‘நானும்’ இயக்கம், ------------எல்லைகள்-----2-----------தொடர்ச்சி ------------படித்ததை பகிர்கிறேன் -------------சிந்தனைக்களம் ---விவாதக்களம்

2017ல் அமெரிக்க திரைத்தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் [Harvey Weinstein] என்பவருக்கு எதிராக அவரால் பாதிக்கப்பட்ட எண்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் குற்றம்சாட்டினர். கற்பழிப்பு, மிரட்டல், துரத்துதல் என பல குற்றங்கள் இவர்மேல் சுமத்தப்பட்டன.ஹார்வி வெய்ன்ஸ்டீன் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குள்ளான வெய்ன்ஸ்டீன் மீது வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து அமெரிக்க நடிகையான அலிஸா மிலானோ [Alyssa Milano] என்பவர் #metoo என்னும் இணைப்புச் சொல்லுடன் அனைத்துப்பெண்களும் தங்கள் அனுபவங்களைப் பொதுவெளியில் முன்வைக்கவேண்டும் என்று கோரி ஓர் இயக்கத்தை ஆரம்பித்தார். மிக விரைவிலேயே அது உலகமெங்கும் பரவி ஓர் அலையென ஆகியது. இதற்குமுன்னர் 2006ல் இச்சொல்லாட்சியை பெண்கள் ஒருங்கிணைவதற்கான குறிச்சொல்லாக டரானா பர்க் [Tarana Burke] என்னும் சமூகப்பணியாளர் பயன்படுத்தியிருந்தார்

#metoo இயக்கம் பெண்களுக்கு எதிரான அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான செயல்திட்டம் கொண்டது அல்ல. பெண்களை உணர்ச்சிகரமாக பாதிக்கும் அனைத்து விஷயங்களையும் பேசும்பொருட்டு உருவானதும் அல்ல. கல்வி மற்றும் தொழில் அமைப்புகளில் ஈடுபடும் பெண்களின் மீதான பாலியல் சார்ந்த ஆதிக்கம், சுரண்டல், சீண்டல் ஆகியவற்றுக்கு எதிராக உலகளாவ ஓரு விழிப்புணர்ச்சியை உருவாக்கும் பொருட்டு உருவான இயக்கம் இது. இதன் நோக்கம் சட்டபூர்வமான நடவடிக்கை அல்ல. அது இயலாததாக உள்ள சூழல்களை கவனப்படுத்துவதே இதன் நோக்கம். இது இப்பிரச்சினை நமது சமூக மனசாட்சி நம்பிக்கொண்டிருப்பதைப்போல அத்தனை எளியது அல்ல,மிகப்பிரம்மாண்டமானது என்று காட்டுவதையே இலக்காகக் கொண்டுள்ளது. இது ஒரு கவன ஈர்ப்பு மட்டுமே.

ஆகவே இவ்வியக்கம் பெண்கள் வீட்டிலோ, உறவுகளிலோ அடையும் துன்பங்களை கருத்தில்கொள்ளவில்லை என பொருளில்லை. இது பல்வேறு வகைகளில் ஒடுக்கப்படும் பெண்களின் பிரச்சினைகளை பேசவில்லை என்று பொருளில்லை. இது ஒரு குறிப்பிட்ட விஷயத்தை உலகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரும்பொருட்டு, குறிப்பிட்ட இலக்குடன், ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். இதன் செயற்களம் கல்வி –தொழில் தளங்களிலுள்ள பாலியலாதிக்கத்தை சுட்டுவது மட்டுமே. ஆகவே இவ்வியக்கம் உருவானதுமே இவர்கள் ஏன் அதைப்பேசவில்லை, ஏன் இதைப்பேசவில்லை என்றெல்லாம் கேட்பதைப்போன்ற அபத்தம் வேறில்லை. இப்பிரச்சினையுடன் சர்வதேச அரசியல், சமூகக்கட்டமைப்பு, அறுதிப்புரட்சி போன்றவற்றை இணைத்துப்பேச ஆரம்பிப்பதெல்லாம் இதை மழுங்கடிக்கச்செய்யப்படும் மோசடிகள் மட்டுமே. இது உயர்குடிகளின் பேச்சு என்பது அறிவின்மை, எல்லா எதிர்ப்பும் எதிர்க்கும் ஆற்றல்கொண்ட தரப்பினரிடமிருந்தே உருவாகி வரும்.

