என் பாதையில் பயணிப்பேன்

முக்கியத்துவம் தராதவர்களிடம் முட்டிக் கொண்டிராமல்
முன்னேறும் வழிகண்டு முன்சென்றிடுவேன்.

ஒதுக்க நினைப்பவர்களுடன் ஒட்டிக் கொண்டிராமல்
தனிப்படை ஒன்றமைத்து தலைவனாகி விடுவேன்.

நம்ப மறுப்பவர்களை நமைத்துக் கொண்டிராமல்
நடுத்தெருவாயினும் நல்வழியில் சென்றிடுவேன்.

புறம் பேசுபவர்களுக்கு புத்தி புகட்டிக் கொண்டிராமல்
புத்தன் வழியில் புது வரலாறு படைத்திடுவேன்.

செவிமடுக்காதவர்களிடம் உளறிக் கொட்டுவதை விடுத்து
செருப்பு தேயும்வரை உலகம் சுற்றிடுவேன்.

நச்சுப்பாம்புகளைப் பார்த்து பயந்து நடுங்குவதை விடுத்து
நல்ல நட்பைத் தேடி நாற்றிசையும் சென்றிடுவேன்.

நேரம் ஒதுக்காதவர்களை நினைத்து நேரம் கரைப்பதை விடுத்து
நற்றமிழ் நூல்கள் நான்கு படித்து பயன்பெறுவேன்.

கண்ணீர் துடைக்காதவர்களைக் கண்டு கவலையுறுவதை விடுத்து
கவிதைக்கவர்களைக் கருப்பொருளாக்கி கர்வம் கொண்டிருப்பேன்.

எழுதியவர் : ஏ.தினபாகர் (26-Oct-18, 10:10 am)
சேர்த்தது : தினபாகர்
பார்வை : 5988

மேலே