பெடைச்சேவல் வன்கழுகு குத்தும் முடைச்சாகாடு அச்சு இற்றுழி – நாலடியார் 48

நேரிசை வெண்பா

பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும்
கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் - மண்டிப்
பெடைச்சேவல் வன்கழுகு குத்தும்
முடைச்சாகா டச்சிற் றுழி. 48

தூய்தன்மை, நாலடியார்

பொருளுரை:

பெண்ணும் ஆணுமான வலிய கழுகுகள் நெருங்கி உறுப்புக்களைப் புரட்டிக் குத்துகின்ற முடைநாற்றம் உடைய இவ்வுடம்பாகிய வண்டியை அவ் வண்டிக்கு அச்சுப்போன்றதான உயிர் முறிந்துவிட்டதைக் கண்ட போதும், உடம்பாகிய பண்டத்தின் இயல்பை அறியாதவராய் அவ்வுடம்பின்மேல் அணியப்படும் சந்தனமும் மாலையுங் கருதி அவ்வுடம்பினமேற் பற்றுவைத் தொழுகுகின்றவர் அறிந்திலர் போலும்!

கருத்து:

செயற்கை அழகுகளால் இவ்வுடம்பைத் தூயதாகக் கருதிக் கொள்ளாலாகாது.

விளக்கம்:

பண்டம் என்றார், இழிவு கருதி, படுசாந்து - அணிந்த சாந்து.

‘முடைச் சாகாட்டை அதன் அச்சு இற்றபோது கண்டிலர் கொல்' என்று கொள்க.

அப்போது அதனைக் கண்டால் கழுகுகள் அதனைப் புரட்டிக் குத்தும் இயல்பு தெரியும் என்பது கருத்து.

சாகாடு - வண்டி. உடம்பை வண்டி யென்றமையின் அதன் இயக்கத்துக்குக் காரணமான அச்சு உயிராயிற்று.

‘மண்டிப் பேர்த்திட்டுக் குத்தும் முடைச் சாகாடு,' என்று கூட்டுக. ‘குத்தல், என்னும் பாடம் கட்டுரைச் சுவை உடையதன்று.

எழுதியவர் : (22-Oct-18, 1:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே