நிலவு ஒளிரும் வயலினிலே

நீல வானதியில் வெள்ளி ஓடமெனப்
பால்மதி அவன் பவனி வருகின்றான்...
அந்தரத்தே சுந்தரத் தாரகைகள் நடுவே
வந்துதித்த அவன் வண்மை தான் என்னே!

பளபளக்கும் இலைகளுடன்
வளம் நிறை வன மரங்கள்...
சிறகசைத்துச் சிறை மேவும்
சின்னஞ்சிறு புள்ளினங்கள்...

ஆந்தையொடு வெளவாலுமகமகிழ
சாந்தமுறு மானினமும் ஆநிரையும்
சரசரக்கும் சர்ப்பமதும் மரம்விட்டு
மரந்தாவு(ம்) மந்திகளும்
இரவிதனில் நிலவிவளை
இன்பமுற வாழ்த்தினவே!!

மெல்லிய காற்றில்
மெல்லியலாள் போலசைந்தே
தெள்ளிய நிலவொளியில்
திகழ்ந்தன நெற்கதிர்கள்...
கண்ணெட்டாக் ககனமதில்
கண் சிமிட்டும் விண்மீன்கள்...
கண்ணெடுக்க வொண்ணாமல்
தண்ணொளியில் தகதகக்கு(ம்) - நெல்
உண்ணு நீர் பாத்தியதில்
உண்மையாய்! வந்து காண்பீர்!!

சொல்லிட முடியாதிந்தச்
சோதிப் பரவுகையை
எல்லீரும் வாரீரோ
என்றும் போய்ப் பார்த்திடுவோம்
பார்த்து விட்டுப் பகர்ந்து நிற்போம்
ஏற்றம் மிகு - நிலவு ஒளிரும் வயலினிலே...
~தமிழ்க்கிழவி(1997)

இது தமிழ்க்கிழவியின் முதற்கவிதை:)

எழுதியவர் : தமிழ்க்கிழவி (25-Oct-18, 8:54 am)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 4267

மேலே