மூடி வீசியெறி
நிறைகுடங்களின் நித்திரையால் குறைகுடங்களின் குறிப்பெடுத்து வெறுங்குடங்கள் வெற்றுக்கூச்சல் போடும்.
நித்திரை கலைந்து நிமிர்ந்து நின்றால் குறிப்பழிந்து குடம் குறுக்குடைந்து குயவனிடம் செல்லும்.
கொள்ளளவு ஒன்றாயிருந்தும் குடம் நிறையவில்லை என குயவனிடம் கேட்டால் உருவாக்கியது நான் உருமாறியது நீ என்றான்.
அறிவு மழை அமுதென பொழிந்து ஆறாய் பெருக்கெடுத்து ஓடினாலும் அரைமாவளவு* கூட நிறையமாட்டாய்.
அடியில் துளையோயென ஆராயும் நீ தலைமேலுள்ள தவறைத் தட்டிக் கேட்க தயங்குவதேனோ?
சிவந்த மூடியிட்டு உன்னை மூடியுள்ளனர் முட்டாள் குடமே அம்மூடிக்குப் பெயரோ சமுகத்தில் சாதியாம்.
சிவந்திருப்பதால் அதை எண்ணி சிலிர்க்காதே சிறுகுடமே அது இரத்தக்கறை ; புனித இரத்தம் எனக் கொண்டாயோ அது அப்பாவி மனித இரத்தம்.
சாதிக்கொரு சங்கம் அந்நாளில் இன்று சாதிக்கொரு பக்கம் முகநூலில், அது பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் பின்நாளில்.
சாதித்த தலைவர்களையெல்லாம் சாதித் தலைவர்களாக்கி ; சாதித் தலைவர்களையெல்லாம் சாதிக்க தலைவராக்கினால் , சாதிக்கு உழைப்பவனால் சாதிக்க இயலாது.
சாட்டை எடுத்து நாட்டைத் திருத்த வேண்டுமென்று புலம்பாமல் ஓர் அடி முன்வந்து சாதி விடுத்து சமூகத்தைத் திருத்து.
சாதியென்ற மூடியிட்டு சமூகம் மூடப்பட்டிருப்பதால் பீதியடைய வேண்டாம் பிஞ்சு நெஞ்சமே.
சாதியெனும் மூடியணிந்து முட்டாளாய் இராமல் மூடி வீசியெறிந்து முன் வருவோம்.
அறிவு மழையில் ஆடி நிறைந்து அனைத்தும் அறிந்து நிறைகுடம் ஆவோம். அந்நீரை வெந்நீராக்கி பிறர் மூடி வீசியெறிவோம்.
"சாதியைப் போதிக்காமல் வரும் தலைமுறைக்காவது நீதியைப் போதிப்போம்".
*அரைமா - 1/40