அம்மா

~~~~*அம்மா*~~~~~~~
🙎♀🙎♀🙎♀🙎♀🙎♀🙎♀🙎♀🙎♀🙎♀
நீ
கதறித் துடித்த சத்தம் கேட்டே
நான்
காலடி வைத்தேன் பூமியிலே
உன்
கண்ணீர் முகத்தைப் பார்த்ததுமே
நான்
கதறி விட்டேன் உண்மையிலே..
என்
அழுகை பார்த்துச் சிரித்தாயே
அன்று மட்டும் ஏனம்மா
உன்
அரவணைப்பாலே
அழுகை மறந்தேன்
அன்று முதல் தானம்மா..
கருவறை நினைவை மறக்காமல்
கலங்கி நானும் அழும்போது
நீ
கட்டி வைத்த சேலைமுடி தொட்டில் என்னைத் தூங்க வைக்கும்
கட்டிலில் நான் தூங்கி விட்டால்
கவனமாக என்னருகே
அணைத்தபடி பிடித்திருக்கும்
உன்
கைகள் எனக்குக் கவசமம்மா
அட்டை போல ஒட்டிக்கொண்டு
அப்போது நான் குடித்ததெல்லாம்
உன் உதிரமென்று நானறிய
ஓராண்டு காலம் பிடித்திருக்கும்
எழுந்து நானும் நடந்து விட
எத்தனிக்கும் போது எல்லாம்
தடுக்கி நானும் விழுந்திடுவேன்
நீ
தரையை வந்து அடித்திடுவாய்
ஒரு பிடி சோறெனக்கு
ஊட்டி நீயும் முடிப்பதற்க்கு
இல்லாத வித்தை எல்லாம்
என் முன்னே செய்திடுவாய்
இரவு நேர உணவு என்றால்
இருட்டுக்கு நான் அழைக்கப்பட்டு
மதி பார்த்து வாய் பிளக்க அங்கே
உணவூட்டல் சதி நடக்கும்
கண்ணாடிப் பொருள் எதுவும்
என்
கையாலே உருட்டி விட்டால்
காக்காச்சி அப்பொருளை களவாட நம்பிடுவேன்..
அறியாத மொழியொன்றை
அன்று நான் பேசும்போது
இணையாக என்னோடு
இயல்பாகப் பேசினாயே
தரணி எல்லாம் அதுதானே
தாய்மொழியாய் இருக்கலாமோ...
உன்
கால்மீது படுத்துக்கிட்டு குளிப்பதிலும் ஒரு சுகம்
உன் கணுக்காலில் அமர்ந்து கொண்டு கழிப்பதுவும் ஒரு சுகம்..
உன்
சேலையதைச் சிறுநீரால் நனைப்பதுவும் ஒரு சுகம்
உன்
சாப்பாட்டை என் கையால் இறைப்பதிலும் ஒரு சுகம்..
கட்டிலினில் நீ அமர்ந்தால்
உன் கால்தானே என்தூரி
தொட்டிலினில் எனை தூங்க வைக்க நீ
தாலாட்டில் கைகாரி..
விரும்பிய பொருளேதும்
வேண்டுமென்று அடம்பிடித்தால்
வலிக்காமல் அடித்தாலும்
வலியுணர்வாய் மனதார...
அழுது புரண்டு நான்
ஆர்ப்பாட்டம் செய்திட்டால்
விற்று வந்த வியாபாரி
செத்ததாக கூறிடுவாய்
அழுகையதை மறந்து விட்டு
அதையும் நான் ஏற்றிடுவேன்..
தெருவில் யாரும் என்மீது
தீண்டிவிட நேர்ந்து விட்டால்
அம்மா உனை இராவணனாய்
அனுப்பி அங்கு பழிதீர்ப்பேன்...
உன்
இக்கத்தில் ஒர் இருக்கை
இருந்ததனாலே அங்கமர்ந்து
ஊர் முழுக்கச் சுற்றி வர
ஓட்டிடுவேன் வாகனமாய்...
ஒவ்வாமை வந்து உடலில் அண்டி
தும்மல் போட்டுநான் பயந்துவிட
நூறு என்று என் வயது சொல்லி
நோய்க் கிருமியை விரட்டிடுவாய்..
உன்னைப் பெற்ற அம்மா அன்று
உனக்கும் அதனைச் சொல்லலையா
அகவை அதுவும் குறைவு ஆக
ஆயுள் நிறைவும் நேர்ந்துவிட...
அன்னை நீயும் அமைதியானாய்
இன்று
என்னை நானே இழந்து விட்டேன்
கண்ணில் தூசி விழாமலே
கரித்துக் கொட்டுதே ஏனம்மா...
கண்ணாமூச்சு வாழ்க்கையிலே
என்
கண்ணை நீயும் கட்டி விட்டு
ஓடி ஒளிந்து கொண்டாயே
உன்னை
எங்கே என்று நான் தேட....
க.செல்வராசு..
💐💐💐💐💐💐💐💐💐