இந்தியாவில் இவ்வியக்கம் ரயா சர்க்கார் என்னும் முன்னாள் இந்திய மாணவியால் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியக் கல்விநிலையங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல்சுரண்டல்வாதிகளாக அறியப்பட்டவர்களின் பெயர்களைச் சுட்டியது அது. எம்.எஸ்.எஸ் பாண்டியன் போன்றவர்களின் பெயர்கள் அதிலிருந்தன. அந்த அலையே இன்று ஊடகங்களை நோக்கி வந்துள்ளது. நாம் கண்டும் காணாமலும் கடந்துசெல்லும் ஒரு சமூகநிகழ்வைச் சுட்டிக்காட்டுவதே இதன் நோக்கம். அதில் பெருவெற்றியை இது அடைந்துள்ளது. அப்பிரச்சினையை நாடே பேசவைக்கிறது. எம்.ஜே.அக்பரின் ராஜினாமா அவ்வகையில் ஒரு பெரிய தொடக்கம்.

இவ்வியக்கம் இப்போது ஏன் ஆரம்பித்தது, இத்தனைநாள் இவர்கள் ஏன் பேசாமலிருந்தார்கள், இப்போது மட்டும் ஏன் பேசுகிறார்கள் போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் பலமுறை பதில்கள் சொல்லப்பட்டு இணையத்தில் இறைந்து கிடக்கின்றன. ஆனாலும் இதை மீண்டும் மீண்டும் இங்கே பேசிக்கொண்டிருக்கிறார்கள். பெய்ஜிங்கில் 1995ல் நடந்த நான்காவது உலகப்பெண்கள் மாநாட்டுக்குப் பின்னர்தான் மெல்ல மெல்ல பெண்களுக்கான பொதுவெளி உரிமைகளை, பணியிடப் பாதுகாப்பை அரசுகள் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணமே உருவாகிறது. அதற்கான போராட்டங்கள் நடந்து இருபதாண்டுகளுக்குப்பின்னரே பெண்களுக்கான தனிச்சட்டங்களும் , கண்காணிப்பு அமைப்புகளும் உருவாகி வந்தன. இன்றுதான் இவற்றைப் பேசி நீதிகேட்க ஓர் அமைப்பு பெண்களுக்கு உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை டெல்லி நிர்பயா பாலியல்வன்கொடுமை வழக்குக்குப் பின்னரே சட்டங்கள் வலுவாக உருவாயின. பெண்கள் நீதியை எதிர்பார்க்கமுடியும் என்ற நிலை உருவானது. அனைத்துக்கும் மேலாக இணையம் மூலம் உலகம் முழுக்க உள்ள பெண்கள் ஒற்றைக் கோரிக்கையுடன் ஒருங்கிணைய முடிகிறது. அவர்கள் தங்களை முகமறியாமல் வெளிப்படுத்தவும் வாய்ப்புள்ளது. சட்டமும் ஊடகமும் அளிக்கும் இவ்வாய்ப்புகள் வழியாகவே இவ்வியக்கம் உருவாகிறது, நேற்று இவ்வாய்ப்புகள் ஏதும் இல்லை

ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் இன்னமும் பாலியல்சார்ந்த பலவகையான பண்பாட்டுச்சிக்கல்கள் உள்ளன. இங்கே இந்த இயக்கம் அதன் ஆரம்பநிலை கவன ஈர்ப்புக்குப்பின் சரியாக வழிகாட்டாவிட்டால் பிழையாகப் போக வாய்ப்புகள் மிகுதி. அதைத்தான் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன்

ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கு முன் ஜெயகாந்தன் ஒரு கதையில் எழுதினார். ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் நான் உன்னை விரும்புகிறேன் என்று சொல்வதோ, அதைத்தெரிவித்து ஒரு கடிதம் அளிப்பதோ அவனுடைய உரிமை. அதை அந்தப்பெண் ஏற்கலாம், மறுக்கலாம். மறுத்தால் அவன் அதை மேலும் வற்புறுத்தினாலோ துன்புறுத்தினாலோதான் அது குற்றம். ஒருவன் தன் விருப்பத்தைத் தெரிவிப்பதனாலேயே அவனை குற்றம்சாட்டி, அக்கடிதத்தை தன் குடும்பத்தினரிடமோ அலுவலக மேலாளரிடமோ காட்டி அவனை அவமதிக்கும் பெண் நாகரீகமற்றவள். நாகரீகம் என்பது இன்னொருவரின் இயல்பான உணர்வுகளைப் புரிந்துகொள்வது. அந்த புரிதலும் நிமிர்வும் பெண்களுக்குத் தேவை.

