றைய மீடூவேதான்
அதிகாரம் இருக்குமிடத்தில் எல்லாம் பாலியல்சுரண்டல் இருக்கும். இன்றுகூட பொதுவெளிக்கு வந்துவிட்ட ஒரு பெண் மாட்டேன் என்று சொல்லவே முடியாத ஆளுமைகள் சிலர் உள்ளனர். அதிகாரம் என்பது மறைமுகமாக இதையும் உள்ளடக்கியதுதான். அரசர்களின் காலகட்டத்தில் இது இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஜனநாயகத்தில் கொஞ்சம் மறைமுகமானதாக மாறியது. தனிமனித உரிமை மேலும் மேலும் பேசப்படும் இன்றைய சூழலில் அது பெண்களிடமிருந்து எதிர்ப்பைச் சந்திக்கிறது. அதை நாம் மூடிமறைக்கக்வே விரும்புகிறோம். இன்றும் பழைய மனநிலையில் வாழ்பவர்களுக்கு அது அதிர்ச்சியாக உள்ளது, தங்கள் இயல்பான உரிமை பறிக்கப்படுபவர்கள் போல் உணர்கிறார்கள்.
இன்றைய சூழலில் அதிகாரத்தை பாலியல் ஆதிக்கத்துக்காகப் பயன்படுத்தும்போது அதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள். உலகமெங்கும் பெரும்பாலும் எல்லா துறைகளிலும் அதிகாரம் முழுக்க ஆண்களிடம்தான் உள்ளது. அதேசமயம் பெண்கள் ஏதேனும் ஓர் ஆணை அண்டி இல்லங்களுக்குள் வாழ்வதற்குப் பதிலாக பொதுவெளிக்கு வந்து தங்கள் இடத்துக்காகப் போரிடும் நிலை உலகமெங்கும் உருவாகிவிட்டிருக்கிறது. ஆகவே இன்று இது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
நேற்று தொழிற்சங்கம் என்ன செய்ததோ அதையே இன்று இவ்வியக்கமும் செய்கிறது. வலுவான தொழிற்சங்கம் இல்லாத பல துறைகளில் இன்று பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. அவர்களுக்காக உருவாகி வந்த ஓர் இயக்கம் இது. விக்கிப்பீடியாவில் மிக விரிவாக இதைப்பற்றிப் பேசப்பட்டுள்ளது. இங்கே இதைப்பற்றி ஏதோ புத்தம்புதிதாகக் கேள்விப்படுவதுபோல் எழுப்பப்படும் எல்லா வினாக்களும் விரிவாக அதிலேயே விவாதிக்கப்பட்டுள்ளன. உண்மையில் இங்கே பேசுபவர்கள் விக்கியைக்கூட சரியாகப் படிப்பதில்லையோ என்ற ஐயத்தால் அதிலுள்ளவற்றையே சுட்டிக்காட்டுகிறேன் Me Too movement – Wikipedia
ஜெ
--------------------------------