நாவுக்கு மெய்யே அணி நல் உண்டிக்கு நெய்யே அணி நெடிது – அணியறுபது 28
நேரிசை வெண்பா
பூவுக் கணிமணமே; பொன்னுக் கணிஒளியே;
பாவுக் கணிபொருளின் பாரிப்பே; - நாவுக்கு
மெய்யே அணியென்றும் மேவியநல் உண்டிக்கு
நெய்யே அணியாம் நெடிது. 28
- அணியறுபது, கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்
பொருளுரை:
பூவுக்கு மணமே அழகு; பொன்னுக்கு ஒளியே அழகு; பாவுக்கு இனிய பொருள் நிறைவே அழகு; நாவுக்கு உண்மை பேசுதலே அழகு; உண்ணும் உணவுக்கு நெய்யே அழகு.
மணத்தால் மலர் மாண்புறுகிறது; ஒளியால் பொன் உயர்வுறுகிறது; பொருள் வளத்தால் கவி கவினுறுகிறது. சத்தியத்தால் நாக்கு நலம் பெறுகிறது. நெய்யால் உணவு சுவை மிகுகிறது.
எவ்வழியும் சத்தியமே பேசிவந்தால் மலர்மாலை அணியலாம்; பொன் அணி பூணலாம்: கவியின் சுவைகளை நுகரலாம்; நெய்கலந்த சுவை உணவுகளை உண்ணலாம். இந்த உண்மைகளை ஓர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும்
பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களுக்கு அதன் பளபளப்பான ஒளியே அழகு தருகிறது.
.
பா - பாட்டு. மொழி வழியே எண்ணங்கள் பாய்ந்து பரந்து ஒளி வீசி வருதலால் பாடல், பாட்டு, பா என்னும் பெயர் பெற்றுள்ளது. சிறந்த கருத்துக்கள் உள்ளே நிறைந்து கவியும் கவினாக வெளியே அமையின் அந்தப் பாடல் அதிசய ஆடல்கள் புரிந்து யாண்டும் துதிகொண்டு துலங்கி நிற்கும்.
சொல்லும் பொருளும் சுவை சுரந்து உள்ளே நல்ல உறுதி உண்மைகள் நிறைந்து ஒளிமிகுந்து வரும்பொழுது அந்தப் பாடல் அதிசயமான பேரின்பமாம்.
தொடையின் பயனே! நறைபழுத்த
துறைத்திந் தமிழின் ஒழுகுநறும்
சுவையே! - மீனுட்சியம்மை பிள்ளைத்தமிழ்
பாடலின் பயனே! தமிழின் சுவையே! என்று மீனாட்சி அம்மையை இவ்வாறு அன்பு மீதுார்ந்து இன்ப நிலை தெரியத் துதித்திருக்கிறார்,
ஒவ்வொரு மனிதருக்கும் நாவின் பயனே உண்பது மட்டுமல்ல; உண்மை பேசுவதுதான் உண்மையான அழகாகும்.
இதனை வள்ளுவர் கீழேயுள்ள பாடலில்,
’புறத்தில் உள்ள இருளை நீக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு அகத்து இருள் நீக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்’ என்று உண்மை பேசுதலே நாவின் பயனென்கிறார்..
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. 299 வாய்மை
மேவியநல் உண்டிக்கு நெய்யே அணி: தினமும் மதிய உணவில் நெய்யைச் சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். நெய் வயிற்றில் உள்ள அமிலத் தன்மையைச் சமன் செய்து ஜீரண சக்தியைத் தூண்டி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடல் பருமனாவதைத் தடுக்கிறது.
நெய்யை நன்கு உருக்கி சுடுசாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்; மலச்சிக்கலைப் போக்கும்.
வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும். குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச் சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூண்டி நீண்ட ஆயுளையும் கொடுக்கும்.