ஜெயகாந்தன் எழுதி அரைநூற்றாண்டுக்குப்பின்னரும் இன்றுகூட காதல்கடிதத்துடன் கதறியழுதபடி புகார்செய்ய ஓடுபவர்களே நம்மில் பெரும்பாலான பெண்கள். ஒருவன் காதலைத் தெரிவித்தான் என்றாலே அவனை ஒழுக்கமற்றவன் என எண்ணி தண்டிக்கப்பாய்பவர்கள் நம் மூத்த தலைமுறையினர். நிலைமை பெரும்பாலும் மாறவில்லை.

இந்நிலையில் ஒருவன் தன்னிடம் விருப்பத்தைத் தெரிவித்தாலே அவனை காமாந்தகன் என எண்ணி metoo வில் சேர்த்து அவமானப்படுத்த நம்மூர் பாதிவெந்த பெண்டிர் முயல்வார்கள் என்றால் என்ன நடக்குமென்றே தெரியவில்லை. ஒருவன் ஒருத்தியிடம் தன் விழைவைத் தெரிவிப்பது என்பது மிக இயல்பான ஒரு செயல். பெண்கள் பெரும்பாலும் தங்கள் விழைவைத் தெரிவிப்பதில்லை. அதை தங்களைப்புரிந்துகொண்டு ஆண்களே தெரிவிக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஆண்கள் பிழையாகப் புரிந்துகொள்வதும் அடிக்கடி நிகழ்வதுதான்.

நாகரீகமான பெண் அப்படி ஒரு ஆண் பிழையாகப்புரிந்துகொண்டு தன் விருப்பை தெரிவித்தான் என்றால் அதை வைத்துக்கொண்டு ‘சீன்’ போடமாட்டாள். தன்னுடைய முக்கியத்துவத்தை, தன் ‘தூய்மையை’ ‘அணுகமுடியாத தன்மையை’ வெளிப்படுத்தும் வாய்ப்பாக அதைப் பயன்படுத்திக்கொள்ள மாட்டாள். உண்மையாகவே பிடிக்கவில்லை என்றால் கறாராக, தெளிவாக அதைத் தெரிவித்துவிட்டு சிறிதுகாலத்துக்கு முழுமையான விலக்கத்தை கடைப்பிடிப்பாள்.

ஆனால் நான் என் அலுவலக வாழ்க்கையில் கண்ட அளவில் பெரும்பாலான பெண்களுக்கு அந்த முதிர்ச்சி இல்லை. அந்த விருப்பத்தில் அவர்களுக்கும் உடன்பாடு என்றால் வெளியே தெரியாது. இல்லை என்றால் அதை அவர்கள் கொண்டாடித்தீர்த்துவிடுவார்கள். வீட்டுக்குச்சென்று சொல்லி தந்தையையுன் உடன்பிறந்தாரையும் கூட்டிவருவார்கள். மேலதிகாரியிடம் முறையிடுவார்கள். அழுது ஆர்ப்பாட்டம் செய்வார்கள். நானே சிலரை அதட்டி துரத்திவிட்டிருக்கிறேன்.

ஒருவன் ஒரு பெண்மேல் விழைவை வெளிப்படுத்துவது சீண்டலோ அத்துமீறலோ அல்ல. எளிய மானுடச்செயல்பாடு. அதை இயல்பாக எதிர்கொள்ள அந்தப்பெண்ணுக்குத் தெரியவேண்டும். அவன் அவளை தொடர்ந்து தொந்தரவுசெய்தால், அவள் உளநிலையை சீண்டினால் அது கண்டிக்கவேண்டிய பிழை. அதிகாரத்தையோ செல்வத்தையோ காட்டி மிரட்டினால் அது குற்றம். அது தண்டிக்கப்படவேண்டும். இந்த வேறுபாட்டை நம் பெண்களுக்கு விவரமான பெண்கள் சொல்லிக்கொடுக்கவேண்டும்.

ஜெ

எழுதியவர் : (22-Oct-18, 7:47 am)
பார்வை : 30

மேலே